இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அடுத்த அதிபர், பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தின் போது ஒரு சில நபர்களின் பெயரையும், வேறு சில தரப்புகளில் இருந்து சில அரசியல்வாதிகளின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, டலஸ் அழகபெரும, தினேஷ் குணவர்தன ஆகியோரில் ஒருவரை நியமிக்க ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதால் அதிபராக பதவி ஏற்பதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றால், கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழல் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே அங்கு ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கும் பட்சத்தில்  முதலில் நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

அதேவேளை அனைத்து கட்சி அரசில், அதிபராக சஜித் பிரேமதாசவும் பிரதமராக அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன வலியுறுத்தி உள்ளன.

சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க இருவரும் இலங்கை அரசை தலைமை ஏற்று நடத்த மிகவும் பொருத்தமானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகி புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.