இன்னும் ஒரு தடவை இவ்வாறான ஒரு வன்முறை சம்பவம் நடைபெறுமாக இருந்தால், ஜப்பான் நாட்டின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எச்சரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் வெளிநாட்டு தூதுவர்களை கடந்த (22) மாலை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் சம்பந்தமாக இதன்போது ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பின் போதே ஜப்பானிய தூதுவர் இது போன்ற வன்முறை சம்பவங்களை இன்னும் ஒரு தடவை ஏவிவிடுவீர்களாக இருந்தால் ஜப்பான் அரசாங்கத்தின் உதவி ஒன்றும் இலங்கைக்கு வழங்கப்படாது என எச்சரித்துள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சக்களின் பிரதான முகவராக ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் எனவும் அவர் மூலமே ராஜபக்சர்கள் தங்கள் நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாகவே ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு அளிப்பதில்லை என்ற முடிவில் கூட்டமைப்பு உறுதியுடன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெறும் இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது. நாடாளுமன்ற இரகசிய வாக்கெடுப்பு முறையில் இடம்பெற்ற தேர்தலில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
இருப்பினும் ஜனாதிபதி தேர்தலின் இறுதி கணம் வரை ரணிலை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிற்கு அதிக கட்சிகளின் ஆதரவு வெளிப்படுத்தப்பட்ட போதும் 81 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்திருந்தார்.இந்நிலையில் இரகசிய வாக்கெடுப்பு முறை என்பதால் வெளிப்படையாக டலஸ்க்கு ஆதரவு அளித்துவிட்டு திரை மறைவில் ரணிலுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என பல்வேறு தரப்பினராலும் குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இரகசிய வாக்கெடுப்பு முறை தவறானது என்றும் அதிபர் தேர்வு வெளிப்படையாக நடத்தப்பட வேண்டியது ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
இணைந்திருங்கள்