ஆசிரியர்கள் தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்துகொண்டும் ஒழுக்கக் கேடான காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டும், தங்களது மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும்.

அதேபோல் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்களில் கணிசமானவர்கள், பொதுவெளியிலும் திரைமறைவிலும் குற்றங்களை இழைப்பவர்களாக, சமூகவிரோதிகளாக, ஊழல் பெருச்சாளிகளாக, ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்கின்ற நாட்டில், சட்டத்தையும் மக்களையும் நெறிப்படுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை.

‘கள்வனைப் பிடித்து விதானைக்கு வைத்தல்’ என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழியை சொல்வார்கள். அதாவது, குற்றமிழைப்பவனை ஒரு பதவிக்கு நியமித்தல் என இது பொருள்படும். இங்கே குற்றம் என்பது களவுமட்டுமல்ல; எல்லா வகையான சமூகவிரோத செயல்களும் அடங்கும்.

குற்றவாளியையே அதனைக் கட்டுப்படுத்தும் பதவியில் அமர்த்தினால், குற்றங்களைக் குறைக்கலாம் என்ற அர்த்தத்திலேயே இந்தப் பழமொழி பிரயோகிக்கப்படும். ஆனால், இதற்கு தலைகீழாக, அதாவது அந்தப் பதவி என்ற முகமூடிக்குள் ஒழிந்துகொண்டு குற்றமிழைக்கும் போக்கையே, இலங்கையில் குறிப்பாக அரசியலில் அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதின் ஆலோசகராக பதவி வகித்தவரும் பேராசியர் ஆஷு மாரசிங்கவை ஒரு வளர்ப்புப் பிராணியுடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், நாட்டில் தற்போது பேசுபொருளாகியுள்ளன. பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையை விட, மக்கள் மட்டத்தில் இந்த விடயம் பரபரப்பாகப் பேசப்படுவதையும் காணமுடிகின்றது.

மக்களை ஆள்வதற்கு பொருத்தமற்ற பண்புகளைக் கொண்ட அரசியல்வாதிகள், அதிகாரத் தரப்பினர் செய்த காரியங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இந்தச் சம்பவம் கடைசியில் தான் இணைந்து கொண்டுள்ளது. இந்தச் சம்பவமோ அல்லது இவரோ முதலும் அல்ல; கடைசியுமல்ல.

இலங்கை அரசியலில், இப்படியான சாயல்களைக் கொண்டவர்களின் வகிபாகம் தொடர்ச்சியாக இருந்து வருவதைக் காண்கின்றோம்.

தலைசிறந்த பண்பாடுள்ள அரசியல் தலைவர்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இலங்கை அரசியலில் இருக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆயினும், படிப்பறிவு அற்றவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், ஊழல் பெருச்சாளிகள், போதைப்பொருள் வியாபாரிகள், மதுக்கடை உரிமையாளர்கள், குற்றச் செயல்களுடன் தொடர்பைக் கொண்ட பலரும் இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கின்றார்கள்.

இன்னும் கண்டுபிடிக்கப்படாத ‘சிங்கங்களும் பிராணிகளும்’ இருக்கலாம். ஆனால், இந்த விவகாரத்தைத் தவிர்த்து விட்டு நோக்கினாலும் இலங்கை அரசியலில் கேடுகெட்ட அரசியல்வாதிகள் நிரம்பி இருப்பதை மக்கள் அறிவார்கள்.

குற்றங்களைத் தடுப்பதற்கு போதுமானளவுக்கு சட்டங்கள் இலங்கையில் இருக்கின்றன. அத்துடன் மக்களை நல்வழிப்படுத்துவதற்கான மதக்கோட்பாடுகளும் நிறையவே உள்ளன. ஆனாலும், குற்றச் செயல்களையும் ஒழுக்கக் கேடான காரியங்களையும், இன்றுவரை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது போயுள்ளது. உண்மையில், இந்த நவீன உலகில் இது ஏறுமுகமாக உள்ளதைக் காண்கின்றோம்.

