எழுபதுகளின் பிற்பகுதியில், கே. பாக்கியராஜ் இயக்கத்தில் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ என்றொரு திரைப்படம் வெளியானது. வறுமையின் தொடர் விளைவுகளைச் சித்திரிக்கின்ற ஒரு கதையாக அது அமைந்திருந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகளின், அரசியல் வறுமையைப் பார்க்கின்ற போது, இந்தத் தலைப்பு ஞாபகத்துக்கு வருவதுண்டு.

சுவர் இருந்தாலேயே சித்திரம் வரைய முடியும்’ என்பது முதுமொழியாகும். மக்கள் சார்பு அரசியலைப் பொறுத்தமட்டில் ‘சுவர்’ என்பது, மக்கள் பலம், கொள்கை, மக்களுடனான தொடர்பு, சமூக சிந்தனை எனப் பல விடயங்களை உள்ளடக்கியது.

ஆனால், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கலாக, கிட்டத்தட்ட அரசியல்வாதிகளும் இந்தச் ‘சுவர்’ இல்லாமலேயே சித்திரம் வரைந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகின்றது. நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் சொன்னால், ‘கட்டடம் உறுதியானது; ஆனால், அத்திவாரம்தான் பலவீனமாக இருக்கின்றது’ என்பதுபோல்த்தான் இதுவும் இருக்கின்றது.
சித்திரம் வரைவதே நமது தொழில் என்றால், அதற்கான ‘சுவரை’ அல்லது பொருத்தமான தளப்பரப்பை எந்த நேரமும் தயாராக வைத்திருக்க வேண்டும். அரசியலைப் பொறுத்தமட்டில், காற்றிலோ கற்பனையிலோ சித்திரம் தீட்ட முடியாது.

அதேபோல், அந்தச் சுவரை, தேவைப்படும்போது மட்டும் துப்புரவு செய்து விட்டு, அழகழகான சித்திரம் வரைந்து, மக்களை மயக்கலாம் என்பதும் நீண்டகால அடிப்படையில் சாத்தியமற்றது.

இது அரசியலுக்கும் பொருந்தும்.

அதாவது, தேர்தல் காலத்தில் மாத்திரம் கொள்கைகளைப் பேசிக்கொண்டு, மக்களிடத்தில் வந்து, தம்மைப் பெரும் சமூகப் போராளிகளாக காட்டிக் கொண்டு, மக்களின் பிரச்சினைகளை மீண்டும் பேசுபொருளாக்குவது மக்கள் சார்பு அரசியலுக்கு, கொஞ்சம்கூட பொருத்தமற்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸூம் சரி, மக்கள் காங்கிரஸூம் சரி, தேசிய காங்கிரஸ் போன்ற பிற கட்சிகளும் சரி, முஸ்லிம் சமூகத்துக்குப் பொருத்தமானதொரு நிலைபேறான அரசியலை கட்டியெழுப்பவில்லை. பெருந்தேசியக் கட்சிகள் ஊடாக எம்.பியான முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலையும் இதுதான்.

1990களுக்குப் பிறகு, ஏற்கெனவே ஓரளவுக்குப் பலமானதாக உருவாக்கப்பட்டிருந்த முஸ்லிம் சமூகத்துக்கான அரசியலை, 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்தக் கட்சிகள், தவணை முறையில் கெடுத்து குட்டிச் சுவராக்கியுள்ளன.

ஓர் அரசியல் கட்சி என்றால், தலைவர் என்றால், அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் என்றால், அவர்களிடம் ஒரு கொள்கை இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிய சரியான புரிதலும், அதற்காக இயங்க வேண்டும் என்ற சிந்தனையும் இருக்க வேண்டும்.

ஓர் ‘அரசியல் ஜடம்’ போல கிடக்காமல், எல்லாக் காலத்திலும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பதற்கான உந்துதல் இருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டுமன்றி, ஏனைய காலங்களிலும் மக்களுடனான உறவு மிதமான மட்டத்தில் பேணப்படுவது அவசியம்.

