(ஏ.எல்.நிப்றாஸ்)

இதேபோன்றதொரு செப்டெம்பரில்..

நமது விடிவெள்ளியை நாம் ஒரு மலைத்தொடரில் காவு கொடுத்தோம். விதியாலோ யாரோ செய்த சதியாலோ, அஷ்ரஃபின் உயிர் பிரிய – முஸ்லிம்கள் எல்லோரும் செத்துக் கிடந்தார்கள்.

ஒவ்வொரு முஸ்லிம் வீடுகளும் மரண வீடுகளாயின. அன்றும், அதைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் முஸ்லிம் ஊர்களிலான வாழ்க்கை என்பது ஒரு மயானத்தில் தனிமையில் இருப்பது போன்றிருந்தது. மரணச் செய்தியறிந்து மக்களின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரையும், பல நாட்களாக கவிந்திருந்த சோகம் கலந்த அமைதியையும் மறந்து போக இன்னும் எத்தனை யுகங்கள் எடுக்குமோ தெரியாது.

அப்பேர்ப்பட்ட ஆளுமையாக அஷ்ரஃப் மிளிர்ந்தார். மறைந்த பின்பும் இன்னும் சாதாரண, அப்பாவி மக்கள் மற்றும் போராளிகளின் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரை, மக்கள் நினைந்தழுகின்றனர், அவர் இல்லாத இடைவெளியை உணர்கின்றனர், அவருடைய சிஷ்யர்களின் வெட்கக்கேடான அரசியலை எண்ணி வெஞ்சம் கொள்கின்றனர், அவருடைய கட்சியின் போக்கைப் பார்த்து கவலையடைகின்றனர். அஷ்ரஃபின் வெற்றிடத்தை 3 தேசிய தலைமைகளாலும் 20 பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கொஞ்சமாவது நிரப்ப முடியவில்லையே என்ற மனத்தாங்கல் எல்லா முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது.

இந்த அடிப்படையில் அஷ்ரஃப் உயிர்ப்புடன்தான் இருக்கின்றார். ஆனால் முஸ்லிம் அரசியல் களத்தில் பலரால் அவர் திரும்பத்திரும்ப கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்.

கொழும்பிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த உலங்குவானூர்தி மாவனல்லை, அரநநாயக்க, ஊரகந்தை மலையுச்சியில் விபத்துக்குள்ளாகி (?) அஷ்ரஃப் மரணமடைந்தார் என்பது நாம் நம்பிக்கொண்டிருக்கின்ற தகவலாகும். அது, அவர் பௌதீக அடிப்படையில் உயிரிழந்த சம்பவமாகும். ஆனால் ‘அஷ்ரஃப்’ என்று சொல்லும்போது அதில் வெறுமனே ஒரு தனிமனிதனின் உயிர் மட்டும் சம்பந்தப்படுவதாக கருத முடியாது. மாறாக, அவர் ஒப்பீட்டளவில் மிகச் சிறந்த ஒரு அரசியல் தலைமை. சில தவறுகளை தவிர்த்துப் பார்த்தால் ஒரு உயரிய இடத்தில் அவரை இருத்தலாம். எனவே, ‘அஷ்ரஃப்’ என்ற சொல் அவருடைய பெயரை மட்டும் குறிப்பதல்ல.
மாறாக அவரது கொள்கைகள், கோட்பாடுகள், தலைமைக்குரிய இலட்சணங்கள், கனவுகள், குறிக்கோள்கள், ஆளுமை என இன்னும் எத்தனையோ விடயங்கள் அதில் உள்ளடங்கியுள்ளன.

