வட மாகாணத்துக்கும் தமிழ்நாடுக்கும் இடையில் மீள கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 500 பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 11ஆம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இதன்படி சென்னையில் இருந்து வாரத்திற்கு ஐந்து விமான சேவைகள் கோரப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை இலங்கையில் உள்ள கண்டி, நுவரெலியா போன்று வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்பும் குடும்பங்களுக்கு உதவவும், கடற்கரை விருந்தகங்களில் அவர்களது திருமண விழாக்களை நடத்தவும் ஏற்பாடுகள் செய்துக் கொடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் அதிகளவான பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள். மற்றொரு பகுதியினர் சூதாட்ட விடுதிகளுக்காக நாட்டிற்கு வருபவர்கள்.

இதேவேளை சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், அலையன்ஸ் எயார் யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு மூன்று முறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்த விமானக் கட்டணங்கள் குறித்து முடிவெடுப்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கிடையில் யாழ்ப்பாணம் மற்றும் பிற நகரங்களுக்கு இடையே சுற்றுலாப்பயணிகள் விரைவாக செல்லும் வகையில், உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் சுங்கப் பிரிவுகள் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.