எம்.எஸ்.தீன் –
முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகின்றார்கள். தங்களின் சுயநலத்திற்காக எடுக்கும் முடிவுகளை சமூகத்திற்காகவே மேற்கொண்டதாக அன்று முதல் , இன்று வரை சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் ஆளுந் தரப்பினரின் அன்பினைப் பெற்றவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பொதுஜன பெரமுனவுக்கு எதிராகவே செயற்பட்டன. ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றால் முஸ்லிம்களினால் நிம்மதியாக வாழ முடியாதென்றார்கள். பொதுஜன பெரமுன அரசாங்கத்தை அமைக்குமாயின் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாதம் தலைவிரித்தாடும் என்றார்கள். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலையாக 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கும், இரட்டைப் பிரஜா உரிமைக்கும் ஆதரவாக வாக்களித்து, ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு நிறைவேற்று அதிகாரத்தை பெறுவதற்கும், பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருவதற்கும் வகை செய்தார்கள். இதனைத்’ தொடர்ந்து அரசாங்கத்தின் எல்லா செயற்பாடுகளுக்கும் ஆதரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வெற்றி கொள்வதற்காகவே அரசாங்கத்துடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மர்ஹும் அஸ்ரப் ஜனாதிபதி முறையையும், நிறைவேற்று அதிகாரத்தையும் ஆதரித்தார். அதனால்தான் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், இவர் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பதற்காகவும், பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவதற்காகவும் 19வது திருத்தச் சட்ட மூலம் கொண்டு வரப்பட்ட போது ஆதரவாக வாக்களித்தார்கள். அப்போது அஸ்ரப்பின்
கொள்கை எங்கே போனது என்று கேட்கின்றோம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்காளியாக செயற்பட்ட போது முஸ்லிம்களுக்கு பல அநீயாயங்கள் பௌத்த இனவாதிகளினால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காகவே எதிர்க்கட்சியினர் வன்முறைகளை கட்டவிழ்த்துள்ளனர் என்று மஹிந்தராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்கள். தற்போது நல்லாட்சி மோசமென்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமது கட்சியின் தலைவர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பாராளுமன்றத்தில் தான் இருக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் அரச தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்வின் போது தெரிவித்திருந்தார். என்னுடைய தலைவர் றிஷாத் பதியூதீன்தான் என்று தெரிவித்துக் கொண்டிருக்கும் முஷரப் தலைவர் பேசும் போது பாராளுமன்றத்தில் இருக்கவில்லை என்பதனூடாக அவரின் தலைமைத்துவ விசுவாசத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இவர் மட்டுமன்றி மக்கள் காங்கிரஸின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கூட்டுப் பொறுப்பையும், தலைமைத்துவ விசுவாசத்தையும் காண முடியவில்லை. கூட்டுப் பொறுப்பும், தலைமைத்துவ விசுவாசமும் தமது பசிக்கு தீனி போடாதென்று நினைக்கின்றார்கள். கடந்த காலங்களில் எல்லா அரசாங்கங்களிலும் தலைவர்கள் முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை ஆளுங் கட்சியில் இருந்தார்கள். அமைச்சர் பதவிகளை வகித்தார்கள். ஆனால், சமூகத்தின் உரிமைகளை வெற்றி கொள்ளவில்லை. முஸ்லிம்கள் இழந்த காணியில் ஒரு அங்குலத்தைக் கூட பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அன்றைய ஆட்சியில் இரு முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு கட்டாயத் தேவை ஆட்சியாளர்களுக்கு இருந்தது. அன்று சாதிக்க முடியாதவற்றை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இன்றைய ஆட்சியில் முஸ்லிம்களின் உரிமைகளை வெற்றி கொள்ளப் போவதாகவும், பொத்துவில் முகுது மகாவிகாரை காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப் போவதாகவும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதனிடையே அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக பௌத்த இனவாதக் கருத்துக்களையும், றிஷாத் பதியூதீன் மீது படுமோசமான வகையில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்த உதயகம்மன்விலவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். இந்த முடிவுக்குரிய அரசியல் காரணத்தை போட்டு உடைக்க முடியாதென்று எல்லாம் தெரிந்தவரைப் போன்று ஞானிக் கதைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றார். இதே வேளை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தான் கோரவில்லையென உதயகம்மன்வில தெரிவித்துள்ளார்.
