வடகொரியா ஏறத்தாழ ஓராண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. ஏவுகணை சோதனை நடத்தியதை நேற்று உறுதி செய்த வடகொரியா அரசு இந்த 2 ஏவுகணைகளும் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய வல்லமை படைத்தவை என்றும் சோதனையின்போது இவை 600 கிலோமீட்டர் பயணித்து இலக்கை அடைந்ததாகவும் தெரிவித்தது.

மேலும் இந்த 2 ஏவுகணைகளையும் புதிய ஆயுதங்கள் என வடகொரியா ராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் ஏவுகணை சோதனை நடத்தியதற்காக வடகொரியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி ஜோ பைடனிடம் வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு ஜோ பைடன் பதிலளிக்கையில் ‘‘வடகொரியாவின் நடவடிக்கை ஐ.நா. தீர்மானங்களை மீறுவதாகும்.

இதுகுறித்து அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் ஆலோசனைகளை நடத்தி வருகிறோம்.‌ அவர்கள் பதற்றத்தை அதிகரிக்கும் வழியை தேர்வு செய்தால் அதற்கு ஏற்ப நாங்கள் பதிலளிப்போம். விளைவுகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் நான் ஒரு தூதரகத்துக்கும் தயாராக இருக்கிறேன். அது அணுசக்தி மயமாக்கலின் இறுதி முடிவில் நிபந்தனை செய்யப்பட வேண்டும்’’ என கூறினார்.இந்த நிலையில், ஏவுகணை சோதனையை விமா்சித்த அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. வட கொரிய ஏவுகணை சோதனைகள் குறித்து பைடன் தெரிவித்துள்ள கருத்து, பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது எனவும் வடகொரியா சாடியுள்ளது.