லத்தீப் பாரூக்

அமெரிக்கா அதன் நேச நாடுகளுக்கு சிரியாவுடன் சீரான உறவுகளைப் பேணவும் இயல்பு
நிலையை ஏற்படுத்தவும் சம்மதமும் அனுமதியும் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நேச அணியில் இருக்கும் சூடான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரேன், ஹங்கேரி, சவூதி அரேபியா, எகிப்து, லெபனான், ஜோர்தான், பல்கேரியா, கிரேக்கம், சைப்பிரஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகள் சிரியாவை பலிபீடமாக மாற்றிய பஷர் அல் அஸாத்தின் ஆட்சியுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

அடக்கி ஒடுக்கப்பட்ட, கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிரியா மக்கள் 2011ல் அரபு
எழுச்சியுடன் தங்களுக்கும் விடுதலை வேண்டும் எனக் கேட்டு அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அரசியல் சுதந்திரம், மனித கௌரவம், கண்டடி இடம்பெறும் கைதுகள் நிறுத்தப்பட வேண்டும், காலவரையின்றி தடுப்புக் காவலில் வைத்திருக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், முடிவற்ற கைதுகளும் சித்திரவதைகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பன போன்ற நியாயமான கோரிக்கைகளைத் தான் அந்த மக்கள் முன் வைத்தனர்.

ஆனால் சிரியாவின் சர்வாதிகாரி பஷர் அந்த மக்கள் மீது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழத்து விட்டு அவர்கள் வேண்டி நின்ற ஜனநாயக இயக்கத்தை நசுக்கத் தொடங்கினார். இதனை அடுத்தே சிரியாவில் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கின.

மக்கள் கண்டபடி கைது செய்யப்பட்டு அவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சப்ட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அதற்கப்பால் சாட்டை அடி, குண்டாந்தடி தாக்குதல் எனவும் நடத்தப்பட்டு அவர்களது அவயவங்கள் முறிக்கப்பட்டன. காயம் அடைந்தவர்களுக்கு மயக்க மருந்துகள் வழங்கப்படாமல் சத்திர சிகிச்சைகளும் நடத்தப்பட்டன. தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் தலை அந்த தடுப்புக் கூடங்களின் சுவர்களில் பலவந்தமாக மோதச் செய்யப்பட்டது. சித்திரவதை செய்யப்பட்டு காயம் அடைந்தவர்களுக்கு குடிக்க தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. பல ஆண்களுக்கு சிறுநீர் கழிக்க விடாமல் அவர்களது ஆண் குறியில் இறுக்கமான முடிச்சுக்கள் போடப்பட்டன. இதுவரை வெளியாகி உள்ள பல அறிக்கைகளில் இந்தக் கொடூரங்கள் பதிவாகி
உள்ளன.

இந்தச் செயற்பாடுகளின் நடுவே பஷர் சிரியாவின் பல நகரங்களையும் கிராமங்களையும் கிட்டத்தட்ட சவக்காடாக மாற்றினார். மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் அவற்றின் உள் கட்டமைப்புக்கள் மீது நடத்தப்பட்ட அர்த்தமற்ற குண்டுத் தாக்குதல்கள் அவர்களின் குடிநீர் வசதிகள் மற்றும் சுகாதாரம் உற்பட இன்னோரன்ன பல வாழ்வாதாரங்களையும் அடிப்படை வசதிகளையும் அழித்து நாசமாக்கின. இதனால் மக்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தங்களது வீடு வாசல்களைவிட்டு வெளியேறி அகதி முகாம்களில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது. பலர் அண்டை நாடுகளான துருக்கி மற்றும் லெபனான் என்பனவற்றில் உள்ள கிராமங்களுக்கு தப்பிச் சென்றனர்.

சித்திரவதைகள் மற்றும் அவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என்பன பற்றிய அச்சமூட்டும் படங்களும் காட்சிகளும் வெளிவரத் தொடங்கின. அவற்றுள் ஆஸ்பத்திரி வார்ட் ஒன்று எவ்வாறு சித்திரவதை கூடமாக மாற்றப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்ற காட்சிகள் பிரபலமானவை. இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தது.

