அரசியல், பொருளாதாரம், சுகாதாரம், சமூக அடிப்படைகளில், நாடு பெரும் நெருக்கடிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கு, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் மட்டுமே காரணம் என்ற ஒரு தோற்றப்பாட்டைக் கட்டமைக்கவே ஆட்சியாளர்கள் பிரயத்தனப்படுகின்றனர். ஆனால் கூர்ந்து, விசாலமான பார்வையுடன் நோக்கினால், கொரோனா வைரஸூக்கும் அப்பாலான காரணங்கள் பல இருப்பதைக் காணலாம்.
குறிப்பாக, இன்று ஏற்பட்டுள்ள மக்கள் மீதான சுமைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண முற்படாத அரசியல் போக்கானது, ஒரு முட்டுச் சந்தை நோக்கி, நாடு சென்று கொண்டிருக்கின்றது எனலாம்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய ஒரு கற்பனைக் கோட்டையை, மக்கள் மனங்களில் கட்டிவிட்டு, ஆட்சிபீடம் ஏறியவர்கள், சவால்களைத் தோற்கடிப்பதில் வெற்றியடையவில்லை என்பதை, சிங்கள மக்களும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
உலக ஒழுங்கில், அரசியல் குழப்பங்கள் புதுமையானவை அல்ல. அதுபோல, கொரோனா வைரஸ் பரவலால் உருவான பொருளாதார வீழ்ச்சியையும், சமகாலத்தில் உலக நாடுகள் பல அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த வரிசையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள சமகால சவால்களை வெற்றி கொள்ள, ஆட்சியாளர்கள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, எடுத்த எடுப்பில் கூறி விட முடியாது.
ஆயினும், சில நடவடிக்கைகள், காத்திரமானவையாக இருக்கவில்லை; இன்னும் சில நகர்வுகள், காலப் பொருத்தம் இல்லாதவையாக அமைந்துள்ளன. மறுபுறத்தில், மக்களின் மீதான சுமைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவே, இன்று பரவலாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனமாகும்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்துதல், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுதல், நாட்டை முடக்குதல் (காலம் பிந்தியேனும்) போன்ற குறிப்பிடத்தக்க முன்னெடுப்புகளை அரசாங்கம் செய்தது.
ஆனால், வைரஸை கட்டுப்படுத்துவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியிருக்க வேண்டிய ஒரு காலப்பகுதியில் அரசாங்கமானது, ‘தமக்கு வேண்டியவற்றை’ செய்து கொள்ளும் அரசியல் நகர்வுகள் பலவற்றில் கவனத்தைச் சிதறவிட்டது.
முன்னதாக, பெரும்பான்மை ஆணையை வேண்டி நின்ற அரசாங்கம், அரசியலமைப்பில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்து, “அதிகாரத்தை மேம்படுத்தினால் பிரச்சினைகள் தீரும்” என்றது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருந்த சூழ்நிலையில், 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், நாட்டில் உள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு, பசில் செயற்பாட்டு அரசியலுக்குள், வரவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள்; அதுவும் நடந்தேறியது. இவ்வாறு, சர்வ அதிகாரத்துடன் கூடிய ஆளுகைக்காக, தமக்குத் தேவைப்பட்ட ஏற்பாடுகள் எல்லாவற்றையும் அரசாங்கம் செய்து முடித்தது. ஆயினும், மக்களின் பிரச்சினைகள்தான் தீர்ந்தபாடில்லை. மாறாக, நெருக்கடிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இவற்றில், வாழ்க்கைச் சுமை முக்கியமானதாகும்.
கொரோனா வைரஸ் தொற்றாளரும், மரணிப்போரும் அதிகரித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கூறிவந்தனர். அப்போதெல்லாம் அரசாங்கம், தெளிவான காரணம் ஒன்றைக் கூறிவந்தது. “நாட்டை முழுமையாகச் சில வாரங்களுக்கு மூடினால், தினக்கூலித் தொழில் செய்கின்றவர்களும் ஏழைகளும் பாதிக்கப்படுவார்கள்” என்றது.
இது நிதர்சனமானதே! நாட்டில், பொது முடக்கமொன்றை அறிவித்தால், அதனால் ஒரு குறிப்பிட்டளவான மக்கள், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்குத் தொழில் இன்றி, பொருளாதார ரீதியாகக் கடுமையாக திண்டாட வேண்டிய நிலை ஏற்படும்.
இதனை யாரும் மறுக்கவியலாது. ஆயினும், அதையும் தாண்டி, பொது முடக்கமொன்றை மேற்கொண்டு, உயிர்களைக் காக்க வேண்டிய நிர்ப்பந்தம், அரசாங்கத்துக்கு எடுத்துக் கூறப்பட்டு, அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டமையாலேயே தற்போதைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மக்களின் வாழ்க்கைச் செலவு பற்றியும் நாளாந்த உழைப்பை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரம் பற்றியும் அரசாங்கம் பெரிதும் கவலைப்படுவதாகச் சொல்கின்ற போதிலும், நிஜத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கே வழிகோலி இருக்கின்றது.
