சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வருடாந்த அறிக்கையை முன்வைத்துள்ள இச்சந்தர்ப்பத்தில், அரசு மேற்கொள்ளவுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஐ.தே.க. தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கிணங்க திட்டமிட்டபடி சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதா? இல்லையா? என்பதை அரசாங்கம் தெளிவாக வெளிப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களுடன் நேற்று அவர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியம் நேற்று முன்தினம் அதிகாலை முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான அறிக்கை சம்பந்தமாக ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கையிருப்பு குறைந்துள்ளமை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு,

அரசாங்கம் நாணயத்தாள்களை வெளியிடுவதில்லை என்ற அறிவிப்பு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஆண்டுக்கான அறிக்கை இலங்கையையும் சிம்பாப்வேயையும் சமநிலையில் வைத்து வெளியிடப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்