ஐந்து அரசியலமைப்பு திருத்தங்களுக்கு தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக manthri.lk இணையத்தலம் தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரசியலமைப்பின் 17,18,19,20 மற்றும் 22 ஆம் திருத்தங்களுக்கே இவ்வாறு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

18 ஆவது திருத்தம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் அதிகரிக்கப்பட்டதுடன் 19 ஆம் திருத்தம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் குறைக்கப்பட்டது.

அத்துடன் 20ஆம் திருத்தம் மூலம் மீண்டும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் அதிகரிக்கப்பட்டதுடன் 22 ஆம் திருத்தம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் மீண்டும் குறைக்கப்பட்டது.

இவ்வாறு அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரம் அதிகரிக்கப்படுவதற்கும் குறைக்கப்படுவதற்கு 18 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக பாராளுமன்றத்தில் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதனடிப்படையில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் 5க்கும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், சீ.பி ரத்நாயக்க,டிலான் பெரேரா, ஜோன் செனவிரத்ன, எம்.எஸ். தெளபீக், மஹிந்தானந்த அளுத்கமகே, நிமல் சிறிபாலடி சில்வா, பிரியங்கர ஹேரத், ரஞ்சித் சியம்பலாபிடிய, எஸ்.பி. திஸாநாயக்க, பந்துல குணவர்த்தன,துமிந்த திஸாநாயக்க, டளஸ் அழகப்பெரும, ஜயரத்ன ஹேரத், சுசில் பிரேமஜயந்த மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரே ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, 43 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 19,20 மற்றும் 22ஆம் திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.