உண்மையில், அரசாங்கம் இக் காலப்பகுதியில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கியிருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அதிகரிக்காமல் பேண வேண்டிய தார்மீகப் பொறுப்பும் அரசாங்கத்துக்கு இருந்தது. இருப்பினும், அதை அரசாங்கம் சரிவர நிறைவேற்றியதாகத் சொல்ல முடியாது.
கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருந்த வேளையிலேயே, கணிசமான தொகையால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. “பசில் அமைச்சரானால் அதைக் குறைப்பார்” என்றார்கள். அது நடக்கவில்லை. பின்னர், பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்ததுடன், தட்டுப்பாடும் ஏற்பட்டது.
பால்மாக்கள், சமையல் எரிவாயு போன்றவற்றுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சீனி, அரிசி உள்ளிட்ட பல பொருட்களின் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளன. ‘நாட்டில் பொருட்களுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை’ என்று, கொழும்பில் இருந்து, அமைச்சர்கள் அறிக்கை விடலாம். அது, அவ்வளவு கடினமான காரியமன்று.
ஆனால், இவ்வாறான அத்தியாவசியப் பொருட்களை, கடைகளில் பெற்றுக் கொள்ள முடியாத நிலையே யதார்த்தமாக உள்ளது. சில வர்த்தகர்கள், பொருட்களைப் பதுக்கி வைத்து, விலையை அதிகரித்து, கொள்ளை இலாபம் பார்க்கின்றார்கள்.
பருப்பையும், பால்மாவையும்தான் நாம் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், மறுபுறத்தில் இவ்வாறான உணவல்லாத அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகளும் கணிசமான தொகையால் அடிக்கடி அதிகரிக்கப்படுவதை அலட்டிக் கொள்வதில்லை.
எப்.எம்.சி.ஜி வகையான அன்றாடப் பாவனைப் பொருட்களான பிஸ்கட், பற்பசை, சவர்க்காரம், தேயிலைத் தூள், சலவைத் தூள், அழகுசார் நறுமணத் திரவியங்கள் என ஏகப்பட்ட பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடிக்கடி விலையை ஏற்றிக் கொண்டே செல்கின்றன.
இதன்மூலம், சம்பந்தப்பட்ட பல்தேசியக் கம்பனிகள், மக்களின் கண்களைக் கட்டிவிட்டு பகற்கொள்ளையடிக்கின்றன. இவை, அத்தியாவசியப் பொருட்கள் இல்லை என்பதாலும், விலைச் சுட்டெண்ணில் தாக்கம் செலுத்தாத உற்பத்திகள் என்பதாலும் அரசாங்கம் இதைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவும் இல்லை. இந்நிலையில், தற்போது பேக்கரி உற்பத்திகளின் விலையும் அதிகரித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்தமையால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான (ஆண்டுக்கு-ஆண்டு) பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஆனால், விலைச்சுட்டெண்ணுக்காக கருத்திற் கொள்ளப்படும் ‘பொருட்களின் கூடையில்’ உள்ளடங்காத உற்பத்திகளையும் கணக்கிலெடுத்தால் பணவீக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
நாட்டை முடக்கினால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அரசாங்கம் உண்மையிலேயே கரிசனை கொண்டுள்ளது என்றால், இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்படுவதை எவ்வகையிலேனும் தடுத்திருக்க வேண்டும். அவ்வாறு பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியிருந்தால், நாட்டை மூடினால் கூட, கணிசமான மக்கள் சமாளித்துக் கொள்வார்கள்.
எவ்வாறிருப்பினும், மக்களுக்கு மானியங்கள் வழங்க வேண்டிய ஒரு காலப்பகுதியில், விலை அதிகரிப்புக்கு இடமளித்துள்ளமை மிக மோசமான நிலைமையாகும். இது பொதுவாக, இந்த ஆட்சி பற்றிய ஒரு அதிருப்தியை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பு என்பது, சாதாரண மக்களிடையே பெரும் மனவிரக்தியை ஏற்படுத்தக் கூடிய ஒரு கருவியாகும். அண்மைக் காலங்களில், சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்களில் இருந்து இதைப் புரிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பரவலுக்கு புறம்பான, ஏனைய நெருக்கடிகள், மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கின்ற நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.
கார் இறக்குமதியைத் தடை செய்வதால், கடனட்டைக் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம், நாட்டின் டொலர் நெருக்கடியை சீர்செய்ய அரசாங்கம் முயற்சிப்பதில் தவறில்லை. ஆயினும், பொருட்களின் விலை அதிகரிப்பும் கூட பொருளாதாரத்திலும் அரசியலிலும் பாரதூரமான தாக்கத்தை செலுத்தும் என்பதை மறந்து விடக் கூடாது.
கொரோனா வைரஸ் நெருக்கடிக்குள், இதையெல்லாம் மக்கள் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்; நாம் அடுத்த தேர்தலுக்கு இடையில் விலையைக் குறைத்து, எல்லாவற்றையும் சரிப்படுத்தி விடலாம் என்று அரசாங்கம் நினைத்திருந்தால், அந்த நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இணைந்திருங்கள்