மலையகப் பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் அதனை இன்னும் விரிவாக அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இணையவழி ஊடாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிணக்கு குறித்த அவரது சட்ட ஆலோசனை என்ன என்பது குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கூட்டு ஒப்பந்தம் நிராகரிக்கப்படுகின்ற விடயங்களின்போது சட்ட உதவிகளைச் செய்திருக்கின்றேன். தற்போது ஆயிரம் ரூபா விவகாரத்தை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது குறித்து இன்னமும் பிரச்சினை இருக்கின்றது.
தற்போதுள்ள நிறுவனங்களை நட்டமடையச் செய்து, நிறுவனங்களைக் கொண்டு நடத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளிவிட்டு, வெளிநாட்டு நிறுவனங்களைக் குறிப்பாக சீன நாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சூழ்ச்சி நடப்பதாகவும் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இதில் எந்தளவு உண்மை இருக்கின்றது என்பது தெரியவில்லை. ஆகவே, சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாகப் பார்க்காமல் சற்று விரிவாக அணுக வேண்டும்” என்றார்.
இணைந்திருங்கள்