சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ராஜபக்ஷ சகோதர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்த, ராஜபக்ஷர்கள் தமக்கான ஆபத்தினை அவர்களை தேடிக் கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்ற பின்னர், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தினை கொண்டிருந்த பொதுஜன பெரமுன கட்சியை தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது.

ரணிலின் ராஜதந்திர நகர்வுகளில் ராஜபக்ஷர்கள் சிக்கித் தவித்து வருவதுடன், மூன்று பிரிவுகளாக உடைந்து செயற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

மஹிந்த, பசில், கோட்டபாய என மூன்று பிரிவுகளாக பொதுஜன பெரமுன கட்சி பிளவு பட்டுள்ளது. ஏற்கனவே பல தரப்பினர் கட்சியிலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்பட்டு வந்தாலும் அவர்கள் மஹிந்த மீதான விசுவாசத்துடன் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையின் அடுத்த அமைச்சரவை நியமனம் தொடர்பில் பல இழுபறிகள் காணப்படுகின்றன. இதற்கு மொட்டு கட்சியினரின் அமைச்சு பதவிகளுக்கான கோரிக்கையே காரணமாகும். தமக்கான அமைச்சு பதவிகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய வலுவான தலைவர்களை அவர்கள் தேடுகின்றனர்.

இதுவரை பலம் பொருந்திய நபராக காணப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ தற்போது செல்லாக்காசமாக மாறியுள்ளார். எனினும் பாராளுமன்றத்தில் எந்தவித அதிகாரமும் இல்லாத பசிலின் பின்னால் பெருந்தொகை மொட்டு கட்சி உறுப்பினர்கள் அணி திரண்டுள்ளனர்.

இந்த மாற்றமான மஹிந்த குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியையும் நாமலுக்கு பெரும் ஏமாற்றமும் கிடைத்துள்ளது. தந்தையின் பின்னர் கட்சியின் முழு அதிகாரத்தையும் தன்னுக்குள் கீழ் கொண்டு வர நாமல் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். எனினும் அதற்கான வாய்ப்பு தற்போது கைநழுவிப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவை விட பசிலுக்கு சக்தி உள்ளது என்பதை மொட்டு கட்சியினர் வலுவாக நம்புகின்றனர். இதன் காரணமாக நாமலையும் அவர்கள் புறந்தள்ளி செயற்படுகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் நேற்றைய நிகழ்வுகள் அமைந்துள்ளன.

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பசிலை வரவேற்க பெருந்தொகை மொட்டு கட்சி உறுப்பினர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். இதில் அமைச்சர்களும் அடங்கியிருந்தமை சிறப்பம்சம்.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே பசில் ராஜபக்ஷ இலங்கை வந்ததாகவும் அவரை முன்னிறுத்தியே சிங்களவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மொட்டு கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

மறுபுறத்தில் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய கோட்டபாய ராஜபக்ஷ அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளார். எனினும் அவரை மீண்டும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு மொட்டு கட்சியின் மற்றுமொரு குழு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

எனினும் கோட்டபாயவின் மீள் வருகையையும் மஹிந்த குடும்பம் விரும்பவில்லை. குறிப்பாக நாமல் விரும்பவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.

ரணில் தனது சரியான காய்நகர்த்தல் மூலம் ராஜபக்ஷ அணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்வரும் தேர்தல்களில் தனக்கான வாக்கு வங்கிகளையும் அதிகரித்து வருவதாக தென்னிலங்கை அரசியல் மட்டங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.