“துரதிஸ்டவசமாக நாடு படுபாதளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கு காரணமானவர்கள் அனைவரும் ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போன்று பிடில் வாசித்துக்கொண்டிருக்கின்றனர்.” என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று புதன்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கரு ஜயசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டிற்கு பாதிப்பு அல்லது தீங்கு நேர்ந்தால் உண்மையான இலங்கையர்களே அதிகம் பாதிக்கப்படப்போகின்றனர். இதன்காரணமாகவே நாட்டில் இன்று இடம்பெறும் விடயங்களை பார்க்கும்போது நாங்கள் ஆழ்ந்த கவலையடைகின்றோம்.

ஆனால் துரதிஸ்டவசமாக அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், அதற்கு காரணமானவர்கள் அனைவரும் ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்தது போன்று பிடில் வாசிக்கின்றனர்.

இதன் காரணமாக அவர்களை கண்களை திறந்து நாட்டின் மீது கவிழுகின்ற பெரும் துயரத்தை பார்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் பொதுமக்களை பலிகொடுக்கவேண்டாம் என நாங்கள் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம். அனைத்து கட்சிகளின் ஆதரவுடனும் இந்த பேரழிவிலிருந்து நாட்டை காப்பாற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.

இன்று நாங்கள் நாட்டிற்குள் இருந்து மாத்திரம் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை. சர்வதேச ரீதியிலும் நாங்கள் நெருக்கடியான நிலையில்உள்ளோம். ஜெனீவாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அதனை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தினால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து அனுபவம் மிக்க இராஜதந்திரிகள் வேறு விதமான கருத்தினை கொண்டுள்ளனர், அவர்கள் அதனை பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளும் இது குறித்து ஆராய்ந்துதங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் நாங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையின் பாரதூரதன்மையை இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் சரியாக புரிந்துகொண்டுள்ளார்களா? எங்கள் நாட்டின் மரியாதை மற்றும் கண்ணியத்தை நாங்கள் காப்பாற்றியுள்ளோமா?

நாங்கள் கறுப்புக்கண்ணாடி அணிந்துகொண்டு இது பற்றி பேசவில்லை. இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனீவா தீர்மானம் குறித்து நாங்கள் ஆழமாக ஆராய்ந்தோம். நாங்கள் எங்கள் நாட்டின் வெளிநாட்டுச்சேவை உருவாக்கிய தலைசிறந்த இராஜதந்திரிகளின் ஆலோசனைகளை பெற்றோம்- வெளிவிவகார நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றோம்.

இவையனைத்தையும் பக்கசார்பற்று நாங்கள் ஆழமாக ஆராயும் போது எங்கள் நாட்டின் ஆட்சியாளர்கள் எங்களை தோல்வியடையச் செய்துவிட்டார்கள் என எங்களால் மிகதெளிவாக தெரிவிக்க முடியும். அவர்கள் தங்கள் தோல்வியை உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேச அளவிலும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மனித உரிமை பேரவையில் இந்த நடைமுறை தொடர்ந்தால் எங்கள் நாடு மிகக் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடும். எவரும் எதனை சொன்னாலும் இதுவே உண்மை. இறுதியில் துயரங்கள் இந்த நாட்டின் அப்பாவி மக்களின் தோள்களிலேயே சுமத்தப்படும்.

ஜெனீவாவில் இந்த நிலையை நாங்கள் ஏன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது? இதற்கான பதில் தெளிவானது கடந்தகாலங்களில் எங்களுடன் இணைந்திருந்த பல நாடுகளை நாங்கள் இழந்துவிட்டோம்.ஆசிய பிராந்தியத்தில் மாத்திரம் இது இடம்பெறவில்லை சர்வதேச அளவிலும் இது நிகழ்ந்துள்ளது.

கடந்தகாலங்களில் பல நாடுகள் எங்களிற்கு ஆதரவை வழங்கின.அணிசேரா கொள்கையை முன்னெடுத்த நாடுஎன்ற அடிப்படையில்கடந்த காலங்களில் பல நாடுகள் எங்களிற்கு ஆதரவளித்தன.ஆனால் அந்த நாடுகளில் பல எங்களிற்கு எதிராக வாக்களித்துள்ளன.அல்லது வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டுள்ளன, இது எங்களை காயப்படுத்துகின்றது.

ஆனால் என்ன நடந்ததுஎன்பது குறித்து எங்களிற்கு ஒரு புரிதல் உள்ளது.இதன் காரணமாக முறைப்பாடு செய்வதன் மூலம் இந்த நாட்டு மக்களை நாங்கள் ஏமாற்றக்கூடாது. இது யதார்த்தத்தை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடப்பது தொடர்பானது. நவீன உலகில் எந்தநாடும் தனித்து செயற்படமுடியாது. நாங்கள் எப்போதும் எங்கள் பாரம்பரிய சகாக்களுடன் நெருக்கமாகயிருக்கவேண்டும்.” என்றுள்ளார்.