அந்த வகையில், அஷ்ரஃப் என்ற மனிதரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது ஒரேயொரு தடவை மாத்திரம்தான். ஆனால் அவருடைய கொள்கைகள், அவர் உருவாக்கிய கட்சியின் இலக்குகள், கனவுகள் எல்லாவற்றையும் அவருடைய சிஷ்யர்களும் சிஷ்யர்களின் எடுபிடிகளும் தினமும் கொலைசெய்து கொண்டேதான் இருக்கின்றனர்.
அவ்வப்போது இந்த விஷயங்களை (அதாவது அஷ்ரஃபை) உயிர்ப்பித்து, பின்னர் காரியம் முடிந்ததும் மீண்டும் சாகக் கொன்றுவிடுகின்றன – அவரது அரசியல் வாரிசுகள். ஆக, தேர்தல் காலம் போல தேவை ஏற்படும் வேளைகளில், தம்மை எல்லாம் காப்பாற்றுவார் என்பதற்காக உயிர்ப்பிக்கடும் ‘அஷ்ரஃப்’ மற்றும் அவரது கோஷங்களள் தூக்கிப்பிடிக்கப்பட்டு பின்னர் அதிகார கதிரைகள் கிடைத்தவுடன் அடுப்புக்கு விறகாகி விடுகின்றன என்று சொல்லலாம்.

விதியா சதியா?

அஷ்ரஃபின்; மரணம் விபத்தினால் ஏற்பட்டது என்று மேலோட்டமாக அறிவிக்கப்பட்டாலும் அரசியல்வாதிகளிடையே மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களிடையேயும் அது விடயத்தில் பாரிய சந்தேகம் உள்ளது. இது ஒரு கொலையாக அல்லது சதி முயற்சியாக இருக்க வேண்டுமென்றே இன்றுவரை முஸ்லிம்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு சில காரணங்களும் இருந்தன.
விடுதலைப் புலிகளின் கொலைப்பட்டியலில் அஷ்ரஃபின் பெயரும் இருந்ததாக சொல்லப்பட்டது. இப் பின்னணியில் அவருடன் ஹெலியில் பயணித்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகப்பார்வை ஏற்பட்டது.

இது புலிகளின் வேலையாக இருக்குமென்று முஸ்லிம்கள் வெளிப்படையாகவே பேசினர். வடக்கு, கிழக்கில் இருந்து ஒரு முஸ்லிம் தலைமை உருவாகி அவர் தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறுவது சிங்கள கடும்போக்கு சக்திகளுக்கு மட்டுமன்றி பெரும்பான்மை கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டிருந்த தெற்கின் சிறுபான்மை தலைவர்களுக்கே பெரும் தலையிடியாகவே இருந்தது. எனவே இப்பின்னணியில் ஏதாவது சதித் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சந்தேகம் ஏற்பட்டது. இதனைவிட முக்கியமாக, சந்திரிகாவின் வலது கையாக இருந்தாலும் மரணிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அஷ்ரஃப் சில காட்டமான அறிக்கைகளை வெளியிட்டிருந்தார். சிறுபான்மை மக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்த அவர், சிங்கள ஆட்சிச் சூழலையும் நியாயபூர்வமாக விமர்சித்திருந்தார். அந்தவகையில் அஷ்;ரஃப் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்து விடுவார் என்று எண்ணி ஆட்சியாளர்களே ஒரு விபத்தை திட்டமிட்டிருக்கலாலோ என்ற சந்தேகங்களும் அப்போது வெளியாகி இருந்தன.

எனவே இதிலுள்ள மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடுமையாக பாடுபடும் என்று மக்கள் கருதினர். தமது தலைவனின் உயிரை விதி பறித்ததா? சதி எடுத்ததா? என்பதை அறிந்தால் ஒரு ஆறுதல் கிடைக்குமென போராளிகள் நினைத்தனர். இறைவனின் நாட்டத்தினாலேயே மரணம் நிகழ்கின்றது. ஆனாலும், எல்லோரும் பகிரங்கமாக பார்த்திருக்க விபத்துக்குள்ளாகி இறந்த ஒருவனுக்கே பிரேத பரிசோதனை மேற்கொண்டு சந்தேகத்தை தீர்த்து வைக்கும் நடைமுறை இருக்கும் போது, பெருந்தலைவர் ஒருவர் விமான விபத்துக்குள்ளாகி இறந்தாரா, அல்லது விபத்தொன்று திட்டமிடப்பட்டதா என்று அறிந்து கொள்வதில் என்ன தவறுள்ளது? ஆனால் அது நடக்கவில்லை. அந்த பொறுப்பைக் கூட மு.கா.வும் அஷ்ரஃபின் அரசியல் வாரிசுகளும் நிறைவேற்றவில்லை.

