நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எவ்வித தீர்வையும் முன்வைக்கவில்லை.

மக்களின் எதிர்ப்பில் இருந்து பிரதமர், ஜனாதிபதியை பாதுகாத்துள்ளார். பிரச்சினைக்கு தீர்வின்றேல் மக்களுடன் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவோம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாட்டில் எவ்வித பிரச்சினையும் இல்லை ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள் என நினைத்துக்கொண்டு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பற்ற வகையில் உள்ளார்கள். நாட்டு மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரசசினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கின்றன.

உயிருக்கு உத்தரவாதமில்லாத எரிபொருள் வரிசை
எரிபொருள் வரிசையில் நிற்பவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை காணப்படுகிறது.வலுசக்தி அமைச்சர் டுவிட்டர் பக்கத்தில் எரிபொருள் கப்பல் தொடர்பில் செய்திகளை பதிவேற்றம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

எரிபொருள் வரிசையில் நிற்கும் மக்கள் முரண்பட்டுக்கொள்கிறார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது இறுதி தீர்வு என்ற குறுகிய நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு பிரதமர் செயற்படுகிறார்.

வங்குரோத்து நிலைமைய அடைந்துள்ள நாட்டிற்கு சர்வதே நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமா என்பது சந்தேகத்திற்குரியது. எரிபொருள் விநியோக கட்டமைப்பு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை நாட்டின் பிரதான பிரச்சினையாக உள்ளது.

பொறுப்பற்ற வகையில் செயற்படும் ஜனாதிபதி,பிரதமர்
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து துரிதகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் பொறுப்பற்ற வகையில் அவதானம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது.

நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடைமுறைக்கு பொருத்தமான எவ்வித திட்டத்தையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கவில்லை.

மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வீதிக்கிறங்குவோம்
பொருளாதார மீட்சி தொடர்பிலும், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் அவர் வழங்கிய வாக்குறுதி குறுகிய காலத்தில் பொய்யாக்கப்பட்டுள்ளது.மக்களின் எதிர்ப்பில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்துள்ளார்.

சமூக கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் தீர்வை பெற்றுக்கொடுக்காவிடின் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க ,நாங்களும் வீதிக்கிறங்குவோம் என்றார்.