தொண்ணூறுகளின் தொடக்கத்தில் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கை, தமிழ்நாட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? தொழிற்சந்தையில் தமிழ்நாட்டின் முகம் எப்படி உருமாறியது?

1991ல் அப்போதைய இந்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் புதிய பொருளாதாரக் கொள்கையை அமல்படுத்தி, பல துறைகளிலும் கதவுகளைத் திறந்தார். அதன் மூலம், சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களால் தன்னிச்சையாக செயல்பட முடிந்தது. ஆனால், இந்த வாய்ப்புகளைத் தொடக்கத்தில் வெகு சில மாநிலங்களே துடிப்புடன் பயன்படுத்திக் கொண்டன. அதில் தமிழ்நாடும் ஒன்றாக இருந்தது.

தொழில்துறையும் தமிழ்நாடும்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது புதிய பொருளாதார கொள்கையோடு துவங்கியதல்ல. நீண்ட காலமாகவே, இந்தியாவின் வேறு சில மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு, தொழில்வளர்ச்சியில் மேம்பட்ட ஒரு மாநிலமாகத்தான் இருந்தது.

இந்தியாவின் முதல் சைக்கிள், இந்தியாவின் முதல் மோட்டர் சைக்கிள் போன்றவை அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில்தான் உருவாயின. ஸ்டாண்டர்ட் மோட்டர்ஸ், அசோக் லேலாண்ட் போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்களும் இங்கே ஏற்கனவே செயல்பட்டுவந்தன.

ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனம் சென்னைக்கு அருகிலேயே கார்களைத் தயாரித்துக்கொண்டிருந்தது. இந்தியாவின் முதல் சொகுசு காரான ‘ஸ்டாண்டர்ட் 2000’ இங்கிருந்துதான் தயாரிக்கப்பட்டது. அதேபோல, டி.டி.கே. குழுமம், டி.வி. சுந்தரம் ஐய்யங்கார் சன்ஸ், அமால்கமேஷன்ஸ், ரானே போன்றவையும் தமிழ்நாட்டில் விறுவிறுப்புடன் செயல்பட்டுவந்தன.

தாராளமயமாக்கத்திற்கு முன்பாகவே டி.வி.எஸ், ரானே போன்ற நிறுவனங்கல் வாகன உதிரிபாக உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்தப் பிரிவில் தமிழ்நாடு நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தது.

1965ல் எம். பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ) துவங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த அமைப்பின் மூலம் பல தொழில் உரிமங்களுக்கு விண்ணப்பித்து, தனியார் துறையுடன் பல தொழிற்சாலைகள் துவங்கப்பட்டன. ஸ்பிக், டைட்டன், தமிழ்நாடு பெட்ரோகெமிக்கல்ஸ் போன்ற பல நிறுவனங்கள் அந்தத் தருணத்தில்தான் துவங்கப்பட்டன.

1971ல் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் துவங்கப்பட்டு, தொழிற்சாலை வளாகங்களும் தொழிற்சாலைகளுக்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டன. 1980களிலேயே டாடா கன்சல்டன்சி நிறுவனம் சென்னையில் பெரிய அளவில் விரிவாக்கங்களைச் செய்து கொண்டிருந்தது.

ஆனால், 1980களின் பிற்பகுதியில் இந்தியா முழுவதும் பெரிய பெரிய தொழிற்சாலைகளும் மிகப் பெரிய தொழிலதிபர்களும் உருவாக ஆரம்பித்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் இருந்த தொழிலதிபர்கள் மிகச் சிறிய அளவில் முதலீடுகளைத் தேடுவது, சிறிய விரிவாக்கம் செய்வது என்பதிலேயே தங்கள் கவனத்தை முடித்துக்கொண்டனர்.

ஆனந்த் ஸ்ரீநிவாஸன்

1991க்குப் பிந்தைய பாய்ச்சல்

இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் திறக்கப்பட்டபோதுஅந்த வாய்ப்பை தமிழ்நாடு பெருமளவு பயன்படுத்திக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அந்த நேரத்தில் இம்மாதிரியான ஒரு தருணத்திற்குத்தான் தமிழ்நாடு காத்துக் கொண்டிருந்தது என்று சொல்ல வேண்டும்.

