தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கதைகள் என்பது எவ்வளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விடக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாராளுமன்ற விவாதத்தில் ஒரு செய்தி முன்வைக்கப்பட்டிருந்தது. சுமந்திரன், இந்த அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை, இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை, குறிக்கப்பட்ட சில நாட்களுக்குள் பேச வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன அதனை பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக்கூறிய போது, அதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் தமிழ் தரப்பினர் ஒருமித்து வந்தால் பேசலாம் என்று கூறியிருந்தார்.
இந்த விடயத்தில் அவர்கள் உறுதியாக இருப்பார்களா என்பது எதிர்காலத்தில் தான் தெரியவரும்.
மைத்திரி, ரணில் இருந்த கடந்த பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் 4 வருடங்களாக பேசப்பட்டது. அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ காலத்தில் சர்வகட்சி உருவாக்கப்பட்டு பேசியும் அரசாங்கத்திற்கு தீர்வு திட்டத்தினை கொடுத்து இருந்தார்கள். அதனை மகிந்த ராஜபக்ஸ கண்டுகொள்ளவில்லை.
பின்பு மகிந்த ராஜபக்ஷ்வுக்கும் தமிழ் தரப்பினருக்கும் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதிலும் எதுவும் நடக்கவில்லை. தற்போது இவர்களே இந்த விடயங்களை பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என்று கூறுகிறார்கள்.
நேற்றைய தினம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்திற்கான ஒரு சமஸ்டி அரசியலமைப்பு தொடர்பாக பேச வேண்டும் என்று தாங்கள் எடுத்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இதனை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தமிழர் தரப்பு நிலைப்பாடு என்பது சமஸ்டி சம்மந்தமாக உள்ளது. அரசாங்கத்தை பொறுத்த வரையில் 13 க்கு மேலே போக தயாராக இருப்பார்களா அல்லது பேசுவதற்ககு முன்வருவார்களா என்ற கேள்வியும் இருக்கிறது.
மாகாண தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாத்திரம் அல்ல அரசாங்கம் தான் விரும்பியவாறு நியமனங்களை செய்கின்றது. வடக்கு மாகாணத்திற்கு சிங்கள உத்தியோகத்தர்களை நியமிப்பதனை தவிர்த்துக்கொண்டு தமிழ் உத்தியோகத்தர்களை நியமிக்கலாம். இவ்வாறு செய்தால் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும்.
தமிழர்களோடு உறவாடுவது போல் இவர்கள் காட்டிக்கொண்டாலும் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா ஆகியவற்றில் யுத்தத்திற்கு பிற்பாடு எத்தனை பௌத்த கோயில்கள் வந்திருக்கின்றன, எத்தனை இந்து கோயில்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த இடங்களில் எத்தனை சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களது இந்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது நிறுத்தப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும். எனவே நல்லிணக்கத்தை உருவாக்க விரும்பினால் காணிகள் அபகரிப்பதனை ஜனாதிபதி நிறுத்த முடியும். இதற்கு குழுக்களை அமைப்பதாக கூறுகிறாரே தவிர நிறுத்துவதாக கூறவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், இனி இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலான தீர்வுக்கு இவர்கள் ஒத்துக்கொள்வார்களா? என்பது தான் தற்போது இருக்கக்கூடிய விடயம்.
ஜனாதிபதி தேர்தல்களை நடத்த மாட்டேன் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று கூறுகிறார். அடுத்த 1, 2 வருடங்கள் தேர்தல்களை நடத்தாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகிறோம் என்று மக்களை ஏமாற்றக்கூடிய விடயம் தான் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா என்பது பெரியதொரு கேள்வியாக இருக்கிறது.
ஏற்கனவே தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விட கூடாது என்றார்.
இணைந்திருங்கள்