எம்.எஸ்.தீன் –

முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதில் காலத்திற்கு காலம் பௌத்த இனவாதிகள் முயற்சிகளை எடுத்துள்ளார்கள். நாட்டில் முக்குவர் சட்டம், கண்டிய சட்டம் தேசவழமைச் சட்டம் என சிங்கள மக்கள் சார்பாகவும், தமிழர்கள் சார்பாக தனியார் சட்டங்கள் உள்ள போதிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் இல்லாமல் செய்ய வேண்டுமென்று பௌத்த இனவாதிகளினால் முன் வைக்கப்படும்; கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாயில்லை.

முஸ்லிம் தனியார் சட்டத்தை மாத்திரம் முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டுமென்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் அதனை ஒரு இனவாத நடவடிக்கையாகவே அமையும். இலங்கையின் அரசியல் யாப்பின் பிரகாரம் நாட்டுப் பிரஜை ஒருவர் தாம் விரும்பும் மதத்தையும், அதன் கலாசாரங்களையும் பின்பற்றி நடக்கவும், அதற்கு அமைய தமது வாழ்வு முறையை அமைத்துக் கொள்வதற்கும் உரிமையுண்டு.

ஆதலால், முஸ்லிம் தனியார் சட்டமும் இதன் அடிப்படையில் அரசியல் யாப்புக்கு உட்பட வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி தனியார் சட்டங்கள் யாவும் அந்நியரின் ஆட்சிக்காலம் முதல் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை, காதி நீதிமன்ற முறையை இல்லாமல் செய்வதற்கும், முஸ்லிம் விவாக மற்றும் விவகாரத்து சட்டத்தில் சில பிரிவுகளை இல்லாமல் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கைக்கு அமைவாக எல்லோருக்கும் ஒரே சட்டம் என்பது அமுல்படுத்தப்படவுள்ளது. காதிநீதிமன்ற நடவடிக்கைகளில் குறைபாடுகள் உள்ளன. பொருத்தமற்றவர்கள் காதிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய குறைபாடுகளை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காது, காதிநீதிமன்றங்களை முற்றாக இல்லாமல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பது முறையான நடவடிக்கையாக அமையவில்லை.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்தில் உள்ள நீதி அமைச்சர் அலிசப்ரி உட்பட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் வாய்திறக்க முடியாதவர்களாக ஒப்புதல் அளித்துள்ளார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாதென்று கூட நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜனபெரவின் தலைமையில் ஆட்சி அமைந்தால் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை இல்லாமல் செய்வார்கள்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையில் பௌத்த இனவாதிகளின் மேலாதிக்கத்தை முஸ்லிம்களின் மீது திணிப்பார்கள் என்று பொதுஜனபெரமுனவின் ஆட்சியைப் பற்றி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வெற்றிவாகை சூடிக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸினதும், மக்கள் காங்கிரஸினதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் ஆட்காட்டி விரலுக்கு இயங்குகின்றவர்களாகவும், அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் சட்ட மூலங்களுக்கு ஆதரவு வழங்குகின்றவர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களின் உரிமைகளை வெற்றி கொள்வதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று பகிரங்கமாக அறிவித்தவர்கள் இதுவரைக்கும் முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுத்த உரிமைகள் என்று எதுவுமில்லை. இக்கட்சிகளின் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே எந்தவொரு கொள்கைப் பிடிப்பும் கிடையாது.

தலைவர்கள் ஒரு திசையிலும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னுமொரு திசையிலும் சென்று கொண்டிருக்கின்றார்கள். விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்பது போல் மனட்சியின் படி வாக்களிக்கச் சொன்னதாக புத்தளத்தில் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஆக, மொத்தத்தில் இந்த விவகாரத்தில் அரசாங்கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் இயலாமையை இன்னுமொரு தடவை நிருபித்துள்ளார்கள்.அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள மேற்படி நடவடிக்கைகளினால் முஸ்லிம்களுக்கு நன்மையா அல்லது தீமையா என்று ஒரு விளக்கத்தைக் கூட கொடுக்க முடியாதவர்களாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொம்மைகள் போன்று வீற்றிருக்கின்றார்கள்.

