கொட்டித் தீர்த்த கனமழையால் லண்டனில் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிது. மேலும் இரண்டு வரிசைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள M25 இன் ஒரு பகுதி உட்பட, சாலைகளில் திடீர் வெள்ளத்தால் வாகன சாரதிகள் போராடிவருவதாக தெரியவந்துள்ளது.
இதனிடையே, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கையை குறிப்பிட்டுள்ளது.
M25 பிரதான சாலையில் இரண்டு வரிசைகள் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. மேலும், ஹோம்ஸ்டேல் சுரங்கப்பாதையில் வாகன நெரிசலை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் வடக்கே செல்லும் A41 Hendon பாதை வெள்ளம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில், சில பகுதிகளில் 30 முதல் 40 மில்லி மீற்றர் மழை பொழியும் வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், வெஸ்ட் கென்சிங்டன், ஆக்டன் டவுன், ஆக்டன் சென்ட்ரல் மற்றும் டர்ன்ஹாம் கிரீன் ரயில் நிலையங்களும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளன.
மேலும், அரை மாதத்தில் பெய்ய வேண்டிய மழையானது ஒரே நாளில் பெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லண்டனில் சமீப காலங்களில் இதுபோன்ற ஒரு நிலையை பார்த்ததில்லை என மக்கள் பலர் குறிப்பிட்டுள்ளதுடன், மழை வெள்ளம் கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இணைந்திருங்கள்