கால மாறுபாட்டின் காரணமாக வறட்டு இருமல், மார்புச்சளி, பீனிசம், சுரம், ஆஸ்துமா, தலைவலி, பித்தவெடிப்பு, தோல் வறட்சி, போன்ற நோய்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இருமல், சளியை குறைக்க மிகவும் அற்புதமான மருந்து மிளகு. மிளகு ஒரு உஷ்ணக்காரி. உடலுக்கு தேவையான உஷ்ணத்தை கொடுக்கும். சளி, இருமலை கண்டிக்கும். மிளகு வைட்டமின் பி காம்ளக்ஸ் மிகுந்தது.

தலைவலி நீங்க சுக்கை ஒன்றிரண்டாக இடித்து பசும்பாலில் விட்டு அரைத்து தலையில் தடவ தலைவலி தீரும். முருங்கை இலையையும், மிளகையும் சாறெடுத்து நெற்றியில் தடவ தலைவலி தீரும். தொண்டைக்கட்டு, குரல் கம்மல் நீங்க சுக்கை மென்று சாறை மட்டும் விழுங்கவும். மேலும் ஆடாதோடை இலையை நடுநரம்பு நீக்கி குடிநீரிலிட்டு குடிக்க குரல் கம்மல் நீங்கும். நீரேற்றும் மற்றும் பீனிசம் தீர மஞ்சளை சுட்டு அந்த புகையை முகர நீரேற்றம் நீங்கும். நொச்சி இலையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதில் மஞ்சள் துளைப்போட்டு ஆவிபிடிக்க நீரேற்றம் தலைவலி தீரும்.

மிளகினை நன்கு பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அரை தேக்கரண்டி மிளகை தேனில் கலந்து 2வேளை 3 நாள் உட்கொள்ள மார்புச்சளி நன்கு வெளிப்படும். இருமல் குறையும். தலைவலி, மூக்குநீர் வடிதல் தீரும்.

மார்புச்சளி வெளிப்பட சிறிது கற்பூரத்தை தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அந்த எண்ணெயை மார்பில் சூடு பறக்க தடவி கல்லுப்பை வறுத்து ஒரு துணியில் முடிந்து மார்பில் ஒத்தளமிட மார்புச்சளி எளிதில் தீர்ந்து சுவாச பிரச்சனைகள் தீரும்.