80களில் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், பல பொறியியல் பட்டதாரிகள் 90களின் துவக்கத்தில் படிப்பை முடித்து வேலைக்குத் தயாராக இருந்தார். மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டிருந்த பல்தொழில்நுட்பக் கழகங்களும் ஐடிஐகளும் திறன் மிகுந்த தொழிலாளர்களை உருவாக்கி வைத்திருந்தன. 1991ல் பல நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் துவங்க விரும்பியபோது, இதெல்லாம் சாதகமான அம்சங்களாக அமைந்திருந்தன.

90களுக்குப் பிறகு தாராளமயக் கொள்கையினால் ஏற்பட்ட தொழில்நிறுவனங்கள், அதனால் ஏற்பட்ட வேலை வாய்ப்புகள், அதனால் உருவான பொறியியல் கல்லூரிகள் என சங்கிலித் தொடர் விளைவுகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டன என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

“90களுக்குப் பிறகான தமிழ்நாட்டின் வளர்ச்சி எல்லோரும் வெளிப்படையாகப் பார்க்கக்கூடிய ஒன்று. சென்னை அடையாறிலிருந்து மகாபலிபுரம் வரை உள்ள சாலையில் ஏற்பட்டிருக்கும் கட்டுமானங்கள், இந்த வளர்ச்சியின் அடையாளங்கள். 1980களின் மத்தியில் தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பொறியியல் கல்லூரிகள் இருந்தன. இப்போது எத்தனை இருக்கின்றன? 2012வரை பொறியியல் என ஒரு பட்டம் பெற்றால், ஒரு ஐடி நிறுவனத்தில் நிச்சயம் வேலை கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இது பொருளாதார தாராளமயமாக்கத்தினால்தான் ஏற்பட்டது” என்கிறார் பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

அதாவது, 1993ல் நரசிம்மராவ் தலைமையிலான இந்திய அரசு சர்வதேச நிதியத்திடம் கடன் பெற்றது. அது தொடர்பாக பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் கார்ட்டூன் ஒன்றை வரைந்தார். அதில், சர்வதேச நிதியத்திலிருந்து நரசிம்மராவ், மன்மோகன் சிங் ஆகிய இருவரும் வெளியில் வருவதைப் போலவும் அவர்கள் கைகள் முறுக்கப்பட்டிருப்பதைப் போலவும் அந்தக் கார்ட்டூன் இருந்தது. 2009ல் இதே சர்வதேச நிதியத்திடம் பணம் இல்லாதபோது, தங்களிடமிருந்த தங்கத்தை அடகு வைக்க முடிவெடுத்தது அந்த அமைப்பு. அந்த ஏலத்தில் பங்கேற்ற மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, தங்கத்தை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்தது.

“அந்த அளவுக்கு நம்முடைய முன்னேற்றம் இருந்தது. புதிய பொருளாதார கொள்கையால், பெரிதும் தென் மாநிலங்களும் ஒடிஷாவுமே பயன்பெற்றன” என்கிறார் ஆனந்த்.

புதிய பொருளாதார கொள்கையின் சாதகமான விளைவுகளை தமிழ்நாடு துவக்கத்திலேயே அனுபவிக்க ஆரம்பித்து. 1994ல் இருந்து கிராமம், நகரம் ஆகிய இரு பகுதிகளிலுமே வறுமை குறைய ஆரம்பித்தது.

புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1991க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 7 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது அகில இந்திய சராசரியைவிட அதிகம். விவசாயத்திலிருந்து வேறு பணிகளைச் சார்ந்திருப்பது தமிழ்நாட்டில் வெகுவாக அதிகரிக்க ஆரம்பித்தது.

தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, தொழிலாளர்களின் எண்ணிக்கை, வெவ்வேறு விதமான தொழிற்சாலைகள் என தொழில்வளர்ச்சியில் இந்தியாவிலேயே முதலிடத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது தமிழ்நாடு. ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துப் பொருட்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக உருவெடுக்க ஆரம்பித்தது தமிழ்நாடு. ஹுண்டாய், போர்டு, ரெனால்ட், பிஎம்டபிள்யு போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளைத் துவங்கினர்.

