நேட்டோ (North Atlantic Treaty Organization – NATO) ராணுவக் கூட்டணி (வடஅட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு) என்பது அமெரிக்கா தலைமையில் செயல்படும் பல்வேறு நாடுகளின் ராணுவக் கூட்டணி ஆகும். இது ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தைச் சேர்ந்த சில நாடுகளின் ஜனநாயக அமைப்பு அல்ல. மாறாக  1949ல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை அணிதிரட்டும் நோக்கத்துடன் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட ராணுவக் கூட்டணி ஆகும். இதில் தற்போது 28 ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 30 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்த உலகில் நடத்தாத அட்டூழியம் இல்லை. அமெரிக்க அரசின் நாசகர உளவு அமைப் பான சிஐஏ பல நாடுகளில் குழப்பம் விளைவிக்கும். அதைத் தொடர்ந்து அங்கு நேட்டோ  ராணுவம் இறக்கப்பட்டு ஏகாதிபத்தியத்தின் கொடூர வேட்டை நடக்கும்.

ஆனால் சோவியத் ஒன்றியம் 1950களிலேயே நேட்டோ ராணுவத்தை தனது எல்லைக்குள் நுழையவிடாமல் தடுத்தது. அப்போதைய கிழக்கு ஜெர்மனியை தாண்டி சோவியத் பிராந்தியத்திற்குள் எந்தவிதத்திலும் நேட்டோ ராணுவம் நுழையக்கூடாது, நேட்டோ அமைப்பும் விரி வாக்கம் செய்யக்கூடாது என்று ராஜீய ரீதியான மோதல்களும் எச்சரிக்கைகளும் அதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தைகளும் நடத்தப்பட்டு இறுதியில் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி நேட்டோ ராணுவம் ஜெர்மனியைத் தாண்டி ரஷ்யாவின் முன்னாள் சோவியத் குடியரசு எந்த எல்லைக்குள்ளும் வரக்கூடாது என்பதே அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் இப்போது நேட்டோவின் தலைமை நாடான அமெரிக்கா அதை அப்பட்டமாக மீறுகிறது.

முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்றான உக்ரைனில் தனது கால்களைப் பதித்து அந்த நாட்டை முற்றாக ராணுவ ரீதியாக கபளீகரம் செய்வதன் மூலம் நேரடியாக ரஷ்யாவை சுற்றி வளைப்பது என திட்டமிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் ஜனாதிபதி நஜிபுல்லாவை தலிபான்களை ஏவி கொடூரமாக படுகொலை செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம், இராக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி சதாம் உசேனை தூக்கில் தொங்கவிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், லிபியாவில் ஜனாதிபதி மும்மர் கடாபியை வெட்டி படுகொலை செய்து சாக்கடையில் வீசியெறிந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்போது – நீண்ட பல ஆண்டு காலமாக தனக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொன்றுவிடத் துடிக்கிறது. அதற்கான கொடிய போர் வியூகங்களை வகுக்கிறது. அந்த  வியூகத்தில் ஏவலாளியாக, கைப்பாவையாக சிக்கியிருக்கும் நாடுதான் உக்ரைன்.