தற்கொலை செய்தேனும் ரணில் விக்ரமசிங்கவை விரட்டாமல் ஓயமாட்டோம் என காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இருந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது இன்று அதிகாலை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பெண்ணொருவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நாங்கள் வீதியில் நிற்கின்றோம். நீங்கள் இவ்வாறு செயற்படுவீர்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை.

நீங்கள் விலங்குகளை போன்று செயற்படுகின்றீர்கள். நான் ஒரு தாய், எனது முதுகில் நீங்கள் அடித்த அடியால் ஏற்பட்ட காயத்தின் தழும்பு இருக்கிறது.

சீருடைகளை அணிந்து இதுபோன்ற வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடாதீர்கள். அந்தத் துப்பாக்கியை நீட்ட வேண்டியது எம்மை நோக்கியல்ல.

இவ் இடத்தை இன்று நாம் ஒப்படைக்க இருந்தோம். அதனை ஏற்றால் ரணில் விக்கரமசிங்கவிற்கு வெட்கம். அதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்க எமக்கு இத்தகையதொரு அநீதியை இழைத்தார்.

நாம் பேசாமல் இருக்க மாட்டோம். போராட்டத்தை நிறுத்த மாட்டோம். நாம் இவற்றை எதிர்க்கின்றோம்.

முன்னரைப் போன்று நினைக்காதீர்கள் நாம் புதிய சந்ததியுடன் இருக்கின்றோம். அந்தக் காலம் முடிந்துவிட்டது. நாம் இதனை கைவிடமாட்டோம்” என்றார்.