பா.நிர்மலா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

இயற்கை அழகு ஒன்றாகச் சங்கமித்து இருக்கக்கூடிய கண்டற் சூழற்தொகுதிகள் இன்று பொருளாதார நடவடிக்கைகளால் அதிகம் அழிக்கப்பட்டு வருகின்றன.

உவர்நீருடன் சேறு கலந்த அமிலத்தன்மையுடனான சதுப்பு நிலப் பிரதேசங்களில் வேறுஎந்தத் தாவர இனங்களும் வளர முடியாத சூழலில் சூழற் காரணிகளின் தாக்கங்களை எதிர்கொள்ளக் கூடியவாறான தனித்துவமான விசேட இசைவாக்கங்களைப் பெற்று அடர்ந்து பசுமையாக செழித்து வளர்ந்து காணப்படும் அதிசயத் தாவர இனங்களே இக் கண்டல் தாவரங்கள் (Mangrove plants) ஆகும்.

இவை மரங்களாகவும், செடிகளாகவும் மற்றும் ஒரு வித்திலைத் தாவரங்களாகவும் இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகின்றன. கண்டல் தாவரங்கள் உவர்நீர்ச் சூழலில் வளர்வனவாக இருந்தாலும் கழிமுகங்களிலும், கடனீரேரிகளில் கடல்நீர் உவர்ப்பை விடக் குறைந்த அளவிலான உவர்த்தன்மைகொண்ட நீர்ச் சூழலிலும் செழித்து வளர்கின்றன.

கண்டல் காடுகள் நுண்ணங்கிகள் முதல் முலையூட்டிகள் வரையிலான பலவகை உயிரினங்களின் வாழ்விடமாகவும் உள்ளன. விசேடமாக ஓகஸ்ட் மாத நடுப் பகுதியில் பிறநாடுகளிலிருந்து இலங்கையை நாடிப் புலம்பெயரும் ஈரநிலப் பறவைகளின் சரணாலயமாகவும் இக் கண்டற் சூழற் தொகுதிகள் திகழ்கின்றன.

கண்டல் காடுகளில் காணப்படுகின்ற தாவரங்கள், விலங்குகள், நுண்ணங்கிகள் போன்ற உயிர்ச்சூழல் காரணிகளுடன் இணைந்துள்ள உயிரற்ற சூழற் காரணிகள் அனைத்தும் ஒன்றாக ‘கண்டற் சூழற் தொகுதி’ என அழைக்கப்படுகின்றது. கண்டற் சூழற்தொகுதி மனிதர்களின் பொருளாதாரத்திற்கும் அதிகளவில் பங்காற்றி வருகின்றன.

உலகில் ஏறத்தாழ 112 நாடுகளில் கண்டல் காடுகள் காணப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இக்கண்டற் காடுகள் உலகின் மொத்த நிலப்பரப்பில் 18 மில்லியன் ஹெக்டேயர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகில் காணப்படும் மொத்த கண்டற் பரப்பின் 0.1 சதவீதமான கண்டல் காடுகள் மாத்திரமே இலங்கையில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார் ஆகிய 14 கரையோர மாவட்டங்களிலே இக்கண்டல் காடுகள் வியாபித்துள்ளன.

இலங்கையில் ஏறத்தாழ 6000 ஹெக்டேயர் மட்டுமே கண்டல் காடுகள் உள்ளன எனக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அறிக்கை கூறுகின்றது. இலங்கையில் கண்டல் காடுகள் அதிகம் உள்ள மாவட்டமாக புத்தளம் காணப்படுகின்றது. அதற்கு அடுத்ததாக யாழ்ப்பாணம் காணப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுகண்டல்,பெருங்கண்டல் என்ற இரு வகையான கண்டல் காடுகள் நிறைந்தஅழகானதொரு பிரதேசமே தென்மராட்சிப் பகுதியின் மிருசுவில் என்ற இடமாகும். இங்குசிறுகண்டல் காட்டுப் பகுதியில் கண்ணா (வெண்கண்டல்), சிறுகண்டல் (நரிக்கீரி), தில்லை மற்றும் தாழை போன்ற நான்கு வகையான கண்டல் தாவர இனங்களை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கண்ணாவை (வெண்கண்டல்) அவதானிக்கும் போது இத்தாவரமானது தோல் போன்ற சுற்றுக்கணியத்தால் மூடப்பட்டுள்ளது. இதன் முதிர்ந்தகாய்கள் தாய்மரத்தில் இருந்தவாறு ஓரளவு மட்டும் முளைகொண்டு நீர்ச்சூழலில் விழுந்து, பின்னர் மிதந்து செல்லும்போது நீரை உறிஞ்சிப் பொருமுவதன் காரணமாக சுற்றுக்கனியத்தில் பிளவுகள் ஏற்பட்டு, ஆதாரத்தை அடைந்ததும் வேரூன்றி வளர்கின்றன.

