கம்பளை, பல்லே தெல்தொட – வெத தென்ன தோட்ட ஆலயத்தில் இருந்த 100 வருடம் பழமையான சுவாமி சிலையினை திருடி, கலஹா பிரதேச கோவில் ஒன்றுக்கு கொண்டு சென்றமை தொடர்பாக பூசகர் ஒருவரும் அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் ஒருவரையும் எதிர் வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மேல் நீதி மன்ற இரண்டாம் இலக்க நீதவான் தர்சன அல்விஸ் உத்தரவிட்டார்.

மேற்குறிப்பிட்ட தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 3 ஆம் திகதி மாலை பூஜை செய்வதற்காக கோவிலுக்குச் சென்ற பொழுதே சிலைகாணாமல் போன விடயம் தெரியவந்துள்ளது

இதையடுத்து சிலை திருட்டு போனமை தொடர்பாக கலஹா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த சிலை கலஹா பகுதி கோவிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் வெள்ளிக்கிழமை (6) கைது செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை நீதவான் முன் நிறுத்திய பொழுதே மேற்கண்ட உத்தரவினை நீதவான் பிறப்பித்தார்

குறித்த சுவாமி சிலை 100 வருடங்களுக்கு மேல் பழமையானது என்பதினால் இது குறித்து தொல்பொருள் திணைக்களத்திடம் அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்