குறிப்பாக, அப்போது சோமதேரருடனான தொலைக்காட்சி விவாதத்தில் அஷ்ரஃப் அளித்த பதில்களால் பௌத்த சக்திகள் அப்படியே அதிர்ந்து போயிருந்தன. இதைப் பயன்படுத்தி பேரினவாதிகள் விமானத்தில் ஏதாவது தொழில்நுட்ப குளறுபடிகளை செய்திருப்பார்களோ என்ற சந்தேமும் தலைவர் பற்றி ஆழமாக சிந்திக்கின்றவர்களிடையே உள்ளது.

இது இவ்வாறிருக்க, அஷ்ரஃபின் மிக நெருக்கமானவரும் அவருடைய ‘நான் எனும் நீ’ நூலின் பதிப்பாசிரியரும் (முன்னர் வெளிவந்த) முஸ்லிம் குரல் பத்திரிகை, மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியரும் தற்போது புலம்பெயர்ந்து “எதுவரை“ சஞ்சிகையை வெளியிட்டுக் கொண்டிருப்பவருமான எம்.பௌஸர், வெளியிட்டுள்ள கருத்துக்களும் (அதுபற்றி தனியொரு கட்டுரையில் குறிப்பிடுகின்றேன்) நம்முடைய மேற்சொன்ன எல்லாச் சந்தேகங்களையும், உண்மை எனும் புள்ளியை நோக்கி நகர்த்துகின்றன. இதன் பின்னால் ஒரு சர்வதேச நிகழ்ச்சி நிரல் இருந்தது என்று அவர் தைரியமாக சொல்லியிருக்கின்றார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் இது விடயத்தில் எதையாவது செய்த மாதிரி தெரியவில்லை.

இயற்கையாகவோ செயற்கையாகவோ அஷ்ரஃபின் மரணம் நிகழ்ந்திருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக ஆரம்பத்தில் கூறிய அப்போதைய மு.கா. இரண்டாம்நிலை தலைவர்கள் பின்னர் அதை அப்படியே மறந்து, மறைத்து விட்டமையும் அதற்கான காரணத்தை சட்ட ரீதியாக உறுதிப்படுத்தி மக்களுக்கு முன்வைக்காமையும் மிகப் பெரிய சமூகத் துரோகமாகும். இந்த துரோகத்தை பலர் இழைத்திருக்கின்றார்கள்.

நன்றி மறந்தவர்கள்

அரசியல் அனுபவமின்றி வேறு பணிக்காக அஷ்ரஃபோடு வந்து இணைந்து கொண்ட தனக்கு தலைமைத்துவ சிம்மாசனம் கிடைக்க வழிவகுத்தவர் என்பதற்காக மு.கா.வின் இன்றைய தலைவர் றவூப் ஹக்கீம் உண்மையை அறிந்து மக்களுக்கு கூறியிருக்க வேண்டும். இணைப்பாளராக இருந்த தனக்கு எம்.பி. பதவி தந்து அழகுபார்த்தவர் என்பதற்காக தே.கா. தலைவர் அதாவுல்லா இந்த மர்மத்தை துலக்க பாடுபட்டிருக்க வேண்டும், தமக்கு அரசியல் முகவரி தந்த கட்சியின் தலைவர் என்பதற்காக ம.கா. தலைவர் றிசாட் பதியுதீன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். தனது அரசியல் நண்பர் என்பதற்காக சேகு இஸ்ஸதீன் இந்த விசாரணையை கோரியிருக்க வேண்டும். அஷ்ரஃபின் கொள்கையுடன் இருப்பவர் என்பதற்காக ஹசனலி அதைச் செய்திருக்க வேண்டும். போராட்ட இயக்கத்தின் ஊடாக எம்.பி.யான தனக்கு முஸ்லிம் கட்சி ஒன்றுக்குள் ஒரு இராஜதந்திரிபோல இடம்கொடுத்தவர் என்பதற்காக பசீர் சேகுதாவூத் இதை செய்திருக்க வேண்டும்.

