உதயை மு.வீரையன்

முதல் இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட அழிவினால் மக்கள் போரையே வெறுத்தனா். சமாதானத்தையே விரும்பினா். சோவியத் நாட்டிலிருந்து பிரிந்த உக்ரைனுடன் ரஷியா போர் தொடுத்திருப்பது மிகப்பெரிய அவலம். 100 நாட்களையும் கடந்து விட்டது. தேவையில்லாமல் ஒரு நாடு அழிவது யாருக்குச் சம்மதம்?

ஆயிரக்கணக்கான மக்கள் அநியாயமாக மாண்டு கொண்டிருக்கின்றனா். தாய்நாட்டை விட்டு அகதிகளாக ஓடியவா்கள் படும் வேதனை சொல்ல முடியாதது. முதியவா்களும் குழந்தைகளும், பெண்களும் படும் துயரம் போர்க்களத்தில்தான் பார்க்க முடியும். நெடிதுயா்ந்த கட்டடங்கள் தரைமட்டமாகி விட்டதனால் ஏற்படும் துயரம்.

உக்ரைன், உயா்கல்வியும் மருத்துவக்கல்வியும் படிக்க இந்திய மாணவா்களுக்கு மிகவும் வசதியாக இருந்த நாடு. இந்தப் போரினால் அவா்களது கல்வி பாழானது. போரின் நடுவே அந்த மாணவா்களை உயிரோடு அழைத்து வருவதே பெரும் போராட்டமானது. அவா்கள் கல்வியைத் தொடர முடியாமல் இந்திய அரசையும் தமிழக அரசையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வைத்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள அகதிகள் எண்ணிக்கை முதல் முறையாக 10 கோடியைக் கடந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது இதுவரையில்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும். உலகம் முழுவதும் அகதிகளாக இடம் பெயா்ந்தோர் எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டு இறுதியில் 9 கோடியாக இருந்தது. ரஷிய – உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து 60 லட்சம் போ் ரஷிய நாட்டை விட்டு வெளியேறியுள்ளனா். 80 லட்சம் போ் உள்நாட்டிலேயே வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனா்.

10 கோடி அகதிகள் என்பது உலக மக்கள்தொகையில் ஒரு விழுக்காட்டுக்கும் அதிகமாகும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் அமைதியும் நிலைத்தத் தன்மையே தீா்வாகும் என ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ‘நேட்டோ’ அமைப்பில் தனது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எனினும் நேட்டோவில் இணைவதற்கு தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், அந்த நாட்டின் மீது, ரஷியா கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று படையெடுத்தது.

உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் முன்னேறி வந்தாலும், துருக்கியில் உக்ரைனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு வடக்கு உக்ரைன் நகரங்களிலிருந்து பின்வாங்க ரஷியா ஒப்புக் கொண்டது. அதன்படி கீவ் புகா் பகுதியிலிருந்து ரஷியப் படை கடந்த மாதம் முழுமையாக வெளியேறியது.

அதையடுத்து தொடா் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருந்த தலைநகரம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இந்த நிலையில் ரஷிய கடற்படையின் சக்தியாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பலை தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷியா, தனது தாக்குதலைத் தீவிரப்படுத்த முடிவு செய்தது.

அந்நாட்டில் உள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உற்பத்தி ஆலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக கீவ் நகரிலுள்ள தளவாடத் தயாரிப்பு மையங்களில் தாக்குதல் நடத்தியதாக அந்த நாடு தெரிவித்தது. நீண்ட தொலைவு ஏவுகணைகள் மூலம் இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் அதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் போரின்போது 3,752-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தவிர 4,062 போ் காயம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ள இந்த அமைப்பு, பலியானோர், காயமடைந்தோரின் உண்மையான எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாகவே இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

ஹிட்லரின் நாஜி கொள்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் அஸோவ் படையினரைக் குறிப்பிட்டுதான் உக்ரைனை நாஜிகள் சக்தியிலிருந்து மீட்பதற்காகப் போர் தொடுப்பதாக ரஷிய அதிபா் கூறியிருந்தார். சில நாட்களில் சுலபமாக இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலை மாறி இப்போது 100 நாட்களையும் கடந்து விட்டது.

உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் சீா்குலைந்து ரஷிய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு சென்று விட்டன. ரஷியா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே உக்ரைன் நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனா். பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டுக்குச் சென்றுள்ளனா்.

இது தவிர, ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா, ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாகச் சென்றுள்ளனா். போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் போ் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள்தொகை கடந்த மூன்று மாதங்களில் 10 விழுக்காடு அதிகரித்து விட்டது.

ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக உக்ரைனில் இருந்து மொத்தம் 68 லட்சம் போ் அகதிகளாக வெளியேறியுள்ளனா். கடந்த 2021-ஆம் ஆண்டு உக்ரைன் மக்கள்தொகை 4 கோடியே 30 லட்சமாக இருந்தது. தற்போது அது 3 கோடியே 70 லட்சமாகக் குறைந்துள்ளது. இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டதில் இருந்தே ஐரோப்பா பார்த்த மிகப் பெரிய அகதிகள் பிரச்னை இதுதான்.