சிரியாவில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதும் சித்திரவதை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. ஆனால் எவ்வளவு பேர் இவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள் என்ற சரியான எண்ணிக்கை எவருக்கும் தெரியாது என்று அன்றைய ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறினார்.

சிரியாவின் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கருத்துப்படி, ஒரு முறை மக்கள்; ஹொம்ஸ் நகரில் ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டிருந்த போது, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. பின்னர் அதில் காயம் அடைந்தவர்கள் இராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு சாகும் வரை சித்திரவதை செய்யப்படுவதற்கே கொண்டு செல்லப்பட்டனர்.

பஷர் அவரது கொடூரம் மிக்க தந்தை ஹாபிஸ் அல் அஸாத்தின் வழி வந்தவர். 1980களின்
ஆரம்பத்தில் அவர் ஹொம்ஸ் நகரில் சுமார் 30 ஆயிரம் சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களைக் கொன்று குவித்தவர். சிரியாவின் சனத்தொகையில் சிறுபான்மையினராக இருக்கின்ற ஷீஆ பிரிவினரே ஆட்சியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அரசியல் பொருளாதாரம் என எல்லாமே அவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. பாதிக்கப்பட்ட பெரும்பான்மை சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களே சிரியாவில் மாற்றத்தை வேண்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றவர்கள்.

இது மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 80 வீதமாகும். ஆனால் கடந்த ஆறு தசாப்தங்களாக அவர்கள் மீது அடக்குமுறையும் கொடூரங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. எனவே சிரியாவில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் ஷீஆ மற்றும் சுன்னாஹ் பிரிவினைப் பிரச்சினையும் இருக்கத்தான் செய்கின்றது. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான் பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களின் கீழ் சிரியாவில் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

இதனிடையே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் அண்மையிலஇ; சிரியாவின் பஷர் அல் ஆஸாத் ஆட்சியுடன் இயல்பு நிலையை ஏற்படுத்தவோ அல்லது இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தவோ எந்நதத் திட்டமும் கிடையாது என உரிமை கோரியுள்ளார். மற்றவர்கள் அவ்வாறு செய்வதையும் அமெரிக்கா ஊக்கவிக்காது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிரியா மக்கள் மீது அஸாத்தின் ஆட்சியில் மேற்கொள்ளப்படடுள்ள அடக்குமுறைகளையும் அநியாயங்களையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் எமது பார்வையில் அஸாத்துக்கு எந்தவிதமான சட்டரீதியான அங்கீகாரங்களும் கிடையாது எனவே இந்த வேளையில் அவருடன் உறவுகளை சீர்செய்வது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது ஒருவேளை
இந்தக் கொடுமைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டால் அமெரிக்காவிடமிருந்து அஸாத் பிரிந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டாலும் ஆச்சரிப்படத் தேவயில்லை என்பதுதான். இருந்தாலும் இதை அப்படியே பின்பற்ற ஏனைய நாடுகள் தயாராக இல்லை. அமெரிக்க நேச அணியில் உள்ள பல நாடுகள் ஏற்கனவே டமஸ்கஸ் உடன் உறவுகளை சீர் செய்ய ஆரம்பித்து விட்டன. அமெரிக்க வெள்ளை மாளிகையில் இருந்து பச்சை கொடி காட்டப்பட்டிருக்காவிட்டால் அவர்கள் அவ்வாறு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் சிரியாவுக்கான விஷேட பிரதிநிதியாகக் கடமையாற்றிய ஜேம்ஸ் ஜெப்ரி அஸாத்தின் அரசை சர்வதேச ஒழுங்கு முறையின் கீழ் ஒன்றிணைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் தொடர்பாக ஜோய்பிடன் நிர்வாகம் மௌனம் சாதிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட வேளைகளைச் செய்து வரும் ஐக்கிய அரபு அமீரகம் உற்பட ஏனைய நாடுகளை நாம் இந்த விடயத்தில் தடுக்காமல் இருக்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜோர்தான், லெபனான் ,எகிப்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் டமஸ்கஸ்ஸில் உள்ள தமது சக அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.

