இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, நட்பு நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பது வழக்கம். கடந்த ஜனவரியில் நடந்த குடியரசு தின விழாவில் 5 மத்திய ஆசிய குடியரசு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் டெல்லியில் நடந்த இந்தியா – மத்திய ஆசிய மாநாட்டில் பங்கேற்றனர்.
அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் அப்தெல் ஃபதா அல்-சிசியை அழைக்க முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த அழைப்பை, எகிப்து அதிபர் அல்-சிசியிடம், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வழங்கினார். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.
இரு நாடுகள் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு இந்தாண்டுடன் 75 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா தலைமையில் 2022 – 23ம் ஆண்டில் நடைபெறும் ஜி-20 கூட்டத்தில் விருந்தினராக கலந்து கொள்ளவும் எகிப்துக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
இணைந்திருங்கள்