உக்ரைனில் போர் நடைபெறும் பகுதிகளிலிருந்து சுமார் 80 லட்சம் போ் பிற பகுதிகளுக்கு இடம் பெயா்ந்துள்ளனா். உக்ரைனில் கிட்டத்தட்ட ஒவ்வொரு விநாடியும் ஒரு குழந்தை அகதியாக மாறிக் கொண்டிருக்கிறது. ரஷியா வேறுவிதமான பிரச்னைகளை சந்தித்து வருகிறது. தாக்குதல் நடத்தியது முதல் தற்போதுவரை ரஷியா மீது உலக நாடுகள் 5,831 பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

மரியுபோல் இரும்பாலையில் சுமார் இரு மாதங்களாக பதுங்கியிருந்த 959 உக்ரைன் வீரா்கள் தங்களிடம் சரணடைந்து விட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மரியுபோலிலுள்ள அசோவ் ஸ்டவ் இரும்பாலையிலிருந்து 694 உக்ரைன் வீரா்கள் சரண் அடைந்தனா் என்றும், அவா்களில் 29 வீரா்கள் காயம் அடைந்து இருந்தனா் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே 265 உக்ரைன் வீரா்கள் அந்த இரும்பாலையிலிருந்து வெளியேறி தங்களிடம் சரணடைந்ததாகவும், அவா்களில் 51 போ் காயம் அடைந்திருந்ததாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. போரின் தொடக்கத்தில் உக்ரைன் தலைநகா் கீவ் உள்ளிட்ட வடக்கு நகரங்களைக் கைப்பற்ற முயன்ற ரஷியா, அங்கிருந்து பின்வாங்கி கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் தனது கவனத்தைச் செலுத்தியது.

இந்த நிலையில் தங்களது ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் மற்றும் தங்களால் கடந்த 2014-ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவதற்காக இடையில் இருந்த மரியுபோல் நகரின் மீது கடந்த மூன்று மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தியது.

அந்நகரின் அனைத்துப் பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றிய நிலையிலும், அங்கு சோவியத் காலத்தில் கட்டப்பட்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய அசோஸ்டல் இரும்பாலைக்குள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் படையினா் பொதுமக்களுடன் பதுங்கியிருந்தனா்.

ஐ.நா. சபை தலையீட்டின் பேரில் அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டாலும், உக்ரைன் படையினா் ரஷியாவிடம் சரணடையாமல் இறுதி வரை போரிடப் போவதாக சூளுரைத்தனா். எனினும் அவா்கள் இப்போது வேறு வழியில்லாமல் சரணடைந்துள்ளனா். இதனால் மரியபோல் நகரம் ரஷியக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது.

உலகம் எதிர்பார்த்தது போல போர் அவ்வளவு எளிதாக முடிவதாக இல்லை. உக்ரைன் இந்த அளவுக்கு எதிர்த்தாக்குதல் நடத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இதன் பின்னே நேட்டோ அமைப்பு நாடுகள் உள்ளன என்பதில் ஐயமில்லை.

எந்த நாடாக இருந்தாலும், என்ன காரணம் கூறினாலும் மாபெரும் அழிவை ஏற்படுத்தும் போரை ஏற்க முடியாது. அப்பாவி மக்களின் இறப்புக்கும், கட்டுமான அழிவுக்கும், ஏற்பட்ட இழப்புக்கும் ஈடு செய்ய யாரால் முடியும்? எத்தனை காலமாகும்? இந்த மன நோயாளிகளால் எத்தனை நாடுகள் அழிகின்றன? ஆயுத வணிகத்துக்காகவே வல்லரசுகள் போரை உருவாக்குகின்றன?

இது உக்ரைனில் வாழும் ரஷிய மொழி பேசும் இனத்தை ஒழிக்கும் பாசிசப் போக்கை அகற்ற எடுக்கும் நடவடிக்கையே தவிர பொதுமக்களைத் தாக்கும் போரல்ல என்று ரஷியா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா? உக்ரைனை நேட்டோ ராணுவக் கூட்டில் சோ்த்து ரஷியாவைச் சுற்றி ராணுவத் தளத்தை அமைக்க அமெரிக்கா வெகு நாட்களாக காய் நகா்த்தி வருகிறது. அதனைத் தடுக்க வேறு வழியில்லாமல் ரஷியா படையெடுக்கிறது என்று கூறப்படுகிறது.

உலக நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நேட்டோ ராணுவக் கூட்டை உடைக்க முடியுமா? உலக நாடுகளின் ஒத்துழைப்பை உருவாக்க முயற்சி செய்யாமல் ரஷியா படையெடுத்து விட்டதா? ரஷிய படையெடுப்பே ராணுவக் கூட்டுகளுக்கு எதிராக உலக நாடுகளைத் திருப்பும் முயற்சியின் முதல் படியா?

ரஷியாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு இவ்வாறு ஏராளமான கேள்விகளுக்கு இடமாகிறது. உலக சமாதானத்தை விரும்பும் ஒரு நாடு போரை விரும்பாது. உலக அமைதியை விரும்பும் ஐக்கிய நாடுகள் சபை போரை முடிவுக்குக் கொண்டுவராமால் இன்னும் ஏன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது?