மொஹமட் செய்தால் கோசம் எழுப்பும் கிழக்கை மீட்பவர்கள் விஜயரத்ன செய்தால் குரல் எழுப்ப முடியாதவர்களாக இருக்கின்றார்கள் (பாராளுமன்ற உறுப்பினர் – இரா.சாணக்கியன்)
இந்த இடத்தில் ஒரு மொஹமட் வந்து ஏக்கர் கணக்கில் மரத்தை நாட்டியிருந்தால் இதற்கு எமது கிழக்கை மீட்க வந்தவர்கள் பெரிய கோசம் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்த இடத்திலே ஒரு விஜயரத்ன செய்யும் போது எந்தக் குரலையும் எழுப்ப முடியாத அளவில் அவர்கள் இருப்பது மனவேதனையான விடயம். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு பிரதேசத்தில் பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரையில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறித்த களவிஜயம் மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிலியாமடு பிரதேசத்தில் சட்டவிரோதமாகச் செய்யப்படும் மரமுந்திரிகைச் செய்கை தெடர்பில் ஆராய்வதற்காகவே நாங்கள் வந்திருக்கின்றோம். இங்கு வியரெட்ணவுக்கு இரண்டு ஏக்கர், திலகரெட்ணவுக்கு மூன்று ஏக்கர் என்று எழுதப்படடு மந்திரிகை மரம் நாட்டப்பட்டுள்ளது. கடந்த 2015ல் இருந்து நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேட்டவர்களுக்கெல்லம் இன்று இங்கு சிவில் பாதுகாப்பு அதிகாரிகளே பதில் சொல்லியிருக்கின்றார். தாங்கள் அப்போது இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைச் செய்யும் பொது 2015ம் ஆண்டு அதைத் தடை செய்ததாகச் சொல்லியிருந்தார்கள்.
மட்டக்களப்பில் நாங்கள் நான்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். இந்த மாவட்டத்தில் இருக்கும் பொதுவான பிரச்சினைகளுக்கு நாங்கள் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றுறு நாங்கள் அவர்களுடன் கதைத்திருந்தோம். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த இடத்தில் நான் சொல்லியிருந்தேன்.
ஆனால் இன்று பார்த்தால் இந்த இடத்தில் ஒரு மொஹமட் அல்லது அஹமட் வந்து ஏக்கர் கணக்கில் மரத்தை நாட்டியிருந்தால் இதற்கு எமது கிழக்கை மீட்க வந்தவர்கள் பெரிய கோசம் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்த இடத்திலே ஒரு விஜயரத்ன செய்யும் போது எந்தக் குரலையும் எழுப்ப முடியாத அளவில் அவர்கள் இருப்பது மனவேதனையான விடயம்.
அதேநேரத்தில் ஒரு தமிழ் விவசாயியோ அல்லது பண்ணையாளரோ வனப் பகுதிக்குள் சிறறு கத்தியுடன் வந்தால் கூட உடனடியாக அவர்களை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லும் வனஇலாகா திணைக்களம் இவ்வாறாக ஆறாயிரம் மரங்களை நாட்டும் வரைக்கும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதைக் கேட்க வேண்டும்.
இவ்வாறாக எமது மேய்ச்சற்தரைகள் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இரண்டு இரண்டு ஏக்கர்கள் செய்கைக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த மாவட்டத்தில் அபிவிருத்திக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கின்றார்கள் என்பதையும் கேட்க வேண்டும். நிச்சயமாக அவர்களும் எங்களுடன் இணைந்து இந்த விடயத்தைத் தட்டிக் கேட்பதற்குக் கைகோர்க்க வேண்டும. ஆனால் அவர்கள் இருவரும் மண் மாபியா செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை மிகவும் மனவேதனையுடன் சொல்ல வேண்டி இருக்கின்றது என்று தெரிவித்தார்.
இணைந்திருங்கள்