இவர்கள் எல்லோரையும் விட்டாலும்… காதலித்து திருமணம் முடித்த மறைந்த தலைவரின் துணைவியார் பேரியல் அஷ்ரஃப் அக்கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தனது கணவனின் மரண விசாரணை அறிக்கையை மக்களுக்கு காண்பித்து விட்டே அமைச்சுப் பதவியும் தூதுவர் பதவியும் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று, தூக்கத்தில் இருந்து எழுந்து அலறுகின்ற சிறுபிள்ளைகள் போல ஆங்கில ஊடகங்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் அறிக்கை விட்டிருந்த மறைந்த தலைவரின் புதல்வர் அமான், இதற்காக பேசியிருக்க வேண்டும்.

ஆனால் மேற்சொன்ன எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. அஷ்ரஃபின் மரணத்தையடுத்து அதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளிக்கப்பட்டதாக சொல்லப்;பட்டது. குறைந்தபட்சம், அதில் என்ன குறிப்பிட்டிருந்தார்கள் என்று மக்களுக்கு ஒப்புவிப்பதற்கு கூட தவறிவிட்டது – இந்த அஷ்ரஃபை
விற்றுப் பிழைப்போர் சங்கம்.

ஒன்று, தலைவரின் மரணத்திற்கான காரணம் இவர்களுக்கு தெரிந்து அதை மறைத்திருக்க வேண்டும். அல்லது மறைப்பதற்கு ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். ஒருவேளை அஷ்ரஃபின் மரணம் ஒரு கொலை என்றால் அதற்காக திட்டம் தீட்டியவர்களுக்கு ஒரு காரணம் இருக்கலாம். அதேபோல் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்காதவர்களுக்கும் ஏதாவது காரணம் இருக்குமாயின் இரண்டு தரப்பிற்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்கின்றது? அஷ்ரஃபை உடலியல் ரீதியாக கொன்றது காலனாவோ சதிகாரனாகவோ இருந்தாலும், ஆனால் அவரது மரணத்தின் மீதான விசாரணையை கடைசிமட்டும் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்காதவா்கள் அஷ்ரஃபின் சிஷ்யர்களேயாவா். இதுவே அவா்களால் செய்யப்பட்ட முதலாவது படுகொலையாகும்.

அடுத்தடுத்த கொலைகள்

அஷ்ரஃபின் மரணம் குறித்த விசாரணையில் மாத்திரம் இவர்கள் தவறிழைக்கவில்லை. மாறாக, அவரது அடிப்படை கொள்கையை அச்சொட்டாக கடைப்பிடிப்பதில், இதயசுத்தியுடன் சேவையாற்றுவதில், மக்களை முதன்மைப்படுத்துவதில், ஒற்றுமையை கடைப்பிடிப்பதில், தைரியமாக செயற்படுவதில், பட்டம் பதவிகளுக்கும் பணத்திற்கும் விலை போகாத தன்மையில் …. என்று ஏகப்பட்ட விடயங்களில் தலைவரின் வழிமுறைகளை கொலை செய்து குழிதோண்டி புதைத்திருக்கின்றார்கள். இதில் பிரதான தவறை இழைத்தவர் அல்லது இழைத்தவர்கள் யார் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. மேடை ஏறினால் குர்ஆன், ஹதீஸ் என்று கூறுவதிலும், தலைவரின் சிஷ்யர்கள் என்று மார்தட்டுவதிலும் ஒன்றும் குறைச்சலில்லை.

அஷ்ரஃபின் கொள்கைகளை, நோக்கத்தை அவருடைய அரசியல் சிஷ்யர்கள் பல தடவை கொலை செய்திருக்கின்றார்கள். அவர் சமூகத்திற்கான அபிவிருத்தி அரசியலையும் உரிமை அரசியலையும் சமாந்திரமான அஷ்ரஃப் முன்கொண்டு சென்றாh.; புலிகளை எதிர்த்துக் கொண்டே தென்கிழக்கில் பல்கலைக்கழகம் நிறுவினார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸாகவும் வேறு காங்கிரஸ்களாகவும் தனித்தனி கட்சிகளை வைத்து அரசியல் செய்பவர்கள் தம்மை அஷ்ரஃபின் பாசறையில் வளர்ந்தவர்களாக கூறிக் கொண்டாலும், இவர்களைப் பார்த்தால் அஷ்ரஃபின் பாசறையில் அரிச்சுவடி கூட கற்றிருப்பார்களா என்பது சந்தேகமாக இருக்கின்றது. அந்த அளவுக்கு அவரது வழியை பின்பற்றுவதில் தவறிழைத்திருக்கின்றார்கள். இது இன்னுமொரு கொலையாகும்.

