காணாமல் போன, இந்தோனேஷிய நீர்மூழ்கி கப்பலின் உடைந்த சில பாகங்கள் கிடைத்ததை அடுத்து, 53 பேருடன், அக்கப்பல் மூழ்கி விட்டதாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்காசியாவைச் சேர்ந்த, இந்தோனேஷிய கடற்படையைச் சேர்ந்த, ‘கே.ஆர்.ஐ., நங்கலா 402’ என்ற நீர்மூழ்கி கப்பல், சமீபத்தில் பாலி தீவு அருகே சென்ற போது, மாயமானது.

இதையடுத்து, இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள், இந்தியாவின், டி.எஸ்.ஆர்.வி., என்ற நீர்மூழ்கி கப்பல் ஆகியவை, தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதில், அமெரிக்க மீட்பு விமானமும் இணைந்துள்ளது. இந்நிலையில், இந்தோனேஷிய கடற்படை தளபதி யுடோ மர்கோனோ, செய்தியாளர்களிடம் பேசியதாவது:நீர்மூழ்கி கப்பல், கடைசியாக பாலி தீவு அருகே காணப்பட்டது. அதன் பின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனால், கப்பல் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாலி தீவருகே, மசகு எண்ணெய் பாட்டில், குளிரூட்டும் குழாயின் உடைந்த பாகம் உள்ளிட்ட சில பொருட்கள் கிடைத்துள்ளன.

அவை, நீர்மூழ்கி கப்பலுக்குச் சொந்தமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், கப்பல் மூழ்கி விட்டதாக முடிவுக்கு வந்துள்ளோம். ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. கப்பல் வெடித்திருந்தால், சுக்கு நுாறாக சிதறியிருக்கும். அந்த சத்தம், கட்டுப்பாட்டு அறையில் உள்ள, ‘சோனார்’ சாதனத்தில் பதிவாகியிருக்கும்.

ஆனால் அவ்வாறு எதுவும் பதிவாகவில்லை. கப்பல், 400 – 500 மீட்டர் ஆழத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, அழுத்தம் காரணமாக சில பாகங்கள் உடைந்திருக்கலாம். அவற்றில் சில பாகங்கள் தற்போது கிடைத்துள்ளன. கப்பலில் மூன்று நாட்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருந்துள்ளது. அதனால், அதில் இருந்த, 53 பேர் உயிருடன் இருக்கும் வாய்ப்பு குறைவு.இவ்வாறு அவர் கூறினார்.