எம்.எஸ்.தீன் –
அரசியல் கட்சி எனும் போது அதற்கு கொள்கைகள் இருக்க வேண்டும். குறித்த கட்சி எந்த சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்றதோ அச்சமூகத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அக்கொள்கைகள் இருக்க வேண்டும். ஆனால், முஸ்லிம்களின் தாய்க்கட்சி என்றழைக்கப்படும் முஸ்லிம் காங்கிரஸ் அதன் கொள்கைகளை படிப்படியாக இழந்துள்ளது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவரும் எதனைச் செய்தாலும் அதுவே கட்சியின் கொள்கைகள் என்ற பரிதாபநிலையை அக்கட்சி அடைந்துள்ளது. இதே நிலையிலே ஏனைய முஸ்லிம் கட்சிகளும் உள்ளன. கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் மூலமாக முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவொரு கொள்கையும் கிடையாது என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது. 20வது திருத்தச் சட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானித்தது. ஆனால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை தவிர ஏனையவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். கட்சித் தலைவரினதும், கட்சியினதும் முடிவோடு நாங்களில்லை என்று நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் நடந்து கொண்டார்கள்.
இந்த நிலைப்பாடு முஸ்லிம் காங்கிரஸினதும், அதன் தலைவர் ரவூப் ஹக்கீமினதும் கௌரவத்திற்கு எதிரான நடவடிக்கையாகவே அமைந்தது.இதனால், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஆதரவாளர்களும், உயர்பீட உறுப்பினர்களும் தெரிவித்திருந்தார்கள். அதன்படி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குரிய விசாரணைகள் நடைபெற்றன.
இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முடியவில்லை. ரவூப் ஹக்கீம் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர்களை கடும்தொனியில் பல இடங்களில் விமர்சனம் செய்தார். இதனைத் தவிர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்போம் என்ற அறிவிப்பு ஆதாரவாளர்களை திருப்திபடுத்துவதற்காக சொல்லப்பட்டதென்று தற்போது நிருபிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ரவூப் ஹக்கீமுக்கு நெருங்கிய உறவினரும், விசுவாசியுமாவார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தௌபீக் தோல்வியடைந்த போதிலும், அவரை ரவூப் ஹக்கீம் தேசியப்பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் செய்தார். 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக கறுப்புபட்டி அணிந்து வந்தவர்களில் தௌபீக்கும் ஒருவர். 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக கருப்புப்பட்டி அணிந்திருந்த நிலையிலேயே அத்திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்தார்.
இதனால், தௌபீக்கின் தலைமைத்துவ விசுவாசத்தின் மீது ஆதரவாளர் சந்தேகம் கொண்டார்கள். இவ்வாறு கடைசி வரைக்கும் தலைவரை நம்பவைத்துவிட்டு, இறுதி நேரத்தில் தலைவருக்கும், கட்சியின் முடிவுக்கும் எதிராக செயற்பட்ட ஒருவரை கட்சியின் உயர்பீடத்தில் எந்தவொரு முடிவும் எடுக்காத நிலையில் திடீரென்று தேசிய அமைப்பாளராக நியமனம் செய்துள்ளதாக அறிவிப்பு செய்தமையால் ரவூப் ஹக்கீமின் அரசியல் நகர்வுகள், கருத்துக்கள், முடிவுகளில் பலத்த சந்தேகங்கள் எழுக்கின்றன.
20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ரவூப் ஹக்கீமின் ஆதரவு இருந்துள்ளதா என்றும், அவர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் போர்வைக்குள் ஆளுங்கட்சி தரப்பினராக செயற்படுகின்றாரா என்று பலமாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. ஆளுங்கட்சிக்கு ஒரு முகமும், எதிர்க்கட்சிக்கு இன்னொரு முகமும், பொது மக்களுக்கு வேறு ஒரு முகமுமாக கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், தலைவரும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவொரு விடயத்திலும் கொள்கையும், இலட்சியமும் கிடையாதென்பது மீண்டும் ஒரு தடவை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் ஆதரவாளர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் கட்சியின் ஆதவன் எழுந்து வந்தான் பாடலுக்கு ஆட்டம் போடவும், கட்சியின் தலைவரினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பிரச்சாரங்களை கண்களை மூடிக் கொண்டு நம்பிக்கை கொள்ளும் நிலையிலேயே இன்று வரைக்கும் உள்ளார்கள்.
கொள்கையும், இலட்சியமும் இல்லாதவர்களினால்தான் நினைத்தமாதியெல்லாம் கதைப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் முடியும். தேர்தல் காலங்களில் கோட்டாவும், மஹிந்தவும் இனவாதிகள் என்றார்கள். தேர்தல் முடிந்ததும் அவர்கள் இருவரும் இனவாதிகளல்லர். முஸ்லிம் சமூகத்திற்கு தேவையானவர்கள் என்றும் சொல்லுகின்றார்கள். இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
ஆயினும், கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்பட்டுள்ள ஒருவருக்கு தேசிய அமைப்பாளர் பதவியை வழங்கியமையால் ஒழுக்காற்று நடவடிக்கை என்பது கேலிக்கூத்தாகியுள்ளது. அத்தோடு, கட்சியின் எந்த தீர்மானத்தையும் பின்பற்ற வேண்டியதில்லை என்றதொரு நிலைப்பாட்டை ஏனையவர்கள் எடுக்கவும் வழி சமைத்துள்ளது. கட்சிக்குள் என்ன நடந்தாலும், சமூகம் என்ன இழப்புக்களை சந்திக்க வந்தாலும் தமது தலைமைப் பதவிக்கு ஆபத்து வந்துவிடக் கூடாதென்பதில் ரவூப் ஹக்கீம் மிகவும் கவனமாக இருப்பார்.