காதி நீதிமன்றங்கள் முஸ்லிம்களின் விவாகரத்து விவகாரங்களை முஸ்லிம்களின் கலாசாரத்தின் அடிப்படையில் கையாண்டு வருகின்றது. ஆயினும், அதன் நடைமுறையிலும், காதிகள் தெரிவு விடயங்களிலும் குறைபாடுகள் உள்ளன. அக்குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். அதற்காக காதி நீதிமன்றத்தை இல்லாமல் செய்ய முடியாது. அதனை இல்லாமல் செய்ய வேண்டுமாயின் பொதுச் சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

முஸ்லிம்களின் விவாகரத்து மற்றும் விவாக விடயங்களை முஸ்லிம்களின் கலாசாரத்தின் அடிப்படையில் தீர்க்க வேண்டும். அது அவர்களின் மதநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளன. அதன்படி தீர்வு கிடைக்க வேண்டுமென்று முஸ்லிம்கள் கோரிக்கை முன் வைப்பது அவர்களின் உரிமையுமாகும்.நாட்டில் உள்ள ஏனைய விவகாரங்களில் உள்ள குறைபாடுகள் போன்று காதிநீதிமன்றத்துடன் தொடர்புடைய விடங்களிலும் குறைபாடுகள் உள்ளன என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அரசாங்கத்தினால் காதிமார்களுக்கு விசேட பயிற்சிகள் எதுவும் நாம் அறிந்தவகையில் வழங்கப்படுவதில்லை. பொதுவாக காதியாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற அரசாங்கத் உத்தியோகத்தர்களாகவும், மௌலவிமார்களாகவுமே இருக்கின்றார்கள். காதிமார்கள் நற்குணம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இஸ்லாமிய விவகாரங்களில் அறிவுடையவராக இருக்க வேண்டுமென்று நிபந்தனைகள் இருந்தாலும், மிகவும் கூடுதலாக அரசியல் செல்வாக்கு உள்ளவர்களே காதிகளாக தெரிவு செய்யப்படுகின்றார்கள். இதற்கு முஸ்லிம்கள் பொறுப்பல்ல.

ஆட்சியாளர்குளும், முஸ்லிம் அமைச்சர்களும்தான் பெர்றுப்புக் கூற வேண்டும். இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றவர்களில் பலர் முறைகேடாக நடந்த சம்பவங்களும் உள்ளன. இத்தகைய முறைகேடுகள் காதிநீதிமன்ற நடைமுறையில் மாத்திரமல்ல ஏனைய துறைகளிலும் நடந்துள்ளன. முறைகேடுகளும், குiறாபடுகளும் உள்ளதற்காக காதிநீதிமன்றத்தை இல்லாமல் செய்ய வேண்டுமென்று முடிவு செய்தால், நாட்டில் உள்ள ஏனைய துறைகளையும் இல்லாமல் செய்ய வேண்டும் அல்லவா?முஸ்லிம்களின் விவாக மற்றும் விவகாரத்துச் சட்டங்களை இல்லாமல் செய்ய வேண்டுமென்று பௌத்த இனவாதிகள் முதல் பிறர்களினாலும் 1956ஆம் ஆண்டு முதல் பேசுபொருளாக இருந்து கொண்டு வருகின்றது. இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முஸ்லிம்களை என்றுமில்லாதவாறு மௌனிக்கச் செய்துள்ளன.

பச்சைச்சுயநலவாதிகள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் கடந்த காலங்களும், நிகழ்காலமும் சரியாகயில்லை. இவர்களினால் பல தடவைகள் முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டாலும் உணர்வுகள் பெறாக மரக்கட்டைகள் போன்றே முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் மத்தியில் உள்ள எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதிக்கும் சமூகத்திற்காக உழைத்துள்ளாக நிமிர்ந்து பேச முடியாதவாறே அவர்களின் அரசியல் பக்கங்களில் பல இடங்களில் கறைகள் படிந்துள்ளன. அவர்களுக்கு அரசநீதியும் தெரியாது. சமூகநீதியும் தெரியாது.