அஷ்ரஃப் மரணித்த பின்னரும் இவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றார். தொலைக்காட்சியில் தோன்றி தேர்தல் பிரசாரம் செய்கின்றார். சுவரொட்டிகளிலும் அவரது புகைப்படத்தை அச்சிட்டே வாக்குக் கேட்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக மட்டுமன்றி ஏனைய கட்சிகளின் வெற்றிக்காகவும் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் மறைந்தும் மறையாத ஒரு தலைவராக அஷ்ரஃப் இருக்கின்றார். ஆனால் அவரை பின்பற்றுவதாக சொல்வோரோ அவரை, அவரது கொள்கைகளை குழிதோண்டி புதைத்திருக்கின்றார்கள். தேர்தல் காலங்களில் அஷ்ரஃபை வைத்து பிரசாரம் செய்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா காங்கிரஸ்களின் அரசியல்வாதிகளும் அஷ்ரஃபின் கனவை தாமாக பலியெடுத்து விடுகின்றனர். இது இன்னுமொரு கொலையாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்ட முறைமையை ஆட்சேபித்த தலைவர் இவ்விரு மாகாணங்களிலும் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்புடனும் சுய மரியாதையுடனும் தாமாக வாழவேண்டும் என்று கனவு கண்டார். நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகை கோரினார். ஆனால் கிழக்கில் ஒரு முதலமைச்சையும் ஏகப்பட்ட உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டும், மக்களின் சிவில் பிரச்சினைகளை கூட தீர்த்து வைக்க முடியாமல் போயிருக்கின்றது இன்று. முஸ்லிம்களின் அரசியல் உரிமை அல்லது சுயநிர்ணயம் என்பதை – சிலர் சிங்கள பெருந்தேசியவாதிகளுக்கும் சிலர் தமிழ் தேசிய வாதிகளுக்கும் குத்தகைக்கு விட்டிருக்கின்றார்கள். இந்த சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட தனித்துவம் மிக்க கட்சியை, பலமற்றதாக்கி, அதன் மீதான மக்களின் நம்பிக்கையின் குரல்வளையை நசித்திருக்கின்றார்கள். இது அடுத்த கொலையாகும்.

மிக முக்கியமாக, எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அஷ்ரஃப் மு.கா. என்ற பேரியக்கத்தை ஆரம்பித்தார். ஆனால், இன்று அக்கட்சியில் இருந்தவர்கள் வெளியேறி புதுக் கட்சிகளை தொடங்கியுள்ளனர். கட்சிக்குள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடுகளும் பிளவுகளும் ஏற்படத் தொடங்கியுள்ளன. தற்போதைய தலைவரின் தலைமையிலான மு.கா., அக்கட்சி எந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதோ அந்த மக்களது பிரச்சினைகளை இரண்டாந்தர பிரச்சினைகளாக கருதிச் செயற்படுவதாக தெரிகின்றது. மற்றைய காங்கிரஸ்களும் அவ்வெற்றிடத்தை நிரப்பவில்லை.

மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அஷ்ரஃபின் சிஷ்யர்களது அரசியல் என்பது – இன்று சிலருக்கு சொத்து சேர்ப்பதற்கான, வங்கிக் கணக்குகளை நிரப்புவதற்கான கருவியாக மாறியிருக்கின்றது. சவப்பெட்டி கடைக்காரன் போல, யார் வீட்டில் இழவு விழுந்தாலும், நமது கல்லாப்பெட்டி நிரம்ப வேண்டும் என்று நினைப்பவர்களால் அஷ்ரஃப் தினமும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

‘குற்றவாளிகள்’ கடுமையாக தண்டிக்கப்படாத வரை – இவ்வாறான ‘கொலைகள்’ தொடரலாம்.