‘சமூகத்துக்காக உயிரையும் தியாகம் செய்வோம்’ என்று வாய்ச்சவாடல் விடுவதை விடுத்து, உயிரை விடப் பெறுமதி குறைந்த பதவிகள், பணம் உள்ளிட்டவற்றையேனும் தியாகம் செய்யச் சித்தமாய் இருத்தல் அவசியம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படியான அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைக்கவில்லை. அல்லது, முஸ்லிம்கள், அவ்வாறான பண்புள்ளவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவில்லை; தலைவர்களாக முன்னிறுத்தவில்லை.

80, 90களில் இருந்த அரசியல் சூழல், இப்போது இலங்கையில் இல்லை. எனவே, மறைந்த எம்.எச்.எம் அஷ்ரப் போன்றவர்களுக்குக் கிடைத்த சில வாய்ப்புகள் நிகழ்காலத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கிடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல!

ஆனால், வெளிப்படையாகவே கிடைத்த எத்தனையோ சந்தர்ப்பங்கள் தவற விடப்பட்டுள்ளன. இன்னும் பல வாய்ப்புகளை, அரசியல்வாதிகள் தமது கஜானாக்களை நிரப்புவதற்காகப் பாவித்துக் கொண்டார்கள் என்பதை அறியாத அளவுக்கு, மக்கள் முட்டாள்களல்லர்.

ஒரு பெருந்தேசிய கட்சிக்கு எதிராக, மக்களை அணிதிரட்டி வாக்குகளைப் பெற்றுவிட்டு, மக்களை அப்படியே நடுத்தெருவில் விட்டு விட்டு, மறுபக்கம் தாவி பதவிகளைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பங்கள் ஏராளம் உள்ளன.

மக்கள் நலன் பற்றிச் சிந்திக்காமல் சட்டமூலங்கள், திருத்தங்கள், பிரேரணைகளுக்கு கையுயர்த்திய தடவைகளுக்கு கணக்கில்லை.

தமக்கு பிரச்சினை வரும் என்பதற்காக, ‘நமக்கு ஏனிந்த வேண்டாத வேலை’ என்ற தோரணையில், முஸ்லிம் தலைவர்கள், எம்.பிக்கள் பல முக்கியமான சந்தர்ப்பங்களில் ‘கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக’ இருந்தார்கள். பல வேளைகளில் கூட்டத்தோடு கை உயர்த்தினார்கள்.

மறுபுறுத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதாவது ஒரு பெருந்தேசிய கட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கின்ற வேலையை மட்டும் தொடராகவும் கனகச்சிதமாகவும் செய்து வருகின்றனர். இதனால் முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல், தமது சொந்த அடையாளத்தை இழந்து கனகாலமாயிற்று.

கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் பிரதிநிதிகளும், மக்களுக்கான அரசியலில் இருந்து துருவப்பட்டுப் போயுள்ளனர். இதனால் மக்கள் ஆதரவுத் தளம் என்பது, வெகுவாகக் குறைவடைந்துள்ளது. நீண்டகாலமாக அரசியலில் இருந்தவர்களுக்கும் புதுவரவு எம்.பிகளுக்கும் பத்தாயிரம் வாக்குகளைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் போவது, இதனால்தான் நேர்கின்றது.

இந்தப் போக்கை, முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. தேர்தல் காலத்தில், தமது சுவர்களை தூசுதட்ட அவர்கள் வரும்போது, மக்கள் இவற்றையெல்லாம் மறந்து விடுகின்றார்கள். இதனைப் பார்க்கும் போது, முஸ்லிம் சமூகம் பிழையான முறையில் அரசியல் மயப்படுத்தப்பட்டு உள்ளதோ என எண்ணத் தோன்றுவதுண்டு.

