பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2012 ஆ ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைக்கேடாக நிதியுதவிகளை பெற்றுக்கொண்டமை தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நிக்கோலஸ் சர்கோஸி 2007 ஆம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பிரான்ஸ் ஜனாதிபதியாகப் பதவி வகித்தார்.

இந்நிலையில், 2012ம் ஆண்டு நடந்த தேர்தலுக்கான பிரசாரத்தின்போது, முறைக்கேடாக நிதியுதவிகளை பெற்றுக்கொண்டதாக அவருக்கு பாரீஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த சர்கோஸி, தேர்தல் பிரசார குழுவினரின் நடவடிக்கைகளிலோ, பணம் செலவு செய்யும் விவகாரத்திலோ தான் தலையிடவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பை இன்று வழங்கிய நீதிமன்றம், சர்கோஸிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

ஆயினும், அவர் தமக்கு எதிரான தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீடு செய்ய உள்ளதால், தண்டனை நிறுத்திவைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

சர்கோஸிக்கு, சிறை தண்டனை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

ஊழல் வழக்கொன்றில், கடந்த மார்ச் மாதம் அவருக்கு எதிராக நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.