ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டங்கள், மிக வேகமாக முன்னெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மஹா நாயக்கத் தேரர்களை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆசி பெற்றனர். அதன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுதந்திரக் கட்சிக்கு புதிய முகமொன்றை வழங்கி, எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை உருவாக்கும் நோக்கத்திலேயே, கட்சி மீளக் கட்டியெழுப்பப்படவுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் எதிர்கால நலன் கருதியே, தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டு வருகின்றனர்.

அந்த ஒத்துழைப்பை வழங்கிக்கொண்டே, கட்சி என்ற ரீதியில், எதிர்காலத் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாட்டிலுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கத்தோலிக்கர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டி, இணைந்து செயற்படும் கட்சி என்ற அடிப்படையில் இந்தத் திட்டமிடல்கள் அமையும்.” என்றுள்ளார்.