இதே வேளை, 20வது திருத்தச் சட்ட மூலத்தை ஆதரிக்கும் போது எந்தவொரு அமைச்சர் பதவிகளையும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரவில்லை. அமைச்சர் பதவி தரப்பட்டால் கூட முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்துள்ளார். ஜனாஸா அடக்கத்திற்கும் நாங்களே பொறுப்பு என்றும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 20வது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கூட கொவிற் தொற்றால் மரணித்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டன.
அரசாங்கம் கொவிற் தொற்றால் பல பின்னடைவுகளைக் கண்டுள்ளது. பொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளன. பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் பொதுஜன பெரமுன இறங்கு முகமாகிக் கொண்டிருக்கின்றது. இத்தகையதொரு சூழலில் முஸ்லிம் காங்கிரஸினதும், மக்கள் காங்கிரஸினதும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி தமது செல்வாக்கை இன்னும் மழுங்கடிக்கச் செய்வதற்கு ஆட்சியாளர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள். ஆதலால், அமைச்சர் பதவி கிடைக்காது என்பது உறுதியான நிலையில்தான் தாங்கள் அமைச்சர் பதவியை தந்தால் கூட ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் பெற்றுக் கொண்ட அமைச்சர் பதவிகளினால் சாதிக்க முடியாதவர்கள், இன்றைய ஆட்சிக்கு ஆதரவாக இருந்து கொண்டு வானம் ஏறி வைகுண்டம் போகப்போவதாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றாhகள்.
இதே வேளை, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கியதாகவும், அதனால்தான் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக்கை தேசிய அமைப்பாளர் பதவிக்கு நியமனம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ரவூப் ஹக்கீமின் இந்த நிலைப்பாடு குறித்து விமர்சனம் உள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் தவறு செய்திருந்தால் தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்குமா என்று ஹரீஸ் கேட்டுள்ளார். இதன் மூலமாக தலைவரின் கருத்தை அவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.
மர்ஹும் அஸ்ரப்பின் எத்தனையோ சமூகம் சார்ந்த கொள்கைகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தாம் ஆதரவு வழங்கிய 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு அஸ்ரப்பை சாட்சிக்கு அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். கரையோர மாவட்டக் கோரிக்கையை அஸ்ரப் முன் வைத்தார்.
அதனைப் பற்றி பேசுவதில்லை. முஸ்லிம்கள் இழந்த காணிகளை மீட்க வேண்டுமென்று அஸ்ரப் தெரிவித்தார். காணிப் பிரச்சினைகள் பற்றி வாய் திறப்பதில்லை. அரசியல் தீர்வில் முஸ்லிம்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டுமென்று அஸ்ரப் தெரிவித்தார்.
ஆனால் எந்தவொரு முஸ்லிம் கட்சியிடமும் அரசியல் தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாடு பற்றிய திட்டவரைவு கிடையாது. அஸ்ரப்பினால் வரையப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் யாப்பில் ஆயிரத்தெட்டு மாற்றங்கள் உரிமை அரசியலை இணக்க அரசியலுக்குள் புதைத்துள்ளார்கள்.
இவ்வாறு அஸ்ரப்பின் கொள்கைகளை மறந்து விட்டு அவரின் கொள்கையை பாதுகாத்துக் கொள்வதற்காகவே 20வது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கினோம் என்று சொல்லிக் கொண்டிருப்பது வேடிக்கையாகும்.
அதே வேளை அஸ்ரப்பின் கொள்கைகள் யாவும் நூறு வீதம் சரியாதென்று சொல்லுவதற்கில்லை. ஆனால், அஸ்ரப்பின் கொள்கைக்காகவே அரசியல் செய்கின்றோம் என்று சொல்லுவதற்கு யாருக்கும் அருகதையில்லை
இணைந்திருங்கள்