அமெரிக்காப் போன்று இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், இலங்கையில் அப்பாவி ஈழத்தமிழர்கள் 19 பேரை படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஜனாதிபதி கோத்தபயா ராஜபக்ஸவால் மன்னிக்கப்பட்ட சிங்கள ராணுவ அதிகாரிகள் சந்தன ஹெட்டியாராச்சி, சுனில் ரத்னாயக ஆகியோர் அமெரிக்காவில் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

மனித உரிமைகளை மதிக்காதவர்கள், போர்க்குற்றங்களை செய்தவர்கள் உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது தான் பொது விதி. ஒரு நாடு மனித உரிமையை மதிக்கிறது; பாதிக்கப்பட்ட சமூகத்தின் பக்கம் நிற்கிறது என்பதற்கு அது தான் அடையாளம். அதை அமெரிக்கா சரியாக செய்திருக்கிறது.


இந்த நிலையில், இலங்கையில் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தியாவுக்கு விருந்தினர்களாக வந்து செல்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும்! இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களில் இலங்கை ராணுவ வீரர்கள் ஈடுபட்டதையும் சர்வதேச ஊடகங்கள், சர்வதேச மனித உரிமைகள் அம்பலப்படுத்தி இருந்தன.

இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து விசாரணை நடத்த வலியுறுத்தியது. ஆனால் இலங்கை தலைவர்கள் இதுவரை அப்படியான எந்த ஒரு விசாரணையையும் நடத்தவில்லை. உலகத் தமிழர்களும் போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
இதன் விளைவாக கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தற்போது மேலும் 2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துக்கு காரணமான இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி, 8 தமிழர்களை படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல இந்தியாவுக்குள் இலங்கை போர்க்குற்றவாளிகள் நுழைய தடை விதிக்கப்பட வேண்டும் என்பதும் இந்தியத் தமிழர்கள் பலரது கோரிக்கையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.