கேரளாவில் காதல் கணவரை கொலை செய்த வழக்கில் இளம்பெண் கிரீஷ்மா தனது குடும்பத்துடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. கேரள எல்லை பாறசாலை பகுதியில் ஷாரோன் ராஜ் (23) என்ற இளைஞர் கஷாயத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் காதல் மனைவி கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். பணக்கார இளைஞரை திருமணம் செய்ய இருந்த நிலையில், ஷாரோன் அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டியதாக முதலில் அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணையில் மேலும் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கணவர் இறந்துவிடுவார் என ஜாதகத்தில் இருந்ததால், தனது பெற்றோரின் முன்னிலையில் சம்பிரதாயமாக ஷாரோனை திருமணம் செய்துள்ளார் கிரீஷ்மா. ஆனால் அவர் எப்போது இறப்பார் என்பது தெரியாததால், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

பின்னர் கஷாயத்தில் மொத்தமாக விஷம் கலந்து கொடுத்ததில் ஷாரோன் இறந்துள்ளார். ஷாரோனை திருமணம் செய்யும் போதே தன் பெற்றோருடன் இணைந்து கொலை திட்டத்தை தீட்டியுள்ளார் கிரீஷ்மா.

விசாரணையின் போது பாபநாசம் பட பாணியில் பொலிஸிடம் எப்படி பதில் கூற வேண்டும் என்றெல்லாம் கிரீஷ்மா தனது பெற்றோரிடம் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார். அதாவது யார், என்ன வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசி வைத்துள்ளனர்.

அதன்படி விசாரணையின் தொடக்கத்தில் பொலிஸாரை கிரீஷ்மாவின் குடும்பம் குழப்பியுள்ளது. இறுதியில் அவர்களது வாட்ஸ்அப் உரையாடல் மூலம் தான் கிரீஷ்மா குற்றவாளி என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், கிரீஷ்மாவின் வீட்டிற்கு பின்புறம் விஷ போத்தல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேபோல் கஷாயம் கொடுக்கப்பட்ட போத்தல் இருந்ததும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

கிரீஷ்மாவுடன் சேர்த்து அவரது தாய், தாய் மாமன் ஆகியோரும் குற்றவாளிகள் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் ஆரம்பத்தில் மெத்தனமாக இந்த வழக்கை பொலிஸார் கையாள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன் பின்னர் அம்மாநில அமைச்சர் கண்டித்த பின்னர் தான் பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.