அதேபோன்று, சிறுகண்டல் (நரிக்கீரி) தாவரத்தின் வித்துக்கள் தாய்மரத்தில் இருந்தவாறே முளைத்து, வித்திலைக் கீழ்த்தண்டு கூராக நீண்டு வளர்ந்து தொங்கும். பருவமடைந்ததும் தாய் மரத்தை விட்டு இவ் வித்திலைக் கீழ்த்தண்டுகள் நிலைக்குத்தாக நீர்ச் சூழலில் விழுந்துக் கிடையாக மிதக்கும். இதன்போது நீர் உறிஞ்சப்பட்டு இதன் அடிப் பகுதி கனதியடைவதால் நிலைக்குத்தாக மாறி மிதக்கும். இதன்போது தகுந்த ஆதாரத்தை அடைந்ததும் வேரூன்றி வளர ஆரம்பிக்கும்.

தில்லைக் கண்டல் தாவரத்தின் காய்கள் முதிர்ந்ததும் இதன் சுற்றுக்கனியப் பிரிசுவர்கள் மூன்று பாகங்களாகப் பிளவுபட்டு வித்துக்கள் வெளியேற்றப்படும். இத்தில்லையின் வித்துக்கள் கருமை நிறமுடையதாக அல்லது கடும் கபில நிறமுடையதாகக் காணப்படும். இவ் வித்துக்கள் அளவில் சிறியதாகவும் பாரம் குறைந்தும் காணப்படுவதால், இலகுவாக நீரால் காவிச் செல்லப்பட்டுத் தகுந்த ஆதாரத்தை அடைந்ததும் முளைத்து வருகின்றன.

இக்கண்டல் தாவரங்கள் நிலத்தில் சாதகமான சூழ்நிலைகள் முளைத்தலுக்கு இல்லாத காரணத்தால் தாய்த் தாவரமானது அப் பழங்கள் மரத்தில் இருக்கும்போதே முளைக்கச் செய்து, பின்னர் அவற்றை கீழே விழச் செய்கின்றன. இவ் விசேட முளைத்தல் முறை ‘சீவகவித்து முளைத்தல் முறை’ என அழைக்கப்படுகின்றது. இவற்றைக் கண்டல் தாவரங்களில் அவதானிக்க முடிகின்றது.

மிருசுவில் சிறுகண்டல் காட்டுப் பகுதியில் உள்நாட்டு பறவையினங்கள் மட்டுமின்றி வெளிநாட்டுப்பறவை இனங்களையும் அவதானிக்க முடிகின்றது. வெளிநாட்டுப் பறவைகள் பெரும்பாலும் இந்தியாவின் சிலபகுதிகளில் இருந்தும் ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்தும் வந்துசெல்வதாக அப் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். இப் பறவையினங்கள் தமது சொந்த நாட்டில் சாதகமான காலநிலை மாற்றமடையும் போது, அக் காலநிலையிலிருந்து விலகி, இங்கு உணவைத் தேடி வருகின்றன.

‘இந்த வலசைப் பறவையினங்கள் சிறுகண்டல் காட்டுப் பகுதியில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதாகவும், அவற்றைச் சிலர் அழித்து உண்பதால் அவை கலைந்து போகின்றன. அவ்வாறு அப்பறவைகள் கலைந்து செல்வதனால் அவற்றின் முட்டைகளைக் காகம் போன்ற பறவைகள் சேதப்படுத்தி விடுகின்றன’ என அப் பிரதேச மக்கள் கவலையோடு குறிப்பிடுகின்றனர். உணவு தேடி தற்காலிகமாக பறவைகள் வந்து மீண்டும் தமது சொந்த நாட்டிற்குச் செல்லுதல்’ வலசைப் போதல்’ என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது.

