ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்றையதினம் மாலை சிங்கப்பூர் சென்றடைந்ததை தொடர்ந்து தனது பதவி விலகலை சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சட்ட ஆலோசனைகளுக்காக சபாநாயகர் குறித்த கடிதத்தை சட்டமாதி அபருபக்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளதுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சபாநாயகர் நாட்டு மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திற்கு பின்னர் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் பதவியை இராஜினாமா செய்த முதலாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ கருதப்படுகிறார்.
போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டதை தொடர்ந்து நாட்டிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக குறிப்பிட்டார்.
இருப்பினும் அவர் பதவி விலகலை சபாநாயகர் ஊடாக அறிவிக்கவில்லை. மாலைதீவு நாட்டிலிருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சென்றதன் பின்னர் ஜனாதிபதி பதவி விலகலை அறிவிப்பார் என சபாநாயகர் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ இன்றையதினம் மாலை சிங்கப்பூர் சென்றடைந்ததை தொடர்ந்து தனது பதவி விலகலை சபாநாயகர் ஊடாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு 52.25 சதவீத வாக்குகளை பெற்று இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தடையாக உள்ளது என பொதுஜன பெரமுனவினர் குறிப்பிட்டதை தொடர்ந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20 ஆவது திருச்சட்டம் பாராளுமன்றில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தின் பெருமளவிலான அதிகாரங்கள் 20 ஆவது திருத்தம் ஊடாக ஜனாதிபதியிடம் பொறுப்பாக்கப்பட்டது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்கள் ஜனாதிபதிக்கும், அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாதம் கூட்டாக பதவி விலகினர்.
ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து கடந்த ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதி ஆர்ப்பாட்டகாரர்கள் ‘கோட்டா கோ கம’ என பெயரிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.
மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் நிலவிய வன்முறை சம்பவங்களை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்தார்.
இருப்பினும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி முழு நாட்டு மக்களும் கடந்த 09 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் அலரி மாளிகை ஆகியவற்றை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
இணைந்திருங்கள்