வடக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் அபிலாஷைகள், கொழும்பிலும் தெற்கிலும் உள்ளவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் மலையக முஸ்லிம்களின் பிரச்சினைகள் எல்லாம் பொதுவானவை கிடையாது.

சில பிரச்சினைகள் பொதுவானவை; சில விவகாரங்கள், அந்தந்த நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்களுக்கு பிரத்தியேகமானவையாக இருக்கின்றன. ஆயினும், இது பற்றிய முழுமையான பிரக்ஞையோ ஆவணப்படுத்தலோ, கணிசமான முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

சமூகத்தின் நீண்டகால, குறுங்காலப் பிரச்சினைகள் என்ன? அதனை எவ்வாறு முன்கொண்டு செல்ல வேண்டும்? அதற்கான சரியான அணுகுமுறை, வழித்தடம் என்ன என்ற ஒரு முறைப்படுத்தல் முஸ்லிம் அரசியலில் இல்லை.

முஸ்லிம் சமூகத்தின் தீர்மானிக்கப்பட்ட இலக்கு என்ன, எதனை நோக்கி எவ்வாறு நகர்ந்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கான காலவரையறை என்ன? முதன்மைத் திட்டம் என்ன? மாற்றுத் திட்டம் என்ன என்பதையெல்லாம் தமிழ்க் கட்சிகளின் அளவுக்கு முஸ்லிம் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ நிர்ணயித்துச் செயற்படுவதாக ஆறுதல் கொள்ள முடியவில்லை.

‘பிச்சைக்காரனின் புண்ணைப் போல’, பிரச்சினைகள் இன்னும் பிரச்சினைகளாகவே இருக்கின்றன. ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வந்து, அந்தப் புண்ணைக்காட்டி, தமது பாத்திரங்களுக்குள் வாக்குப் பிச்சை கேட்கின்றனர்.

இதேவேளை, அரசாங்கத்தையும் பெருந்தேசிய கட்சிகளை மட்டுமன்றி, தமிழ்த் தேசிய தரப்புகளையும் மட்டுமன்றி, சர்வதேசத்தையும் மிகக் கவனமாகக் கையாள்வது எவ்வாறு என்பதை, 20- 30 வருட அனுபவமுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட, இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ‘சும்மா’ இருக்கும் இந்தப் போக்கை, இப்போதும் அவதானிக்க முடிகின்றது.

இப்போது அரசியலமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்பதற்கான கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் கைவிடப்பட்ட பின்னணியில், 22ஆவது திருத்தம் பற்றிப் பேசப்படுகின்றது.

தேர்தல் முறைமை மறுசீரமைப்புப் பற்றியும் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது பற்றியும் பேசப்படுகின்றது. மாகாண சபைத் தேர்தலை, தமது வசதிக்காக அரசாங்கம் மறந்து விட்டதைப் போல தெரிகின்றது.

இதற்கிடையில், 13ஆவது திருத்தத்தை அமலாக்குதல், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள், தமிழர்களுக்கான தீர்வுத் திட்டம் பற்றி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன.

‘வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை அரசாங்கத்துக்காகவோ அல்லது முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பதற்காகவோ, தமிழ் தேசியம் கைவிடவில்லை.

ஆனால், மேற்சொன்னவை உள்ளடங்கலாக, மிக முக்கிய நடப்பு விவகாரங்கள் பற்றி முஸ்லிம் அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள் ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வந்ததும் இல்லை. அதற்காக கூட்டாக ஒரே குரலில் அழுத்தம் கொடுத்த வரலாறும் இல்லை.

இப்போது கூட, ‘சும்மா இருத்தலே சுகம்’ என்பது போலவே அவர்கள் வாழாவிருப்பதைக் காண முடிகின்றது. இந்த நிலை மிகக் கிட்டிய காலத்தில் மாறும் என்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

ஏனென்றால், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்குமளவுக்கு, முஸ்லிம் சமூகம் இன்னும் விழிப்படையவில்லை.