போர்ப்ஸ் இந்தியா இதழ் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்த கோடீஸ்வரர் பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் பட்டியலில் 91-வது இடத்தில் உள்ளார். இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார்.

அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார். இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 4.8 மில்லியன் டாலராக இருந்தது. நடப்பாண்டில் சொத்து மதிப்பு 17.7 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 12 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. அதேநேரம் கடந்த 2019 மற்றும் 2020-ல் இவரின் சொத்து மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டில் சொத்து மதிப்பு 8.8 மில்லியன் டாலராக இருந்தது. 2019-ல் 5.9 மில்லியன் டாலராகவும், 2020-ல் 4.8 மில்லியன் டாலராகவும் சரிவினை கண்டிருந்தது.

தனது கணவரின் வெற்றி மந்திரத்தின் மூலம் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் சாவித்ரி ஜிண்டால் உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் 13 பெண் கோடீஸ்வரர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்