இச் சிறுகண்டல் காட்டுப் பகுதியில் காணப்படும் உயிரினங்களாகப் பல்வேறு மீனினங்கள் மற்றும் நண்டினங்களும் காணப்படுகின்றன. அண்மைக் காலத்தில் வந்து சேர்ந்த மீனினமாக ‘திலாப்பியா’ காணப்படுகின்றது. இவ்வாறு பல்வேறு உயிர்ப் பல்வகைமை கொண்ட இக்கண்டல் தாவரப் பகுதியானது அப் பகுதியின் உயர்காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்துவனவாகவும் காணப்படுகின்றன. இச் செயற்பாட்டின் காரணமாக கண்டல் தாவரப்பகுதிகள் ‘அலையாத்திக் காடுகள்’ என்ற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகின்றன.

கண்டல் தாவரங்கள் மக்களின் பொருளாதாரத்திலும் பாரிய பங்களிப்பினைச் செய்கின்றன. இங்கு நன்னீர் மீன்பிடியில் மக்கள் அதிகம் ஈடுபடுவதால், அதன் மூலமாக நாளாந்த வாழ்க்கையைக் கொண்டு செல்லும் வருமானத்தை அம் மக்கள் பெற்றுக் கொள்கின்றனர். இவற்றை தமது நாளாந்த உணவுத் தேவைக்காகவும் அவற்றை அம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

மேலும், இக் கண்டல் தாவரத் தடிகள் அலங்காரப் பொருட்களின் உற்பத்திகாக வெளிநாடுகளுக்கு ஒரு கிராம் கண்டல் தடி நாற்பது ரூபாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கண்டல் தாவரத் தடிகள் மீன்வலைகள் மற்றும் நூல்களுக்குச் சாயம் போடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலமும் மக்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்கின்றனர்.

மேலும், வெட்டப்பட்ட கண்டல் மரத்தின் பகுதிகள் நீரில் போடப்படுவதால் அப்பகுதிகள் மீன்களின் வாழ்விடமாகவும், இரைகொல்லிகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டு அவை இனப் பெருக்கத்தை மேற்கொள்வதற்கான சிறந்த இடமாகவும் திகழ்கின்றன. இப் பகுதிகளில் சிலவாரங்களுக்குப் பின்னர் வலைகள் போடப்பட்டு மீன்களும் பிடிக்கப்படுகின்றன.

மேலும், கண்டல் காடுகள் உள்நாட்டுப் பறவைகள்,வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்விடமாகக் காணப்படுவதால், ஊரவர்களுடன்; வேறு பிரதேசங்களில் இருந்து வருகை தரக் கூடிய இளைஞர்கள் எனப் பலரும் மீன்களைப் பிடித்தல், படகுகளின் மூலம் கண்டல் உட்பகுதிக்குள் சென்று பறவைகளை இரசித்தல் மற்றும் இயற்கையை இரசித்துப் பொழுது போக்குதல் என இப் பிரதேசமே ஒரு சிறிய சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது.

இங்குள்ள கண்டல் தாவரங்கள் பெரும்பாலும் இப் பகுதி மக்களின் விறகுத் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுவதால், கண்டல் காடுகள் பெருமளவிலான பாதிப்பை எதிர்கொள்வதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக விறகுத் தேவைக்காக இக் கண்டல் வளங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதனால் அக் காடுகள் அழிவடைந்து வருவதோடு சட்டத்திற்குப் புறம்பான தங்கூசி மீன்பிடி முறையினால் மீனினங்களும் அழிவடைந்து வருவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அப் பகுதியை நம்பி தொழில் புரிகின்ற மக்களினது வாழ்க்கை பாதிப்படைவதுடன் இயற்கையை அழகுபடுத்துகின்ற பறவை இனங்களும் அழிவடைந்து வருவதை அப் பகுதியில் அவதானிக்க முடிகின்றது.

நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிகப் பெரிய பொக்கிஷமாகத் திகழும் கண்டல் காடுகளைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமை ஆகும். இது பற்றிய தெளிவு மக்கள் மத்தியில் காணப்படும் பட்சத்தில் இயற்கை வளங்களை அழிவடையாது பாதுகாத்துக் கொள்ள முடியும்.