கருப்பு மிளகு உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றது. ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்பது பழமொழி. உணவில் உள்ள விஷத்தை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு. அது மட்டும் இன்றி கருப்பு மிளகு கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தொண்டைப்புண், இருமலை கட்டுப்படுத்தும் மிளகு ரசத்தினை இன்றும் கிராமங்களில் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதை பார்க்கலாம். கிராமத்து ஸ்டைலில் மணக்க மணக்க மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி திப்பிலி – 10
கண்டதிப்பிலி – சிறிதளவு
மிளகு – 10
காய்ந்த மிளகாய் – 1
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
சீரகம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும். பிறகு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு பாத்திரம் எடுத்து அதில் அரிசி திப்பிலி, கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் விட்டு வறுக்கவும்.
பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதுடன் புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான தணலில் கொதிக்கவிடவும்.
பிறகு மற்றொரு பாத்திரம் எடுத்து அதை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
பிறகு, சீரகம், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். அவற்றை கொதிக்கும் ரசத்தில் சேர்த்து கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான மிளகு ரசம் தயார்.
இணைந்திருங்கள்