தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த பிப்ரவரி 17-ந் தேதி தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தமானுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இந்தோனேசியா கடற்படையினர் படகை சிறைபிடித்தனர். மேலும், அதில் இருந்த மீனவர்களையும் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இந்தோனேசியா நாட்டில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் 4 பேர் மட்டும் விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 4 பேர் கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் சிறையில் இருந்த மீனவர் மரிய ஜெசின்தாஸ் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
இதனையடுத்து, சிறையில் வாடும் 3 மீனவர்களை இந்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தோனேசிய சிறையில் வாடும் 3 மீனவர்களை மீட்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. வெளியுறவுத்துறை இணைச் செயலர் விஸ்வாஸ் சப்கலை, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இணைந்திருங்கள்