என் நாடு பெண்களுக்கு பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 33 வயதில் ஐந்து குழந்தைகளின் தாயான நஜீரா நவுஷத் கேரளா முதல் நேபாள் வரை தனியாக லாரி ஓட்டுனர்களிடம் லிஃப்ட் கேட்டு பயணித்துள்ளார். ஆங்கிலத்தில் ஹிட்ச் ஹைகிங் (Hitchhiking) எனப்படும் தெரியாத நபர்களிடம் லிஃப்ட் கேட்டு இலவசமாக பயணிக்கும் போக்கை இந்த பெண் இந்தியாவில் தனியாக செய்துள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நவுஷத்துக்கு 19 வயதிலேயே திருமணமாகிவிட்டது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், திருமணத்திற்கு பின், ஓமனில் சென்று செட்டிலாகிவிட்டார். அவருக்கு அடுத்தடுத்து ஐந்து குழந்தைகளும் பிறந்தனர். ‘‘நான் சமூக வலைத்தளங்களில் நாஜி நவுஷி (naji noushi) எனும் பெயரில் இயங்கி வருகிறேன். நான் ஹவுஸ் வைஃப்தான். திருமணத்திற்கு முன் எனக்கு எந்தவித பயணம் சார்ந்த அனுபவமும் இல்லை.

18 வயது நிரம்பியதும் வீட்டில் திருமணம் பேசி முடிச்சிட்டாங்க. திருமணமான கையோடு குழந்தையும் பிறந்துவிட்டது. வீட்டில் பூட்டி பூட்டி வைத்து வளர்ந்த எனக்கு என் கணவர் தான் நம்பிக்கையும் தைரியமும் கொடுத்தார். அவரால் தான் என்னால் தனியாக பயணிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்பட்டதுன்னு சொல்லணும். எனக்கு சின்ன வயசில் இருந்தே பயணம் செய்யவும், வண்டி ஓட்டவும் பிடிக்கும்.

அதில் குறிப்பா தனியாக ஒரு இடத்திற்கு பயணம் செய்து, அதை வ்லாகி செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். சொல்லப்போனால் ட்ராவல் வ்லாகிங் என் ஃபேஷன். கொரோனாவிற்கு பின் தான் முதல் முறையாக இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். பின் லட்சத்தீவிற்கு சென்று அங்கிருக்கும் அனைத்து தீவுகளையும் பார்த்தேன். பின், கேரளாவிலிருந்து லடாக் வரை 13,000 கிமீ, 17 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்கள் கடந்து சென்றேன். இந்த பயணத்தை என் நெருங்கிய தோழியுடன் நானே கார் ஓட்டி சென்றேன்.

ஆனால் எனக்குள் ஏதோ ஒரு தேடல் இருந்தது. இந்த பயணங்கள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் இதனால் என்ன பயன் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதற்காகத் தான், ஒரு மெசேஜை இந்த உலகத்திற்கு சொல்ல விரும்பினேன். 50 நாட்கள் லிஃப்ட் கேட்டு பயணித்து கேரளாவில் இருந்து நேபாளில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தேன்.

பொதுவாக இந்தியாவில், லாரி டிரைவர்கள் ஆபத்தானவர்கள் என்ற பிம்பம் இருந்து வருகிறது. எல்லா துறைகளிலும் சில மோசமான நபர்கள் இருப்பது போல, சில லாரி ஓட்டுனர்கள் செய்யும் தவறினால், நாம் மொத்த லாரி ஓட்டுனர்களும் மோசமானவர்கள் எனக் கூற முடியாது. அதனால் தான் நான் குறிப்பாக என் பயணத்தை லாரி ஓட்டுனர்களுடன் மேற்கொண்டேன். இந்தியாவின் கேரளாவிலிருந்து நேபாள் வரை மக்களுடன் பயணித்ததில் அவர்களின் வேறுபட்ட கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் என்னை பிரமிக்க வைத்தது. இந்தியா பலதரப்பட்ட மக்களால், வெவ்வேறு மொழி, மதம், கலாச்சாரத்தால் உருவானது என இதுவரை புத்தகத்திலும் டிவியிலும் தான் பார்த்து அறிந்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக அதை என் கண்களால் பார்த்து அந்த வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்கும் போது உண்மையிலேயே உடலும் மனமும் சிலிர்த்தது.

இந்த பயணத்தை ஆரம்பிக்கும் முன்பே, நான் விமானம், ரயில், பேருந்தில் பயணிக்க கூடாது என்றும், ஹிட்ச் ஹைக்கிங் செய்து அதாவது முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் லிஃப்ட் கேட்டு பயணிக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். முதல் முறை லிஃப்ட் கேட்கும் போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. இதற்கு முன் இது போல நான் யாரிடமும் லிஃப்ட் கேட்டதில்லை. ஹைவேயில் நின்று லிஃப்ட் கேட்ட போது எனக்கு முன் முதலில் நின்றது ஒரு லாரிதான். அவர்கள் தான் என்னிடம் என்ன ஆச்சு, ஏன் தனியா நிக்குறீங்கனு கேட்டார்கள். நான் என்னுடைய பையை காட்டினேன்.