இலங்கையின் அரசியலில் அல்லது பாராளுமன்றத்தில் பல கல்வியியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள், சமூக சிந்தனையாளர்கள் இருக்கின்றார்கள். ஆயினும், 225 லீற்றர் பாலில் சில துளி விசம் விழுந்ததைப் போல, ஒரு சிலரால் எல்லாம் கெட்டுநாசமாகி உள்ளது என்றுதான் தோன்றுகின்றது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், எம்.பிக்களின் கல்வித் தகைமை பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்படி, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 பேர் க.பொ.த உயர்தரம் சித்தியடையாதவர்களாக உள்ளனர் என்றும் கணிசமானவர்கள் சாதாரண தரம் கூட சித்தியடையவில்லை என்றும் பரபரப்பான தகவல் வெளியானது.

அதுமட்டுமன்றி, குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பைக் கொண்டவர்கள், முறைகேடாகப் பணம் உழைப்பவர்கள் எனப்பலர், மக்கள் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். சண்டியர்கள் முதற்கொண்டு, பாதாள உலகக் குழுக்களுடன் திரைமறைவு உறவைக் கொண்டவர்களும் அரசியல்வாதிகளாக வலம் வந்தனர்; வருகின்றனர்.

இதைத் தவிர, நாட்டையே கொள்ளையடித்த அரசியல்வாதிகளையும் ஆட்சியாளர்களையும் நாம் கண்டிருக்கின்றோம். நாடும் மக்களும் இந்த நிலைமைக்கு வருவதற்குக் காரணமானவர்கள் கூட, இப்போது சுதந்திரமாக நடமாடித் திரிவதையும் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.

பொலிஸ் துறையில் கணிசமானவர்கள் இலஞ்சத்தில் மூழ்கிக் கிடந்தால், சட்டத்தை எப்படி முறையாக நடைமுறைப்படுத்த முடியும்? குற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? அதேபோல், அரசியல்வாதிகளே இந்த இலட்சணத்தில் இருந்தால், நாட்டுப் பிரஜைகளை எப்படித் திருத்த முடியும்?

பாராளுமன்ற உறுப்பினராக, அரசியல்வாதியாக வருவதற்கு கல்வித் தகைமை முக்கியமானதாக ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகின்றது. ஆனால், கல்வித் தகைமை மட்டும் போதாது; அதைவிட, தனிமனித ஒழுக்கமும் சமூகசிந்தனையும் சட்டத்தை மதிக்கும் தன்மையும் பல்லினங்கள் பற்றிய புரிதலும் அவசியமாகும்.

‘பேராசியர்’ என்ற அடைமொழி கொண்ட ஒருவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை, இன்னும் விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அவ்வாறு நிரூபிக்கப்படுமாயின், கல்விக்கும் அப்பாலான ஒழுக்க விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற விடயம் இன்னுமொரு முறைவலுப்பெறுவதாக அமையும்.

ஓர் அரசியல்வாதிக்கு தனிப்பட்ட வாழ்க்கையும் பொதுவாழ்க்கையும் உள்ளது. ஆனால், இலங்கை போன்ற நாடுகளில், இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்ததாகவே இருக்கின்றது. அத்துடன், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பண்பியல்புகளும், ஏதோ ஒருவகையில் பொது அரசியலிலும் செல்வாக்கு செலுத்தலாம் என்பதையும் மறுக்கமுடியாது. அத்துடன் இப்போர்ப்பட்டவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்தவே முடியாது.
ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட அடிப்படையில் குறை நிறைகளோடுதான் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அதற்கு அரசியல்வாதிகள் விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், பொதுவாழ்வு என்று வந்துவிட்டால், தம்மை அவர்கள் மாற்றிக் கொள்வது தவிர்க்க முடியாதது.