ஆனால், இவை தாமாக நிகழவில்லை. மாநில அரசு, தாராளமயமாக்கல் கொண்டுவந்த வாய்ப்புகள் குறித்து அடுத்தடுத்துவந்த தமிழக அரசுகள் கவனமாகவே இருந்தன. அதைப் பிரதிபலிக்கும் வகையில், “1991ஆம் ஆண்டில் தாராளமயமாக்குதல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தக் கால கட்டத்திலிருந்து, நாட்டின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதில், தனியார் துறையின் பங்கு அதிகரிக்க ஆரம்பித்தது. தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உருவானபொழுது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது” என தாராளமயமாக்கலை தமிழ்நாடு அரசு எப்படிப் பயன்படுத்திக் கொண்டது என்பதை தமிழ்நாடு அரசு தனது தொழில்துறை இணையதளத்தின் முகப்பிலேயே சுட்டிக்காட்டியிருக்கிறது.

1992ல் தொழில் கொள்கை வெளியிடப்பட்ட நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக தகவல்தொழில்நுட்பக் கொள்கையை வெளியிடப்பட்டது தமிழ்நாடு. 340 கோடி ரூபாய் செலவில் பழைய மகாபலிபுரம் சாலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு என டைடல் பார்க் என்ற தொழிற்பூங்கா கட்டப்பட்டது. அடுத்ததாக சிறுசேரியில் ஒரு பெரிய தகவல்தொழில்நுட்ப பூங்கா உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. தொடர்ந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இதனால், தற்போது நாட்டிலேயே அதிக சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (மொத்தம் 57) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்துவருகிறது. தவிர, நாட்டிலேயே அதிக நேரடி அந்நிய முதலீட்டைப் பெறும் மாநிலமாகவும் தமிழ்நாடு இருந்து வருகிறது.

பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பெரும்பாலான பணிகளை இங்கிருந்தே மேற்கொள்கின்றன. ஃபோர்ட், ஷெல் போன்ற பெரிய நிறுவனங்களின் பிபிஓக்கள் தமிழ்நாட்டில்தான் இயங்குகின்றன.

“தாரளமயமாக்கத்தையும் தமிழ்நாட்டின் சமூக நீதித் திட்டங்களையும் பிரித்துவிட முடியாது. எல்லாத் தரப்பினரும் படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்குமான வாய்ப்புகள் இந்த காலகட்டத்தில்தான் உருவாயின” என்கிறார் ஆனந்த் ஸ்ரீநிவாஸன்.

அவர் சொல்வதைப் போலவே, மாநிலத்தில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி மனித வள மேம்பாட்டிலும் எதிரொலித்தது. குழந்தைகள் இறப்பு விகிதம், சத்துக்குறைபாடு ஆகியவை இந்தியாவிலேயே மிகக் குறைவாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகையில் ஆறாவது இடத்தில் உள்ள தமிழ்நாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் பொருளாதார அளவிலும் இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. Fortune 500 நிறுவனங்களில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கள் அலுவலகங்களையோ, தொழிற்சாலைகளையோ, பிபிஓக்களையோ நிறுவியிருக்கின்றன. 2000வது ஆண்டிலிருந்து இந்தியாவில் செய்யப்படும் நேரடி அன்னிய முதலீட்டில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பகுதி (9%) தமிழ்நாட்டில்தான் செய்யப்படுகிறது என்கிறது தமிழ்நாடு அரசு. அதேபோல, இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருகளில் பத்தில் ஒரு பகுதியும் (9.8%) தமிழ்நாட்டிலிருந்துதான் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் மேம்பட வேண்டியவை நிறைய இருக்கின்றன என்றாலும்கூட, தாராளமயமாக்கத்தின்போதும் அதற்குப் பின்வந்த ஆண்டுகளிலும் மாநிலம் அடைந்த முன்னேற்றம் புறக்கணக்கத்தக்கதல்ல. தாராளமயமாக்கம், தொழில்மயமாக்கம் ஆகியவற்றின் மூலம் கிடைத்த நிதி சமூக பாதுகாப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய வசதியாக இருந்தது. இதன் மூலம் மாநிலத்தின் சுகாதார வசதி, உற்பத்தி ஆகியவை மேம்பட்டிருக்கின்றன.

ஆனால், விவசாயத்தைச் சார்ந்திருப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவது, மாநிலம் வேகமாக நகர்மயமாகிவருவது போன்றவை பல தரப்பினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. மற்றொரு பக்கம், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் குவிவது திருப்பூர் போன்ற பல மாவட்டங்களில் சமூகரீதியிலான முரண்பாடுகளை ஏற்படுத்தவும் துவங்கியிருக்கின்றன.