அதற்காக எந்த விட்டுக் கொடுப்பையும், அரசியல் நாடகத்தை ஆடுவதற்கும் ரவூப் ஹக்கீம் தயக்கம் காட்டுவதில்லை. இதே வேளை, மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதின் எதிர்கொண்டுள்ளதனைப் போன்று தாமும் நெருக்கடிகளுக்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காகனதொரு ஆபத்து தவிர்ப்பு நடவடிக்கையாகவும் தௌபீக்கான தேசிய அமைப்பாளர் நியமனம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
றிசாட் பதியூதீன் 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய தமது கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை ஒழுக்காற்று நடவடிக்கைகளின் பிரகாரம் கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைத்துள்ளமையும் அரவது இன்றைய நெருக்கடி நிலைக்கு காரணமென்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தமது பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து இடைநிறுத்தம் செய்தால் தமக்கும் நெருக்கடிகள் ஏற்படலாம். அத்தோடு தலைவர் பதவிக்கும் ஆப்பாக அமையலாமென்ற அச்சமும் ரவூப் ஹக்கீமிடம் இல்லாமலில்லை.
அதனால், 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு கட்சியினது முடிவுகளுக்கு மாற்றமாக ஆதரவு வழங்கியவர்களுக்கு தாம் எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என்று காட்டுவதற்குரியதொரு அடையாளமாகவே தௌபீக்கை தேசிய அமைப்பாளராக நியமனம் செய்தமைக்குரிய பின்னணி என்றும் தெரியவருகின்றது.ரவூப் ஹக்கீமின் இந்த முடிவினை சரணாகதி நிலையென்றும் கூறலாம். இதற்கு முதல் பாராளுமன்ற உறுப்பினர்களினதும், தமது தேவைக்காகவும் ஆட்சியாளர்களிடம் சரணாகதி அரசியலை மேற்கொண்டு வந்த ரவூப் ஹக்கீம், தற்போது தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சரணாகதி அடைந்துள்ளார்.
இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்று அரசாங்கத்துடன் சரணாகதி அரசியலை மேற்கொள்வதில் உறுதியாக உள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் வழிகாட்டலின் கீழே முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைமை வகித்துக் கொண்டிருக்கும் ஹாபிஸ் நசீர் அஹமட் எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களினதும், அதிகார தரப்பினரதும் ஆசிர்வாதத்துடன் கட்சிக்கு தலைவராகக் கூடியதொரு சூழலையை கட்டியெழுப்புவதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகின்றது. இதனால், ஆட்சியாளர்களிடம் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சராணாகதி அடைந்து சாதிக்க நினைப்பதனை முறியடிப்பதற்கு இருக்கின்ற ஒரே வழி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சரணாகதி அடைவதனைத் தவிர வேறு வழி ரவூப் ஹக்கீமுக்கு கிடையாது.
ஆதலால், தலைவர் பதவியை பாதுகாத்துக் கொள்வதற்கு எந்த குத்துக்கரணத்திற்கும் ரவூப் ஹக்கீம் தயார் நிலையிலேயே எப்போதும் இருந்து கொண்டிருப்பவர். இதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு புதிய தலைவர் ஒருவரை நியமனம் செய்வதற்குரிய சூழ்ச்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை பிரிதொரு வேளையில் விரிவாக பார்க்கலாம்.தேசிய அமைப்பாளராக செயற்பட்ட சபீக் ரஜாப்தீன் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டதன் பின்னர் அந்தப் பதவி வெற்றியிடமாகக் காணப்பட்டது.
கட்சிக்கு தேசிய அமைப்பாளர் பதவியில் வெற்றியிடம் ஏற்பட்டால் அப்பதவியில் பிரதி தேசிய அமைப்பாளர் தற்காலிகமாக தேசிய அமைப்பாளராக செயற்படுவார். முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டிலே பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆயினும், கட்சியின் யாப்புக்கு மாற்றமாக தேசிய அமைப்பாளர் பதவியை தமது விருப்பத்திற்கு ஏற்ப, கட்சியின் செயலாளர் மற்றும் உயர்பீடத்திற்கு தெரியாமலும், அனுமதி பெறாமலும் நியமனம் செய்துள்ளமையை உயர்பீட உறுப்பினர்கள் எவரும் கேள்விக்கு உட்படுத்தவில்லை.
இதன் மூலமாக முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் எதனையும் கண்டு கொள்ளாதவர்கள் என்று அறிந்து கொள்ள முடிகின்றது. தற்போது முஸ்லிம் காங்கிரஸிற்குள் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சியாளர்களுடன் நேரடி உறவுகளை வைத்துள்ளார்கள். அவர்கள் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளார்கள்.
கட்சியின் தலைவரை விடவும் ஆட்சியாளர்களை அதிகம் நேசிக்கின்றார்கள். இதற்கு முட்டுக்கட்டை போடும் தைரியத்தை இன்றைய அரசியல் சூழலில் ரவூப் ஹக்கீம் கொண்டிருக்கவில்லை. இதனால், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்லெண்ணத்தை பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ளது.
இணைந்திருங்கள்