கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும், ஆலோசனையும் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் விரைவில் கண்டி சென்று, மகாநாயக்க தேரர்களை சந்திப்பார்களென கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரச கூட்டணியில் அங்கம் வகித்தாலும், அரசின் செயற்பாடுகளை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கடுமையாக விமர்சித்துவருகின்றது. இதனால் மொட்டு கட்சிக்கும், சுதந்திரக்கட்சியினருக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது.

அரசுக்குள் இருந்துகொண்டு, சலுகைகளை அனுபவித்தபடி விமர்சிப்பதைவிட, கௌரவமாக வெளியேறுங்கள் என சுதந்திரக்கட்சியினருககு மொட்டு கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் புதியதொரு கூட்டணியை கட்டியெழுப்புவதில் சுதந்திரக்கட்சியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சுதந்திரக்கட்சிக்குள்ளும் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மகநாயக்க தேரர்களை சந்தித்து, ஆலோசனை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் விரைவில் முடிவொன்ற எடுக்கவுள்ளார். அதற்காகவே அமைச்சரவை மறுசீரமைப்பைக்கூட அவர் பிற்போட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.