விமல் மற்றும் உதயவின் வெளியேற்றம்நிரூபிப்பு என்கிறார் முகா – யஹியாகான் !சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து – பாராளுமன்றத்துக்கு தெரிவான தேகா தலைவர் அதாவுல்லாவால் – இனி அவ்வாறானதொரு சபையை பெற்றுத்தர முடியாது

என்பது ஊர்ஜிதமாகிவிட்டதாக முகாவின் பிரதிப் பொருளாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.சாய்ந்தமருதிலுள்ள தனது அலுவலகத்தில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே யஹியாகான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் :-2022 பெப்ரவரியில் சாய்ந்தமருது நகர சபை மலரும் என்று கூறி 9000 வாக்குகளை கபளீகரம் செய்த அதாவுல்லா – பொதுத் தேர்தலிலும் அம்மக்களின் வாக்குகளை பெற்றார். ஆனால், நகர சபை இதுவரை சாய்ந்தமருதுக்கு கிடைக்கவில்லை.

” நான் – ஜனாதிபதியின் சகபாடி என்று கூறிக்கொண்டே சாய்ந்தமருது மக்களை, இரண்டு தேர்தல்களில் ஏமாற்றினார்..

இப்போது – விமல் மற்றும் உதய கம்மன்பிலலவின் வெளியேற்றத்துடன் அதாவுல்லாவும் செல்லாக்காசாகிவிட்டார்.கோட்டாபயவை – ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்த பாடுபட்டவர்களே தூக்கி வீசப்பட்டிருக்கும் நிலையில் – அதாவுல்லாவின் கோரிக்கை ஒருபோதும் நிறைவேறாது என்பது இங்கு சிறு பிள்ளை கூட அறியாத ஒன்றல்ல.ஆக, அதாவுல்லா , இன்னும் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த முனையாமல் – சாய்ந்தமருது நகர சபை விடயத்தில் முழுமையாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

.அல்லது – தனது வெற்றிக்கு பங்களிப்பு செய்த சாய்ந்தமருது மக்களின் 9000 வாக்குகளுக்காவது – அதற்கு பரிகாரமாக தனது மிகுதி இரண்டரை வருட கால எம்பி பதவியை சாய்ந்தமருது சலீமுக்கு வழங்கி நன்றி செலுத்த வேண்டும் அதாவுல்லா.

சாய்ந்தமருதைச் சேர்ந்த – தேகா முக்கியஸ்தர் சலீமும் – அதாவுல்லாவுடன் இணைந்து , சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து வாக்குகளை பெற்று ஏமாற்றினார்.

ஆக , அதாவுல்லா தனது எம்பி பதவியை வழங்காவிட்டால் – நண்பர் சலீமும் இதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.அதைவிடுத்து , அதாவுல்லாவுக்கும் சலீமுக்கும் இதுவொரு ஆரோக்கியமான செயற்பாடாக இருக்கமாட்டாது என்பதை விட – சாய்ந்தமருது மக்களும் உங்கள் இருவர் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதை அந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதில் என்னால் உறுதியாக கூற முடியும்.

அதாவுல்லாவினால் நகர சபையை பெற்றுத் தர முடியாது – அவருக்கு அரசாங்கத்தில் பலம் இல்லை என்பது வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டவுடனேயே அறிய முடிந்தது. இதனை பல தடவை நான் கூறியும் வந்துள்ளேன்.சாய்ந்தமருது மக்கள் – தமது நகரசபை விடயத்தில் இவர்களை இனியும் நம்பவும் கூடாது – அவர்களது பசப்பு வார்த்தைகளுக்கு இனியும் ஏமாறவும் கூடாது.

அதேபோல் , சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகமும் இனியும் பள்ளிவாசல் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற முனையாது , பள்ளிவாசல் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்..

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இறைவனின் நாட்டப்படி – அதற்கான சகல முயற்சிகளையும் எடுப்பேன்.வெற்றியே கிட்டும் என்றும் யஹியாகான் தெரிவித்துள்ளார்..