அமைச்சர்கள், அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabaya rajapaksa) தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி,

எதிர்வரும் நவம்பர் மாதம் 12ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ம் திகதி வரையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நவம்பர் மாதம் 12ம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன், அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்தக் காலப் பகுதியில் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவன பிரதானிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் இது தொடர்பில் விசேட சுற்று நிருபம் ஒன்று மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து சிறந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரபூர்வமாகவோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.