” நாடு மீண்டெழுந்துவரும் நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் தேச துரோகிகளாவர்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்தன நேற்று தெரிவித்தார்.

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் இணைந்து கொழும்பில் இன்று நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை சாடும் வகையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் வஜீர மேலும் கூறியவை வருமாறு,

” கொழும்பில் மீண்டும் அணிதிரளுமாறு மக்களுக்கு சில குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இவர்கள் தேசத்துரோகிகள். எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோர் இந்நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கினால் அவர்களும் தேசதுரோகிகள்தான். சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தர ஆரம்பித்துள்ள நிலையில், பேரணிகளை நடத்தி, குழப்ப நிலை உள்ளது என்பதை காண்பிக்கவே இவர்கள் முற்படுகின்றனர்.

ஜனநாயகத்தை மதிக்கின்றோம். அதற்காக ஜனநாயகத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு இடமளிக்ககூடாது.

நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலையில் அதனை மீட்பதற்கு பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுதந்திரம் இருக்கின்றது, அதற்காக எல்லைமீறி செயற்படக்கூடாது. எனவே, தேசத்துக்காக நாம் ஒன்றிணைவோம். வீதிகளில் அலைவதால் பிரச்சினைகள் தீராது. போராட்டம் நடத்துவதால் கிடைக்கபோவது என்ன? ” – என்றார்.