முஸ்லிம் தனியார் சட்டம் ஒழிக்கப் படுகிறதா திருத்தப்படுகிறதா? என்ற கேள்வி இன்று சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது, கடந்த பல வருடங்களாக பேசுபொருளாக இருந்த விவகாரம் இன்று சூடு பிடித்திருந்தாலும் உயிர்த்த்த ஞாயிறு பயங்கரம், உயிர்கொள்ளும் பெருந்தொற்றின் அவலங்கள் என பல விவாகாரங்களால் முன்னுக்கு வராமல் (மூடிமைறக்கப்பட்ட) நிலையில் இருக்கிறது.

ஆட்சிமாற்றத்தின் பொழுது நீதியமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸூஃப் அவர்கள் தலைமையிலான நிபுணர் குழு ஒரு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது, கருத்து முரணுள்ள ஓரிரு விடயங்களை முதன்மைப்படுத்தி அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றுமொரு அறிக்கையை சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்கள் தலைமையில் கையளித்திருந்தது!

என்றாலும் தற்போதைய அரசு அந்த இரண்டு அறிக்கைகளையும் கிடப்பில் போட்டுவிட்டு சில அதிரடி தீர்மானங்களை எடுத்துள்ளதுஇ பிரதானமாக காழி நீதி மன்றங்களை ஒழித்தல், விரும்புகிறவர்கள் பொது சட்டத்தின் கீழ் விவாக விவாகரத்து பதிவுகளை விவகாரங்களை மேற்கொள்ள அனுமதித்தல் போன்ற விடயங்களைக் கூறலாம்.

திருமண வயதெல்லை, மணமகள் உடன்பாடு கையொப்பம் என சில விடயங்களில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அது குறித்து சில முன்மொழிவுகளை ஏற்கனவே சொல்லப்பட்ட அறிக்கைகள் முன்வைத்திருந்தன.

ஏனைய சமூகங்களுக்கான தனியார் சட்டங்களான கண்டிய சட்டம், தேசவழமைச் சட்டம் என்பவற்றில் கைவைக்காது நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்கள் ஊடாக அமைச்சரவை பத்திரங்களை தாக்கல் செய்து அவசர அவசரமாக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை சமுகத் தலைமைகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.

ஏற்கனவே இடைநிறுத்தப்பட்ட இடத்திலிருந்து முஸ்லிம் சமுகத் தலைமைகளை முறையாக கலந்தாலோசித்து மேற்படி விவகாரங்களை கையாளுமாறு நீதியமைச்சர் அலி சப்ரியை மற்றும் அரசை முஸ்லிம் சிவில் சன்மார்க்க தலைமைகள் கேட்டுக் கொண்டுள்ளன!

முஸ்லிம் அரசியல் கட்சிகளோ பாராளுமன்ற உறுப்பினர்களோ அவற்றில் உள்ள சட்ட முதுமாணிகள், தரணிகள் இது தொடர்பாக எத்தகைய நகர்வையும் எடுக்காது மெளனமாக இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

அதே வேளை காழி நீதிமன்றங்களில் உள்ள குறைபாடுகளை மாத்திரம் முதன்மைப்படுத்தி சில பெண்ணுரிமை வாதிகள் மேற்கொள்கிற ஒரு சில விடயங்களை மையமாக வைத்து சமுகத்தளத்திலும் இந்த விவகாரங்கள் குறித்த தப்பபிப்பிராயங்களை சில சலுகை பெறும் தரப்புக்கள் பரப்பி வருகின்றன.

குறைநிறைகளை கண்டறிந்து அவற்றை திருத்திக் கொள்ள இரண்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான பரப்புரைகளை உரிய தரப்புக்கள் நிறுத்திக் கொண்டு ஒரு சமூகமாக கூட்டுப் பொறுப்புடன் எமது உரிமைகளை தக்கவைத்துக் கொள்ள முன்வர வேண்டும்!

முஸ்லிம் சமூகத்தில் உள்ள சட்டத்தரணிகள், உலமாக்கள், புத்தி ஜீவிகள், கல்வி உயர்கல்விச் சமுகம், அமைப்புக்கள் ஆய்வு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் பூரண அறிவுடனும் தெளிவுடனும் விழிப்புணர்வுடன் தமது வரலாற்றுக் கடமையை செய்ய முன்வருதல் வேண்டும்.

முஸ்லிம் சமுகத்தின் அபிலாஷைகளை மனக்குறைகளை நீதியமைச்சராக உள்வாங்க முடியாத நிலையிருப்பின் அமைச்சர் அலி சப்ரி மேற்படி வரலாற்றுத் தவறுகளின் பங்காளராக இருந்து விடக் கூடாது என்றே ஒரு சகோதரனாக அவரிடம் கேட்டுக் கொள்ள முடியும்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்