இழுவை வலை தடைச் சட்டத்தினை உருவாக்கியதாக தெரிவிக்கின்றவர்கள், அந்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்தாமல் இருந்தது எதற்காக என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லை தாண்டிய அத்துமீறிய சட்டவிரோத தொழில்முறைக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இழுவை வலை தடைச் சட்டம் பயன்படுத்தப்படாமையினாலேயே இந்தியக் கடற்றொழிலாளர் அதிகளவில் எல்லை தாண்டி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர்,

குறித்த சட்டத்தினை உருவாக்கியபோது, மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக ஈ.பி.டி.பி. கடசியும் ஆதரவளித்திருந்தமையை சுட்டிக்காட்டினார்.

மேலும், தம்மால் உருவாக்கப்பட்ட ஆட்சிக் காலத்தில் குறித்த சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவிக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள், தமது ஆட்சிக் காலத்தில் இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தினை பிரயோகிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் இழுவை வலைச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் சுமார் 100 இற்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்ட போதிலும், அவைக்கு எதிராக இழுவை வலைத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

எனினும், தற்போது குறித்த சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில், தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும் இணைந்து முல்லைத் தீவில் இருந்து பருத்திதுறை வரை மேற்கொண்ட கடற் பயணம் தொடர்பாக அலட்டிக் கொள்ளவில்லை எனவும் அது தோல்வியில் முடிவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.