இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் 10 வயதிற்கு உட்பட்ட 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் 10-18 வயதிற்கு உட்பட்ட 26 ஆயிரத்து 143 குழந்தைகள் கொரோனானவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா வைரஸால் 18 வயதிற்குட்பட்ட 14 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

இந்த நிலையில், 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன என்று அவர் கூறினார்.

இதன்மூலம் மற்றுமொரு கொரோனா அலையைத் தவிர்க்க முடியும் என்று அதிகாரிகள் நம்புவதாக வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் கூறினார்.