ஏனெனில், சட்டத்தை மதிக்கின்ற, நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்றால், அதற்குமேலே இருப்பவர்கள் அதாவது ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், அதைவிடச் சிறந்த பண்பியல்புகளைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

இல்லாவிட்டால், நாம் யாரால் ஆளப்படுகின்றோம் என்பதை மக்கள் மீள்வாசிப்புச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை, இப்படியான மோசமான சம்பவங்கள் ஏற்படுத்திவிடுகின்றன.

மக்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படுவதற்குப் பதிலாக, நமது மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளே, அடிப்படை ஒழுக்கம் கூட இல்லாமல் ‘சண்டித்தனம்’ காட்டியதையும் நாட்டுமக்கள் கண்கூடாகக் கண்டார்கள். பாராளுமன்றுக்கு வெளியே, அவர்கள் செய்கின்ற கேடுகெட்ட செயல்களையும் அறிவார்கள்.

வறுமைக்காக தேங்காய் திருடிய பிள்ளை கைதான சந்தர்ப்பங்கள் நடந்துள்ளன. அறியாத்தனமாக குற்றத்தைப் புரிந்த நபர்களும் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் இலாவகமாகத் தப்பித்துக் கொண்டார்கள் என்பதே நிதர்சனம்.

அதேபோன்று, எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய தரப்பினர், எல்லாம் தெரிந்துகொண்டு குற்றமிழைப்பதும் அருவெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதும் அதைச்சட்டம் வேறுவிதமாகக் கையாள்வதும் ஏற்புடையதல்ல; என்றாலும், அது நமக்குப் புதிதல்ல.

‘விபச்சாரி’ விபச்சாரத்தில் ஈடுபடுவதும், பரவலாக ‘கள்வன்’ என அறியப்பட்டவன் களவில் ஈடுபடுவதும் ஆச்சரியமான விடயமல்ல. ஆனால், தன்னை ஒரு பெரிய ஆளாக, சமூக அந்தஸ்து உள்ளவராக, ஒழுக்கமுள்ளவராகக் காட்டிக் கொண்டு, திரைமறைவில் தலைகீழாகச் செயற்படுகின்ற ‘பசுத்தோல் போர்த்திய புலிகள்’தான் இங்கு ஆபத்தானவர்கள்.
இவ்வாறவர்கள் அரசியலில் மட்டுமல்ல, சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் இருக்கின்றார்கள். ஊரில் பெரியவர், ஆசிரியர், மதபோதகர், சாமியார், பரிகாரி….எனப் பலவேடங்களில் அவர்கள் திரிகின்றார்கள்.

ஆனால், இவர்கள் எல்லோரையும் விட, ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் முக்கியமானவர்கள். ஏனெனில், அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அதிகமானது. எனவே, முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள், படித்தவர்களாக இருப்பது மட்டுமன்றி, சட்டத்தை மதிப்பவர்களாகவும் மக்களை, நேசிப்பவர்களாகவும் தனிமனித ஒழுக்கத்தை எல்லாத் தருணங்களிலும் பேணுவர்களாகவும், தமது இலட்சணங்களை வகுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அந்தவகையில், இலங்கையில் கணிசமான அரசியல்வாதிகளின் நடத்தைக் கோலங்கள், இலட்சணங்கள் தொடர்ச்சியாக முகம் சுழிக்கும் வண்ணம் இருந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்போது பேசப்படும் செல்லப் பிராணி விவகாரம் இதில் ஒரு சம்பவம் மட்டுமே!

இதற்குமுன்னர் இடம்பெற்ற குற்றங்கள், ஒழுக்கக் கேடுகள், ஊழல்களுக்கு எதிராக அரசாங்கமும் சட்டமும், சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி இருந்தால், பிராணிகள் மட்டுல்ல, மக்களும் நாடும் கூட காப்பாற்றப்பட்டிருக்கும்.