திருச்சி அருகே மரம் அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயரை திருட வந்ததாக நினைத்து அடித்துக்கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மரம் அறுக்கும் ஆலை திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் திருச்சி சஞ்சீவி நகரில் வசித்து வரும் குஜராத்தை சேர்ந்த திரேந்தர் (வயது 42) என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

அந்த தொழிலாளர்கள் அங்கேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் திரேந்தர் ஆலையில் உள்ள அலுவலக அறையில் பணியில் இருந்தார். அப்போது, அறைக்குள் வந்த வாலிபர் ஒருவர் திரேந்தரின் செல்போனை எடுத்துக் கொண்டு ஓட முயன்றார். இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை பிடித்து செல்போனை வாங்கிக்கொண்டு விரட்டி அடித்தனர். அதன் பின்னர் இரவு 7.30 மணி அளவில் திரேந்தர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் மீண்டும் அந்த வாலிபர் மரம் அறுக்கும் ஆலையின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார். இதைபார்த்த அசாம் மாநில வாலிபர்கள் 4 பேர் அந்த வாலிபர் திருட வந்ததாக நினைத்து, அவரை பிடித்து கயிற்றால் ஒரு மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். பின்னர் அந்த வாலிபரை மரத்தில் கட்டியவாறு வைத்துவிட்டு 4 பேரும் தூங்க சென்றுவிட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மரத்தில் கயிற்றால் கட்டப்பட்டிருந்த வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அங்கிருந்த காவலாளி இதுகுறித்து ஆலை உரிமையாளர் திரேந்தருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பின் அங்கு வந்த அவர் மணிகண்டம் போலீசில் புகார் செய்தார். என்ஜினீயர் அதன் பேரில் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயாலயன் உள்ளிட்ட போலீசார் வந்து பார்த்தபோது, அந்த வாலிபர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் இறந்தவர் திருச்சி துவாக்குடிதெற்கு வாண்டையார் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் சக்கரவர்த்தி (33) என்றும், என்ஜினீயரான இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி என்ற மனைவியும், 6 மாதத்தில் ஒரு மகனும் உள்ளனர். மேலும் சக்கரவர்த்தி மது பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 2 நாட்களாக வீட்டில் இருந்த சக்கரவர்த்தி மனம் நலம் பாதிக்கப்பட்டவர் போல தனியாக பேசி வந்ததாகவும் தெரிகிறது. அடித்துக்கொலை நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து திடீரென தப்பி ஓடிய சக்கரவர்த்தி மணிகண்டம் பகுதிக்கு வந்து தான் என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில் மரம் அறுக்கும் ஆலைக்குள் நுழைந்தபோது திருட வந்ததாக நினைத்து அவரை வடமாநில தொழிலாளர்கள் மரத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.

இதில் மரத்தில் கட்டி வைத்த நிலையிலேயே சக்ரவரத்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசாம் மாநிலத்தை சேர்ந்த முஜிபுர் ஷேக் மகன் சோகிததுல்சேக் (22), அப்துல் குத்தூஸ் அலி மகன் பைசல் சாக் (36), யாசின் அலி மகன் மப்ஜில் ஹூக் (28), அணா உசேன் மகன் ரசீதுல் ரகுமான் (22) ஆகிய 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சக்கரவர்த்தியின் உடலை பார்த்து அவரது பெற்றோர், மனைவி கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.