திருவாரூர் மாவட்டம், ஆலத்தூரில் விஸ்வநாத சுவாமி கோயிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கால உலோக சிலைகள் திருடப்பட்டதாக, விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கோயிலில் இருந்த விஷ்ணு, தேவி, பூதேவி, யோக நரசிம்மர், விநாயகர், நடன சம்பந்தர், சோமஸ்கந்தர், நின்ற விஷ்ணு மற்றும் நடன கிருஷ்ணா ஆகிய சிலைகள் திருடப்பட்டு போலி சிலைகள் மாற்றி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சிலைகளின் புகைப்படத்தை கொண்டு உலகம் முழுதும் உள்ள அருங்காட்சியகம், ஏல மையங்களில் இணையம் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அமெரிக்காவில் அமைந்துள்ள வெவ்வேறு அருங்காட்சியகங்களில் சோமஸ்கந்தர் சிலையும், நடன சம்பந்தர் சிலையும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சில அருங்காட்சியகங்களில் மற்ற சில சிலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்களைக் கொண்டு 2 சிலைகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.