பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் குழுவொன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று வியாழக்கிழமை (22) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.

கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் விஹாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த பௌத்த பிக்குகள் இந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அன்றைய தினம் போராட்டத்திற்காகப் பூங்காவில் தற்காலிகக் கொட்டகையொன்றை அமைக்க முயற்சித்தபோது, பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதமும் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை போராட்டம் நடைபெறும் இடத்திலிருந்து வெளியேறப்போவதில்லை எனச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தங்கியிருந்த பிக்குகள் குழுவினர், பின்னர் பௌத்தசாசன அமைச்சுக்கு முன்பாகச் சென்று அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகத் தெரிவித்த பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமகாதேவி பூங்காவில் தொடர்ந்து தங்கியிருந்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கமைய, ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மகா சங்கத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது