நடிகர் கருணாஸ் சாகுவரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய 3 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்த சூழலில் அங்கு அரசியல் கட்சியினர் சார்பில் சுவரொட்டிகள், பதாகைகள், கொடிக்கம்பங்களை வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு திருவாடானை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி நிறுவனருமான நடிகர் கருணாஸ் தேவர் ஜெயந்தி விழாவில் அன்னதான பந்தல் அமைத்துள்ளார்.

அந்த இடத்தில் முத்துராமலிங்கத் தேவர் மதுரை விமான நிலையம் என்று பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றும் வைத்துள்ளார். இந்த கட் அவுட்டை பொலிசார் அங்கிருந்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாஸ் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், முக்குலத்தோர் புலிப்படையின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் உ. முத்துராமலிங்க பெயரைச் சூட்ட வேண்டும்! என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கிறேன் இதுவரை மத்திய மாநில அரசுகள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை!

ஆகவே நாங்கள் பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் பெயரில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்றத்தை பிரமாண்டமாக அமைத்து விழா வரவேற்பு வாயிலாக அமைத்தோம்.

இந்நிலையில் திடீரென்று கமுதி டிஎஸ்பி மணிகண்டன் இந்த மாதிரி தோற்றத்தை அப்புறப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, காவல்துறை அராஜக செயலைக் கண்டித்து பசும்பொன்னில் எனது சொந்த இடத்தில் 30.10.2022 அன்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.