அவர்கள் பேரினவாதக் கட்சித் தலைவர்கள் சொல்லும் (அ)நீதியை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்.அரசியல்வாதிகள் போன்றே முஸ்லிம்களின் கலாசார விவகாரங்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புக்களும் இருந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில நேரங்களில் கருத்துக்களை வெளியிட்டாலும் அக்கருத்துக்களின் பின்னால் அவர்களின் அச்ச உணர்வே வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஒரு சில புத்திஜீவிகள் இப்போதுதான் முஸ்லிம் விவாக, விவாகரத்துக்களின் கொண்டுவரபடவுள்ள மாற்றங்கள் குறித்து விளிப்படைந்துள்ளார்கள். இந்த விவகாரம் ஆங்காங்கே பேசப்பட்ட போதும், தேர்தல் காலங்களில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று கூறிய கட்சியினர் ஆட்சியில் அமர்ந்து கொண்ட போதும் எதுவும் நடக்காது என்றிருந்தார்கள். அவற்றை தேர்தல் கால கோசங்களாகப் பார்த்தார்களே அல்லாமல் தெற்கில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் விரோதப் போக்கும், பௌத்த இனவாத சிந்தனையின் ஆதிக்கத்தையும், ஆட்சியாளர்களின் மனப்போக்கையும் புரிந்து கொண்டு, எதிர்காலத்திற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இது புத்திஜீவிகளுக்கு உகந்தல்ல.இதே வேளை, பலதார திருமணத்தை தடை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. பலதார திருமணத்திற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளது. ஆனால், அதற்கு இஸ்லாம் வரையறைகளையும், நிபந்தனைகளையும் விதித்துள்ளன. ஆனால், பலதார திருமணத்தினால் பெண்கள் ஏமாற்றப்படுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தகுதியற்றவர்கள் கூட பலதார திருமணம் செய்துள்ளார்கள். ஆதலால், இதனை துஸ்பிரயோகம் என்றும் கூறலாம். ஆதலால், பலதார திருமணத்தை முற்றாக தடை செய்வதென்பது இஸ்லாத்திற்கு எதிரானது.

ஆதலால், பலதார திருமணத்திற்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டும்.18 வயத்திற்கு மேற்பட்டவர்கள்தான் திருமணம் செய்ய வேண்டுமென்பது இன்றைய நவீன போக்குக்கும், இளவயது திருமணங்களில் ஏற்படும் பிரச்சினைகள், அதிகரித்துக் கொண்டு வரும் விவாகரத்துக்கள் போன்றவைகளினாலும், கட்டாயக் கல்வி முறை நாட்டில் அமுலில் உள்ளபடியாலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் திருமணம் முடிக்க வேண்டுமென்பதும், மணமகள் திருமண பதிவில் ஒப்பமிட வேண்டுமென்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றன.

மேலும், அரசாங்கம் முன் வைத்துள்ள எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டுமென்றோ அல்லது ஆதரிக்க வேண்டுமென்றோ முடிவு கொள்ளக் கூடாது. முஸ்லிம் சமூகத்திற்கு தீங்கில்லாத மாற்றங்களை ஏற்றுக் கொள்வதற்கும், தீங்கு ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை எதிர்த்துவாதிடமும், அவற்றை தடுத்து நிறுத்தவும் நெஞ்சுரம் கொண்டிருப்பது மக்கள் பிரதிநிதிகளுக்கும், சமூக அமைப்புக்களின் தலைவர்களுக்கும் அவசியமாகும். ஆனால், முஸ்லிம் தலைவர்களோ குட்டக்குட்ட குனிந்து கொண்டே இருக்கின்றார்கள்.