அதில் “Admire India, Women Can Travel” என்ற வாசகம் இருக்கும். பின், அவர்களிடம் நான் எதற்காக தனியாக பயணிக்கிறேன் எனும் விவரத்தை அவர்களுக்கு சொல்லியதுமே, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் என்னை பாதுகாப்பாக அழைத்துப் போவதாக கூறி எனக்கு லிஃப்ட் கொடுத்தார்கள்.இப்படியே 7-8 லாரிகள் மாறி மாறி சென்றேன். சில சமயம் ஹோட்டல்களில் தங்கி கொள்வேன். அந்த வசதி இல்லாத போது, லாரி ஓட்டுனர்கள், ஒரு சிறிய தாபாவில் தங்கி கொண்டு, என்னை லாரியிலேயே ஓய்வெடுக்கும்படி கூறினார்கள். நான் லாரிக்குள் இரண்டு நாட்கள் பாதுகாப்பாக தூங்கினேன். என்னுடன் பயணித்த லாரி ஓட்டுனர்கள் எல்லோருமே அன்பாக பேசி பழகினார்கள்.

அவர்கள் குடும்பத்தின் கதை, வழியில் அவர்கள் சந்திக்கும் வித்தியாசமான அனுபவங்கள் என பல புதிய செய்திகளை நான் இவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். அவர்களின் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசுவேன். ஒரு லாரி ஓட்டுனர் என்னை அவரின் வீட்டிற்கு அழைத்து அங்கு அவருடைய அம்மா, தங்கைகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஹரியானாவில் ஒரு சிறிய கிராமத்தில் அவரின் வீடு இருந்தது. அந்த வீட்டில் தங்கி அவர்களுடன் சேர்ந்து உணவை உண்டது எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்’’ என்றவர் தான் சந்தித்த திக் திக் தருணம் ஒன்றை பகிர்ந்தார்.

‘‘இந்த பயணத்தில் ஹைதராபாத்தில் இரவு இரண்டு மணிக்கு இறங்கினேன். அப்போது அந்த ஹைவேயில் தனியாகத்தான் நடந்து சென்றேன். சிலர் கொஞ்சம் வித்தியாசமாக பார்த்தாலும், யாரும் என்னிடம் தவறான முறையில் நடந்துகொள்ளவில்லை. இருந்தாலும் உள்ளூர ஒரு வித பயம் கவ்விக் கொண்டு தான் இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த பயணத்தை தொடர்ந்தேன். என்னுடைய இந்த தேடலில் நல்ல அனுபவங்கள் மட்டுமே கிடைத்ததால், எனக்குள் மிகப்பெரிய தைரியம் உருவானது. அது தான் என்னுடைய நேபாள் பயணத்தை எளிதாக்கியது. வீட்டில் இருந்து கிளம்பும் போது, என் பாதுகாப்பிற்காக கையில் ஒரு கத்தி மட்டும் எடுத்துச் சென்றேன்.

ஆனால் அதை ஒரு முறை கூட பயன்படுத்தும் நிலைமை ஏற்படவில்லை. என்னுடைய இந்த முழு பயணத்தையும் யுடியூபில் நாஜி நவுஷி என்ற பெயரில் பதிவு செய்து வருகிறேன். எவரெஸ்ட் மலையின் உச்சியில் சென்று, என் இந்தியா, பெண்களுக்கு பாதுகாப்பான நாடு தான் எனும் பலகையை ஏந்தி பிடித்த போது மிகப் பெரிய சாதனையை செய்து முடித்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த காலத்து பெண்கள் நன்றாக படிக்கிறார்கள், திறமைசாலியாக இருக்கிறார்கள். ஆனால் நான் பார்த்த அளவு அவர்களுக்கு மன தைரியம் மட்டும் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது.

பெண்கள் இப்போது கல்வியிலும், வேலையிலும் சாதித்து வருகிறார்கள். அடுத்தபடியாக தங்கள் வாழ்க்கையையும் மனபலத்துடனும் சந்திக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. பெண்களை நன்கு படிக்க வைக்கும் பெற்றோர்கள், படித்து முடித்து சில நாட்களிலேயே அவர்களுக்கு திருமணத்தை செய்து தங்கள் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் திருமணத்திற்கு பின், பெண்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளை, கஷ்டங்களை சந்திக்க தைரியம் இல்லாமல், தற்கொலை செய்துகொள்ளும் செய்திகளை நாம் பார்க்கிறோம்.

கல்வியுடன் மனோபலத்தையும் பெண்களுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். மிகவும் படித்த டாக்டர்கள், பொறியியல் பட்டதாரிகள் எல்லாம் நிறைய பணமும், அன்பான குடும்பமும் இருந்தும் பிரச்சனைகளை சந்திக்க தைரியம் இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் போது என் மனம் மிகவும் வலிக்கும். திருமணத்திற்கு பின்னும், குழந்தை பிறந்த பின்னும் கூட பெண்கள் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும், ஆசைகளையும் பின் தொடர வேண்டும்.

பெண்கள் முதலில் தன் மீது நம்பிக்கையும், அன்பும் வைக்க வேண்டும். நீங்கள் முதலில் உங்களை நேசிக்க ஆரம்பித்தால்தான் அடுத்து மற்றவர்களை நேசிக்க முடியும். நீங்கள் உங்களுக்காக எதிர்த்து நின்று சண்டை போட்டால்தான், அடுத்து எதிர்காலத்தில் உங்கள் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் போராட முடியும்” என பெண்களுக்கு ஒரு சிறிய அட்வைஸுடன் நஜிரா முடிக்கிறார்.

அடுத்து நேபாள், பூட்டான் போன்ற வட கிழக்கு நாடுகளுடன், நம் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கு காரில் சோலோ ட்ரைவ் போக வேண்டும் என்று நஜிரா திட்டமிட்டுள்ளார். இதற்கு 75 நாட்கள் ஆகும். அதற்கு கொஞ்சம் அதிகம் செலவாகும் என்பதால் ஸ்பான்ஷர்ஷிப் கிடைக்க காத்திருக்கிறார்.