அரபுலக எரிவாயு குழாய் திட்டம் தெடர்பாக இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவுடன் பேச்சுவார்த்தை அல்லது வேறு வகையான பேரம் பேசல்களில் ஈடுபடும் நாடுகள் மீது கடுமையான தடைகள் அமுல் செய்யப்படும் என்ற அமெரிக்காவின் கடுமையான எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை இங்கே அவதானிக்கத் தக்கதாகும்.

தற்போது அஞ்ஞாதவாசம் இருந்து வரும் சிரியாவின் ஊடகவியலாளர் மாஹெர் ஷரபிடீன் கடந்த வாரம் அல்ஜஸீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அரபுலகோடும் சர்வதேச சமூகத்துடனும் சிரியாவை ஒருங்கிணைப்பதற்காக தற்போது மேற்கொள்ளப்படடுள்ள நடவடிக்கைகள் அமெரிக்காவால் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

சிரியா ஜனாதிபதி அஸாத் என்னதான் செய்தாலும் அவருடைய மனித உரிமை மீறல்கள்
ஒருபோதும் அமெரிக்காவுக்கு ஈடாக அமையப் போவதில்லை. மேலும் மத்திய கிழக்கிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பாகத்திலோ அமெரிக்காவால் அங்கீகாரம் அளிக்கப்படடுள்ள ஒரேயொரு கொடுங்கோல் ஆட்சியாளர் அஸாத் மட்டும் அல்ல. அரபு உலக ஆட்சியாளாகள் வளைகுடா நாடுகளின் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் உட்பட எல்லோருமே, இந்த வகைப்படுத்தலின் கீழ் தான் வருவர். அமெரிக்கா வெளி உலகில் கோரி வரும் உரிமை கோரல்களுக்கு அப்பால் தனது நல்ல நண்பர்கள் விடயத்தில் பராமுகமாகவே இருந்துள்ளது. தனது சொந்த நலன்களுக்கு அப்பால் உண்மையான ஜனநாயத்தில் அமெரிக்கா ஒருபோதும் கவனம் செலுத்தியதில்லை. உதாரணத்துக்கு எகிப்திய சர்வாதிகாரி அப்துல் பதாஹ் அல் சிசிக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு குறிப்பிடத்தக்கது.

எகிப்திய மக்கள் முதல்தடவையாக தமக்கு விருப்பமான முறையில் ஜனநாயக ரீதியாக ஒரு ஆட்சியைத் தெரிவு செய்த போது 2013ல் இராணுவப் புரட்சி மூலம் அதைக் கவிழ்த்தியவர் தான் இந்த சிசி. அமெரிக்க நிர்வாகம் இன்று வரை இதைக் கண்டு கொள்ளவே இல்லை. எகிப்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகக் கருத்து வெளியிடுவதில் கூட அமெரிக்க நிர்வாகம் கோழைத்தனமாகவே இருந்துள்ளது. அதனால் தான் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ உரிமை கோரல் எதுவாக இருப்பினும் தற்போது அஸாத்துடன் பேச்சுக்களை நடத்த தனது நேச அணிக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது என்பதை நம்பாமல் இருக்க முடியாதுள்ளது.

இதே அமெரிக்கா தான் ஜனநாயம், சுதந்திரம், மனித உரிமை என்பனவற்றின் காவலனாக தன்னை தானே கொண்டாடிக் கொண்டிருக்கின்றது. இதே அமெரிக்கா தான் அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்களின் 9.4 பில்லியன் டொலர்களை அவர்களுக்கு வழங்காமல் முடக்கி வைத்து அங்குள்ள மக்களை பட்டினியால் சாகவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றது. தலிபான் அரசு மனித உரிமைகளை நிலைநாட்டினால் தான் இந்தப் பணம் அவர்களுக்கு வழங்கப்படும் என அமெரிக்கா நிபந்தனைகள் விதிப்பதும் இங்கு வேடிக்iகாயக உள்ளது. (முற்றும்)